Election bannerElection banner
Published:Updated:

`பணம் வாங்கிட்டு ஏன் ஓட்டு போடவில்லை?!' -புளியம்பட்டி ஊராட்சி மக்களைப் பதறவைத்த `பூசை'

சாலை மறியல் செய்த புளியம்பட்டி கிராம மக்கள்
சாலை மறியல் செய்த புளியம்பட்டி கிராம மக்கள்

உள்ளாட்சித் தேர்தலில் பூசை படுதோல்வியடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சிவானந்தம் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டிருக்கிறார் பூசை என்பவர். இவர், தேர்தலுக்கு முன்பாக தன்னுடைய கிராமத்தில் உள்ளவர்களின் வீடுகளுக்குச் சென்று, ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

வாக்குப் பதிவு
வாக்குப் பதிவு

இந்த நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பூசை படுதோல்வியடைந்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிவானந்தம் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பூசை, ஒவ்வொரு வீடாகச் சென்றும், கடைத்தெருவுக்கு வருபவர்களைத் தடுத்து நிறுத்தியும் வடிவேலு பாணியில், `யாருக்கு ஓட்டுப் போட்டீங்க.. என்னிடம் ஓட்டுக்குப் பணம் வாங்குனீங்கதானே.. எனக்கு ஓட்டு போட்டீங்களா?' என்று கேட்டுள்ளார்.

கிராம மக்களும், `ஆமாம்.. நாங்கள் உங்களுக்குத்தான் ஓட்டு போட்டோம்’ என்று பலரும் பதில் சொல்ல, அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பூசை, `நீங்கள் எல்லோரும் எனக்கு ஓட்டு போட்டிருந்தால் நான் எப்படித் தோற்பேன். எனக்கு ஓட்டு போடுவதாக என்னிடம் உறுதியளித்துவிட்டு, வேறு ஒருவரை வெற்றி பெற வைத்துவிட்டீர்கள். எனக்குத் துரோகம் பண்ணிவிட்டீர்கள்' என்று ஆவேசமாகக் கூறியதோடு தகாத வார்த்தைகளில் திட்டித் தீர்த்துள்ளார். தொடர்ந்து, `ஒழுங்கு மரியாதையாக என்னிடம் வாங்கிய பணத்தைத் திருப்பி தந்து விடுங்கள், இல்லையென்றால் நடப்பதே வேறு' என்று கூறிவிட்டு, கற்களையும் பீர் பாட்டில்களையும் எடுத்து வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

நீங்கள் எல்லோரும் எனக்கு ஓட்டு போட்டிருந்தால் நான் எப்படித் தோற்பேன். எனக்கு ஓட்டு போடுவதாக வாக்கு கொடுத்துவிட்டு, வேறு ஒருவரை வெற்றி பெற வைத்து துரோகம் செய்துவிட்டீர்கள்.
பூசை

இதில் மனம் நொந்து போன சிலர், பூசையின் வீட்டுக்குள் வாங்கிய பணத்தை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். ஆனாலும், பூசை தொடர்ந்து ரகளையில் ஈடுபடவே புளியம்பட்டி மக்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இலங்குனி சாலையில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இருப்பினும், பூசையின் அர்ச்சனைகளைக் கேட்க முடியாமல் தவித்து வருகின்றனர் புளியம்பட்டி மக்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு