Published:Updated:

`785 வாக்குகளில் பதிவானது 13 வாக்குகள்!'- தேர்தலைப் புறக்கணித்து அதிரவைத்த பிச்சிவிளை

தூத்துக்குடியில் பிச்சிவிளை ஊராட்சியில் தலைவர் பதவியை பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 பேர் மட்டுமே வாக்குப்பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிச்சிவிளை வாக்குச் சாவடி
பிச்சிவிளை வாக்குச் சாவடி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்கட்டமாக தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், சாத்தான்குளம், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 8 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு 48 பேரும், 88 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 430 பேரும், 156 ஊராட்சித் தலைவர் பதவிக்கு 687 பேரும், 874 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 2,396 பேரும் என மொத்தம் 1,126 பதவிகளுக்கு 3,561 பேர் போட்டியிட்டனர். 1,14,237 ஆண்கள், 1,23,512 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 2,37,752 வாக்குகள் பதிவாயின. இது 59.43 சதவிகித வாக்குப்பதிவாகும்.

`அவரால் நமக்கு நன்மை கிடைக்கும்!’- ஊராட்சி மன்றத் தலைவர் ஏலத்தை எதிர்த்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்
பிச்சிவிளை
பிச்சிவிளை

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பிச்சிவிளை ஊராட்சியில் 6 வாா்டுகளிலும், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எழுவரைமுக்கி ஊராட்சியில் உள்ள ஒரு வாா்டு என 7 வார்டுகளில் ஒருவர் கூட வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. பிச்சுவிளை ஊராட்சித் தலைவா் பதவி சுழற்சியில் இம்முறை, பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு இரண்டு பெண்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த ஊரில், மொத்தமுள்ள 785 வாக்குகளில் 6 வாக்குகள் மட்டுமே பட்டியலின வகுப்பைச் சோ்ந்தவா்களின் வாக்குகள். இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தோ்தலைப் புறக்கணிக்கும் வகையிலும் மொத்தமுள்ள 6 ஊராட்சி உறுப்பினா் பதவிக்கும் ஒருவா் கூட வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. இதேபோல, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எழுவரைமுக்கி ஊராட்சியில் 6-வது வாா்டு பகுதியான தாய்விளை கிராம உறுப்பினா் பதவிக்கும், பகுதி ரேஷன் கடை வேண்டும் என கோரிக்கை வைத்து, ஒருவா் கூட போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்யவில்லை.

பிச்சிவிளை
பிச்சிவிளை

இந்த நிலையில், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பிச்சிவிளை ஊராட்சியில், தலைவர் பதவியை பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கிராம மக்கள், ஊர் முழுவதும் கறுப்புக்கொடி கட்டி தேர்தலைப் புறக்கணித்தனர். மொத்தமுள்ள 785 ஓட்டுகளில் 3 பெண்கள் உட்பட 13 பேர் மட்டுமே வாக்குப்பதிவு செய்தனர். இதில், 6 ஓட்டுகள் மட்டுமே பட்டியலினத்தவர்கள் ஓட்டுகள். பிச்சிவிளை ஊராட்சியில் ஏற்கெனவே 6 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு ஒருவர் கூட வேட்புமனுத் தாக்கல் செய்யாத நிலையில், இதே ஊராட்சியில் 13 பேர் மட்டுமே வாக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.