Published:Updated:

`எங்ககிட்ட வேலையைக் காட்டுனா சும்மா இருப்போமா?' - தி.மு.கவுக்கு அதிர்ச்சிகொடுத்த பேராவூரணி அ.தி.மு.க

பேராவூரணி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 15 பேரில் 7 கவுன்சிலர்கள் மட்டுமே மறைமுக தேர்தலில் வாக்களிக்க வந்தனர். இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கவுன்சிலர்கள்
கவுன்சிலர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் மொத்தம் 15 ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் அ.தி.மு.க 7 இடங்களையும், பி.ஜே.பி ஒரு இடமும், தி.மு.க 6 மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ வான கோவிந்தராசு தனக்கு வேண்டியவருக்கு சேர்மன் பதவியைக் கொடுக்க நினைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், 13-வது வார்டில் வெற்றிபெற்ற ஒன்றியச் செயலாளரான துரை.மாணிக்கம், தனக்கு சேர்மன் பதவி வேண்டும் எனப் பிரச்னை செய்தார்.

தேர்தல்
தேர்தல்

இந்த மோதலைப் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க, அ.தி.மு.கவில் இருந்து வெற்றி பெற்ற மாலா போத்தியப்பன் என்பவரை சேர்மன் பதவி கொடுப்பதாகக் கூறி தங்கள் பக்கம் இழுத்தனர். அவரும் தி.மு.கவிற்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராகிவிட்டார். இந்தநிலையில் மாலாவிற்கு ஒன்றிய சேர்மன் பதவி, வேறு நிர்வாகிக்குத் துணை சேர்மன் பதவி என தி.மு.க நிர்வாகிகள் பேசி முடித்திருந்தனர். இது அ.தி.மு.க வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்..!- தலைவர் ரேஸில் முந்திய அ.தி.மு.க; பின்தங்கிய தி.மு.க #NowAtVikatan

இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு மறைமுகத் தேர்தல் தொடங்க இருந்தது. இந்த நிலையில் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேரும், அ.தி.மு.கவைச் சேர்ந்த மாலா ஆகியோர் மட்டுமே வாக்களிக்க வந்தனர். இதையடுத்து 7 பேர் மட்டுமே வாக்களிக்க வந்திருந்ததால் தேர்தல் அதிகாரி கமலக்கண்ணன் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

தேர்தல்
தேர்தல்

8 கவுன்சிலர்கள் வந்திருந்தால் தேர்தலை நடத்தியிருக்கலாம் பாதிக்கும் குறைவாக வந்திருப்பதால் விதிப்படி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து வாக்களிக்க வந்த கவுன்சிலர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து அ.தி.முவினர் கூறுகையில்,``முறைப்படி பேராவூரணி ஒன்றியத்தை நாங்கள்தான் பிடித்திருந்தோம். ஆனால், தி.மு.கவினர் எங்க கட்சியைச் சேர்ந்த ஒருத்தருக்கு சேர்மன் பதவி கொடுப்பதாகக் கூறி அவர்கள் பக்கம் இழுத்துக் கொண்டனர். இதனால் தி.மு.கவினர் நாங்கதான் சேர்மன் பதவியைப் பிடிக்கப் போகிறோம் எனக் கூறி வந்தனர்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

எங்க கிட்டேயே இதுபோன்ற வேலையைக் காட்டினால் நாங்க சும்மா இருப்பமா, அதான் சோழமண்டலத் தளபதியான வைத்திலிங்கம் வேலையைக் காண்பித்துவிட்டார். அதான் எங்க கவுன்சிலர்கள் யாரும் வாக்களிக்கச் செல்லவில்லை. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பேராவூரணி ஒன்றியத்தில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது எனப் பொருத்திருந்து பாருங்கள்” என்றனர்.