Published:Updated:

போலி வாக்காளர் அட்டை; வேட்புமனு! - ஆணையத்தை அதிரவைத்த புதுக்கோட்டை வேட்பாளர்

புதுக்கோட்டை அருகே ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போலி வாக்காளர் அடையாள அட்டையைக் கொடுத்து ஆள்மாறாட்டம் செய்து வேட்புமனு தாக்கல் செய்தவரின் வேட்புமனு நீண்ட இழுபறிக்குப் பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது.

வேட்புமனு தள்ளுபடி
வேட்புமனு தள்ளுபடி

உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நடைபெற்று பரிசீலனையும் முடிந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி வார்டு, கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு 13,975 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் 13,842 நபர்களின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 112 நபர்களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மற்ற நபர்களின் பெயர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தள்ளுபடி
வேட்புமனு தள்ளுபடி

இந்நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதிக்கு ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 10 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் அரசு என்பவர் வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து அரசு அலுவலர்களை ஏமாற்றி வேட்புமனு தாக்கல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில்தான், அவரது வேட்புமனுவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், வேட்புமனு பரிசீலனையின் போது ஆள்மாறாட்டம் செய்து வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார் என்று தெரிந்தும் அரசுவின் வேட்புமனு ரத்து செய்யப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை விடுதி பகுதியைச் சேர்ந்த சிலர் ஒன்றிணைந்து மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியர் உட்படத் தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தனர்.

வேட்புமனு தள்ளுபடி
வேட்புமனு தள்ளுபடி

மேலும், அரசுவின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யவில்லை என்றால், ஊர்மக்களைத் திரட்டி மிகப்பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்தான், போலி வாக்காளர் அட்டை கொடுத்து வேட்புமனு செய்த அரசுவின் வேட்புமனுவை திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத் தேர்தல் நடத்தும் அலுவலர் வசந்தா தள்ளுபடி செய்து அறிவித்தார். இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதாவது,

``அடுத்தடுத்து வேட்புமனுக்கள் வந்ததால், ஏதோ கவனக்குறைவு காரணமாகத் தவறு நடந்துள்ளது. முறைகேடாக வேட்புமனு செய்யப்பட்டுள்ளது குறித்து அறிந்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று அந்த வேட்புமனுவினை நிராகரித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.