Published:Updated:

`முதலில் மழைநீரை வெளியேற்றுங்கள்..!'- ராமநாதபுரத்தில் நிவாரணப் பொருள்களை திருப்பி வழங்கிய மக்கள்

பொதுமக்கள், தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகக் கூறி குரல் எழுப்பினர்.

மழை நிவாரணப் பொருள்கள்
மழை நிவாரணப் பொருள்கள் ( உ.பாண்டி )

குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி, அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்களை பொதுமக்கள் திருப்பிக் கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.

மழை-கடல் கொந்தளிப்பால் கரை ஒதுங்கிய படகு.
மழை-கடல் கொந்தளிப்பால் கரை ஒதுங்கிய படகு.
உ.பாண்டி

வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சிலநாள்களாக மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல்மழையின்றி தவித்துவந்த ராமநாதபுரம் மாவட்ட மக்கள் இந்த மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த இருதினங்களாக அதிக அளவில் மழைபெய்துள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலைவரை ஒட்டுமொத்தமாக 1127.10 மி.மீ மழை பெய்தது. இதில் அதிக அளவாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளில் தலா 100 மி.மீட்டருக்கு கூடுதலான மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்கிய நிலையில் அங்கு வசித்துவரும் மீனவர்கள் அவதிக்குள்ளாகினர்.

மழை நிவாரணப் பொருள்கள்
மழை நிவாரணப் பொருள்கள்
உ.பாண்டி

இந்த நிலையில், மண்டபம் தெற்கு கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பில் சிக்கிய 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. மேலும், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 படகுகள் கடல் கொந்தளிப்பால் கட்டுப்பாட்டை இழந்து கரையோரம் தரை தட்டி ஒதுங்கின.

இதனிடையே தங்கச்சிமடம் ராஜாநகர், ராஜீவ்காந்தி நகர், அய்யந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. இதை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் வழங்கினர். அப்போது அங்குவந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகக் கூறி குரல் எழுப்பினர். மேலும், தங்கள் பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் அரசு தரும் நிவாரணப் பொருள்களை வாங்க மாட்டோம் என கொந்தளித்தனர். இதைத்தொடர்ந்து தங்களுக்கு வழங்கப்பட்ட அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திருப்பிக்கொடுத்தனர்.

மணிகண்டன் ஆய்வு
மணிகண்டன் ஆய்வு
உ.பாண்டி

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து, அவர்கள் இருவரும் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளைப் பார்வையிடச் சென்றனர். அங்கு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து அரசு வழங்கிய நிவாரணப் பொருள்களைப் பாதிக்கப்பட்டவர்கள் வாங்கிச் சென்றனர்.