Published:Updated:

`பெட்ரோல் குண்டு; அரிவாள் வெட்டு!' தேவகோட்டையில் தி.மு.கவினர் மீது அ.தி.மு.கவினர் தாக்குதல்

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கார்
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கார்

தி.மு.க., தரப்பினர் தே.மு.தி.க., கவுன்சிலர் உதயகுமார், 2 சுயேச்சை கவுன்சிலர்கள் உட்பட 10 கவுன்சிலர்களை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புதுக்குறிச்சிக்கு அழைத்து வந்தனர்.

கமுதி கவுன்சிலர்களைக் கடத்தியதில் தி.மு.க.,வினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு 4 கார்கள் சேதமடைந்ததில் இருவருக்குக் காயம் ஏற்பட்டது. அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் தேவகோட்டை பகுதியில் பரபரப்பு. தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களைத் தவிர மற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியானது.

வெட்டுப்பட்ட நபர்
வெட்டுப்பட்ட நபர்

அரசியல் களம் ஓரளவு ஓய்வடைந்த நிலையில் மீண்டும் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்குச் சத்தமில்லாமல் தமிழகமெங்கும் பேரம் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகள் கடந்த 3ம் தேதி மாலை முழுமையாக வெளியிடப்பட்டன. இதில் மாவட்டத்தில் உள்ள 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் தி.மு.க 12 இடங்களையும் அ.தி.மு.க 5 இடங்களையும் கைப்பற்றியன. இதேபோல் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க 86, அ.தி.மு.க 54 இடங்களையும் பிடித்தன.

கமுதி அருகே மணலூர் கிராமத்தில் வார்டு எண் இரண்டில் போட்டியிட்ட வேட்பாளர்களின் ஆதரவாளர்களான சப்பானி தரப்பினருக்கும் ராமர் தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அப்போது, போலீஸார் மோதலைக் கட்டுப்படுத்தினர். இதில் காயமடைந்த நபர்கள் கமுதி மற்றும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்றது.

இந்நிலையில் ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் கவுன்சிலர் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெட்ரோல் குண்டு
பெட்ரோல் குண்டு

கமுதி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 வார்டுகளில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் தலா 7 இடங்களைக் கைப்பற்றின. மீதமுள்ள 5 இடங்களில் பா.ஜ.க, தே.மு.தி.க ஆகியவை தலா ஒரு இடம் பிடித்தன. சுயேச்சைகள் 3 இடங்களில் வென்றிருந்தனர். சுயேச்சை வேட்பாளர்கள் மூவரில் இருவர் தி.மு.கவுக்கும் ஒருவர் அ.தி.மு.கவுக்கும் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம், தே.மு.தி.க சார்பில் வெற்றிபெற்ற உதயகுமார் என்பவர் தி.மு.கவுக்கு ஆதரவளிக்க இருப்பதாகத் தெரிகிறது.

இதனால், தி.மு.க ஒன்றிய சேர்மன் பதவியைக் கைப்பற்றும். இந்தச் சூழலில் தி.மு.க., கவுன்சிலர் தமிழ்ச்செல்வியின் கணவர் போஸ் என்பவரின் யோசனைப்படி தி.மு.க., தரப்பினர் தே.மு.தி.க., கவுன்சிலர் உதயகுமார், 2 சுயேச்சை கவுன்சிலர்கள் உட்பட 10 கவுன்சிலர்களை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புதுக்குறிச்சிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து தே.மு.தி.க கவுன்சிலரை மீட்பதற்காக கமுதி அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் காளிமுத்து தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் 6 கார்களில் புதுக்குறிச்சி வந்தனர்.

அங்கு இருத்தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க., தரப்பினர் பெட்ரோல் குண்டுகளை வீசியதில் 4 கார்கள் சேதமடைந்தன. மேலும் தி.மு.க., தரப்பைச் சேர்ந்த போஸ், விஜய் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சேதமடைந்த கார்
சேதமடைந்த கார்

இச்சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீஸார் காளிமுத்து, அவரது மனைவி முத்துப்பனியம்மாள் உட்பட 48 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். மேலும், காளிமுத்து உட்பட 5 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் தேவகோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு