Published:Updated:

`மொதல்ல கதவில் உள்ள பூட்டு, சாவியை எடுங்க!' -திருவையாற்றில் சின்னத்துக்காக நடந்த தர்ணா

வேட்பாளரின் கணவர் வாக்குப்பதிவு மையத்தில் இருந்துகொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான பூட்டு சாவி அங்குள்ள கதவுகளில் தொங்கிக் கொண்பிருப்பதைக் காண்பித்து வாக்கு கேட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

வாக்கு மையத்தில் தர்ணா
வாக்கு மையத்தில் தர்ணா

திருவையாறு அருகே வாக்குச் சாவடி ஒன்றில் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான பூட்டு சாவி கதவுகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதை அகற்ற வேண்டும் என வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே எதிர் வேட்பாளர் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இந்தநிலையில், திருவையாறு அருகே உள்ள நடுக்கடையில் வாக்காளர்களுக்கு 113-வது வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு கல்யாணபுரம் ஊராட்சிக்கான வாக்குப் பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது பெளசியா ஷேக் அலாவுதீன் என்ற வேட்பாளரின் கணவர் வாக்குப்பதிவு மையத்தில் இருந்துகொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான பூட்டு சாவி அங்குள்ள கதவுகளில் தொங்கிக்கொண்டிருப்பதைக் காண்பித்து வாக்காளர்களிடம் வாக்கு கேட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம்
வாக்குவாதம்

இதைக் கவனித்த எதிர் வேட்பாளரான ராபியத் பர்தானாவின் கணவர் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் தன் மனைவியுடன், எல்லா கதவுகளில் உள்ள பூட்டுகளை அகற்ற வேண்டும், மேலும் விதியை மீறி வாக்குசாவடிக்குள் நின்று வாக்கு சேகரித்த அந்த நபரையும் வெளியே அனுப்ப வேண்டும் எனக் கூறி தன் மனைவியுடன் வாக்குச் சாவடி மையத்துக்கு எதிரிலேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் பேசியும் அவர் சமாதானமாகவில்லை. இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடியது. வாக்குச் சாவடியின் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. பின்னர் ராபியத் பர்தானா கணவரின் கோரிக்கையை ஏற்று தேர்தல் அலுவலர்கள் கதவுகளில் இருந்த பூட்டை அகற்றினர்.

`மொதல்ல கதவில் உள்ள பூட்டு, சாவியை எடுங்க!' -திருவையாற்றில் சின்னத்துக்காக நடந்த தர்ணா

ஆனால், `பெளசியாவின் கணவர் பூத் கமிட்டி உறுப்பினருக்கான அடையாள அட்டை வைத்திருப்பதால் அவரை வெளியே அனுப்ப முடியாது. ஆனால், இங்கு இருந்துகொண்டு வாக்கு கேட்கக் கூடாது' என்ற கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னரே அவர்கள் தர்ணா போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதி பதற்றத்துடன் காணப்பட்டது.