Published:Updated:

தலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் ரூ.15 லட்சம்- கடலூரில் ஏலம்போன ஊராட்சி மன்றப் பதவிகள் #Video

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

கோவில் திருப்பணிக்காக உள்ளாட்சித் தேர்தல் பதவிகளை ஏலத்தில் விடப்பட்டிருக்கும் நிகழ்வு கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான ஊரகப் பகுதி உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 தேதிகளில் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தேர்தல்
தேர்தல்

இந்நிலையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த நடுக்குப்பம் என்ற ஊரில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியும் ஏலம் விடப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிகளை ஏலத்தில் விட்டு போட்டியின்றி தேர்வு செய்திருக்கிறார்கள் பண்ருட்டியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்து மக்கள். அந்த ஊரில் இருக்கும் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலின் கட்டுமானப் பணியின் செலவினை முழுவதுமாக ஏற்றுக்கொள்பவர்களை வெற்றிபெற வைப்பது என்று ஊர்மக்கள் ஏகமனதாக முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஏலத்தில் நடுக்குப்பம் மக்கள்
ஏலத்தில் நடுக்குப்பம் மக்கள்

அதன்படி இன்று காலை கோயிலில் நடைபெற்ற கூட்டத்தில் ஊர்மக்கள் முன்னிலையில் இந்த முடிவு கூறப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஊரின் முக்கியப் பிரமுகர்கள் அந்தப் பதவிகளை ஏலத்தில் விட்டிருக்கிறார்கள்.

அப்போது அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருவர் தாமாக முன்வந்து ரூ.50 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்கு தே.மு.தி.கவைச் சேர்ந்த ஒருவர் 15 லட்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து அவர்கள் இருவரையும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்திருக்கிறார்கள் ஊரின் முக்கியத் தலைவர்கள். சுமார் 5 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில், கோயிலில் ஊர்மக்கள் சுற்றி அமர்ந்திருக்கின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏதேனும் டவுட் இருக்கா?- நீங்க கேட்கவேண்டியது இங்கதான் #DoubtOfcommonman

அவர்கள் மத்தியில் பேசும் ஒருவர், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் நடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் கட்டுவதற்காக, நடைபெறவிருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வை சேர்ந்த ஒருவரையு மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தேமுதிகவை சேர்ந்த ஒருவரையும் நடுக்குப்பம் பொதுமக்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் திருப்பணிக்காகவும், ஊர்மக்களின் நன்மையைக் கருதியும் மேற்கண்ட இருவரையும் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது” என்று முடிக்கிறார்.

ஏலத்தின் முடிவில் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர் ஊராட்சித் தலைவர் பதவியை 50 லட்சத்திற்கும், தே.மு.தி.கவைச் சேர்ந்தவர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவியை 15 லட்சத்திற்கும் ஏலம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நடுக்குப்பம்
நடுக்குப்பம்

இதுகுறித்து விளக்கம் கேட்க மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வனைத் தொடர்புகொண்டோம். ``அரசியல் கட்சி சார்பில் ஏலம் எடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகள் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். அதனால் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் எந்தவித தயக்கமும் பயமும் இல்லாமல் போட்டியிடலாம். நடுக்குப்பம் விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறேன். அப்படி ஏலம் விடப்பட்டிருப்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

வாட்ஸ் அப்பில் வலம் வரும் வீடியோ! தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான ஊரகப் பகுதி உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 28...

Posted by Junior Vikatan on Monday, December 9, 2019
அடுத்த கட்டுரைக்கு