Published:Updated:

`வாக்குவாதம்; முற்றுகை; தடியடி!' - திருமங்கலம் தேர்தல் கலாட்டா

தடியடி
தடியடி

4 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் தேர்தல் குறித்து எந்தப் பதிலும் சொல்லாமல் இழுத்தடித்துள்ளனர். இதனால், தவமணி மற்றும் அவரின் கணவர் முருகன் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியில் வந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வேட்பாளர் வெற்றிபெற்றதை அறிவிக்க அதிகாரிகள் தாமதித்ததால், வேட்பாளர் உட்பட உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்ததால், திருமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தடியடி
தடியடி

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தவமணி என்பவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் முனீஸ்வரியை விட 13 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத முனீஸ்வரி மற்றும் அவருடன் வந்த முகவர்கள் வெற்றி பெற்றதை அறிவிக்கக் கூடாது என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தவமணி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கும்படி கூறியதால் அதிகாரிகள் தவமணி வெற்றி அறிவிப்பை நிறுத்தி வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால், ஆத்திரமுற்ற தவமணி மற்றும் அவருடன் வந்த முகவர்கள்,`வெற்றிபெற்றதை அறிவிக்காமல் ஏன் தாமதிக்கிறீர்கள்? வேண்டுமானால் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை வைத்துக்கொள்ளுங்கள். அப்படியில்லையென்றால் நாங்கள் வெற்றிபெற்றதாக அறிவியுங்கள்' என அதிகாரிடம் முறையிட்டிருக்கிறார்கள். ஆனால், 4 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் எந்தப் பதிலும் சொல்லாமல் இழுத்தடித்துள்ளனர். இதனால், தவமணி மற்றும் அவரின் கணவர் முருகன் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியில் வந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தடியடி நடத்தும் காவல்துறையினர்
தடியடி நடத்தும் காவல்துறையினர்

இதைக்கண்ட அவரின் உறவினர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அத்துடன் எதிர் தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் மோதிக் கொண்டதால், காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இச்சம்பவத்துக்குப் பிறகு அதிகாரிகள் தவமணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு