Published:Updated:

`தேர்தலில் மக்கள் தீர்ப்புதான் வேண்டும்!'- மீண்டும் கிளம்பும் சங்கராபுரம் உள்ளாட்சி சடுகுடு

தேவி
தேவி

நீதிமன்றம் தீர்ப்பு மக்கள் தீர்ப்பாகாது, எனவே, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு வேட்பாளருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கியதால் காரைக்குடி பகுதியே பரபரப்பு சூழ்ந்தது. அதிகாரிகள் செய்த குழப்பத்தால் சங்கராபுரம் தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

தேவி மாங்குடி
தேவி மாங்குடி

இதைத்தொடர்ந்து இந்தப் பிரச்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்குச் சென்றது. அப்போது நீதிபதிகள் `முதலாவதாக வெற்றிபெற்ற தேவி மாங்குடி வெற்றிதான் செல்லுபடியாகும். 2-வதாக வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்ட பிரியதர்ஷினி அய்யப்பனுக்கு வழங்கிய சான்றிதழ் செல்லாது என்று உத்தரவிட்டனர்.'

அதைத்தொடர்ந்து பிரியதர்ஷினி அய்யப்பன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரும்வரை சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏற்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். சங்கராபுரம் தேர்தல் தொடர்பான வழக்கு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

பிரியதர்ஷினி அய்யப்பன்
பிரியதர்ஷினி அய்யப்பன்

இந்த நிலையில், சங்கராபுரம் தேர்தலில் நீதிமன்றம் உத்தரவு யாருடைய வெற்றியை அறிவித்தாலும் அது மக்கள் தேர்வு செய்ததாக இருக்காது. அது நீதிமன்றம் முடிவாகத்தான் இருக்கும் எனவே, சங்கராபுரம் தேர்தலில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என தமிழ்நாடு மக்கள் மன்றம் கோரிக்கை விடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளது.

இது குறித்து மக்கள் மன்றத் தலைவர் ராஜ்குமார், ``சங்கராபுரம் தலைவர் பதவி ஏற்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காக இரு அணியினரும் காத்திருக்கும் வேளையில், யார் வெற்றி பெற்றதாக அறிவித்தாலும் மக்களிடையே சந்தேகத்துடன் மட்டுமே அந்த வெற்றியாளர்களை ஏற்றுக்கொள்ள நேரிடும். மக்களால் ஓட்டு போட்டு வெற்றி பெற்று ஆட்சி நடத்தினால் மட்டுமே அது மக்களாட்சி ஆகும். இப்போது நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் அது நீதிமன்றத் தீர்ப்பாகத்தான் இருக்குமே தவிர மக்களின் தீர்ப்பாக இருக்காது.

காரைக்குடியில் போஸ்டர்
காரைக்குடியில் போஸ்டர்

எனவே, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சங்கராபுரம் ஊராட்சியின் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஆனதற்கும், அந்த வெற்றி அறிவிப்பு சந்தேகத்துக்குரியதாய் ஆனதற்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையமே பொறுப்பேற்க வேண்டும். எனவே, தேர்தல் ஆணையம் தேர்தல் செலவைக் கருத்தில் கொள்ளாமல் மீண்டும் சங்கராபுரம் தொகுதியில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். அதுவே தேர்தல் ஆணையம் மீதான மக்களின் நம்பிக்கைக்கும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கும் சிறந்த வழியாகும்" என்றார்.

இது குறித்து சங்கராபுரம் வேட்பாளர் பிரியதர்ஷினி அய்யப்பன் ஆதரவாளர்கள் கூறுகையில், `முதலில் வெற்றிச் சான்றிதழ் வாங்கியதால் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், முழுமையாக ஓட்டு எண்ணப்படாத குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே, நீதிமன்றம் உத்தரவு திருப்தி அளிக்காததால் உச்சநீதிமன்றம் மேல் முறையீடு செய்துள்ளோம். உச்ச நீதிமன்றம் உத்தரவைப் பின் பற்றுவோம்" என்றனர்.

மாங்குடி
மாங்குடி

இது தொடர்பாக வேட்பாளர் தேவி தரப்பில் மாங்குடி பேசுகையில், ``உயர்நீதிமன்றம் முறையான தீர்ப்பு வழங்கியதை ஏற்றோம். இருந்தபோதிலும் எதிர் அணி மேல் முறையீடு செய்துள்ளது. தற்போது அதற்காக காத்திருக்கிறோம். நீதிமன்றம் சொல்வதைக் கண்டிப்பாகப் பின்பற்றுவோம்" என்றார்.

அதிக வாக்குகளைக் கொண்ட மிகப்பெரும் ஊராட்சி சங்கராபுரம். அதிகாரிகள் செய்த குழப்பத்தால் பதவி ஏற்பதில் குழப்பம் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு