Published:Updated:

`வாக்குச்சீட்டை மாற்றிக்கொடுத்த அலுவலர்கள்; தேர்தல் நிறுத்தம்!' - கும்பகோணம் சலசலப்பு

கும்பகோணம் அருகே ஒரு ஊராட்சியில், வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் கவனக்குறைவாக வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டை மாற்றி வழங்கினர். இதை வாக்காளர்கள் கண்டுபிடித்துச் சொல்லவே, மதியத்துக்குமேல் தேர்தல் நிறுத்தப்பட்டது.

வாக்குச் சாவடி
வாக்குச் சாவடி ( மாதிரி புகைப்படம் )

கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மொத்தம் 6 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் வாக்காளர்கள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு மக்கள் வாக்களித்துக்கொண்டிருந்தனர்.

இங்கு காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், 8வது வார்டு மற்றும் 9 வது வார்டு வாக்காளர்களும் வார்டு உறுப்பினர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருந்தனர். இந்த வார்டுகளில் தேர்தல் அலுவலர்கள் வாக்குப் பதிவுக்கான சீட்டை ஆரம்பத்திலேயே மாற்றிக் கொடுத்துவிட்டனர்.

வாக்குச் சாவடி
வாக்குச் சாவடி
மாதிரி புகைப்படம்

வாக்காளர்களும் மாற்றிக் கொடுக்கப்பட்ட அந்தச் சீட்டிலேயே வாக்குப் பதிவும் செய்தனர். சில மணி நேரங்கள் கழித்தே வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இது தெரியவர தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர். இதன் பிறகு தேர்தல் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். ``எங்க ஊராட்சியில் 203-ம் எண் கொண்ட வாக்குச்சாவடி மையத்தில், 8 மற்றும் 9 -வது வார்டுகளுக்கான ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்வதற்காக வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டுகளை தேர்தல் அலுவலர்கள் கொடுத்தனர். இதில் எட்டாவது வார்டுக்கு 5 பேர் போட்டியிடுவதால் கட்டில், சீப்பு, கார், சாவி மற்றும் சங்குச் சின்னங்கள் கொடுக்கப்பட்டன. இதேபோல் 9-வது வார்டில் 4 பேர் மட்டுமே போட்டியிட்டதால் சங்குச் சின்னம் தவிர்த்து மற்ற 4 சின்னங்கள் வாக்குச் சீட்டில் இருந்தன.

அப்போது முறையே இரண்டு வார்டுகளுக்கும் கொடுக்க வேண்டிய வாக்குச் சீட்டுகளை அப்படியே வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்கள் மாற்றிக் கொடுத்துவிட்டனர். கிராமப்புறம், விவசாயத் தொழிலாளர்கள் என்பதால் வாக்காளர்கள் இதைக் கவனிக்காமல் வேட்பாளர்களுக்கு மாற்றுச் சின்னத்தில் வாக்களித்துள்ளனர். அதன்பிறகு வாக்காளர்கள் மற்றும் வார்டு உறுப்பினருக்குப் போட்டியிட்ட வேட்பாளர்கள் இதைக் கவனித்து தேர்தல் அலுவலர் பத்மநாபனிடம் முறையிட்டனர். உடனே அதிர்ச்சியடைந்த தேர்தல் அலுவலர்கள், என்ன சொல்வது என புரியாமல் தவித்தனர். இதையடுத்து, தேர்தலை நிறுத்த வேண்டும் என வேட்பாளர்களும் வாக்காளர்கள் சிலரும் கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

வாக்குச் சாவடி
வாக்குச் சாவடி
மாதிரி புகைப்படம்

இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பலர் வாக்குச்சாவடிக்கு வந்தனர். அவர்களிடம் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலை நிறுத்திவிட்டு மற்றொரு நாளில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என முறையிட்டனர். அதன் பின்னர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. அப்போது மீண்டும் வரும் 30-ம் தேதி ரத்து செய்யப்பட்ட தேர்தல் நடக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவருக்கு மட்டும் 8,9வது வார்டு வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களித்தனர். அதிகாரிகள் செய்த கவனக்குறைவால் அப்பகுதியில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட வேட்பாளர்களும் ஏமாற்றமடைந்தனர்.