Published:Updated:

`வெப்சைட்ல ஜெயிச்சதா பேர் வந்துச்சு; பிறகு நீக்கிட்டாங்க!' - கொதிக்கும் சேலம் வேட்பாளர்கள்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குளறுபடி என வேட்பாளர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

வேட்பாளர்கள்
வேட்பாளர்கள்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தன்னுடைய இணையதள பக்கத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சியில் வெற்றி பெற்றதாக 6 உறுப்பினர்களை அறிவித்துவிட்டு அவர்கள் பதவியேற்க முடியாத சூழலில் அவர்களுடைய பெயர்களை நீக்கி விட்டுப் பதவியேற்றவர்களின் பெயர்களைச் சேர்த்திருக்கும் விநோத சம்பவம் நடந்தேறி இருக்கிறது.

பட்டியல்
பட்டியல்

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம், காடையாம்பட்டி வட்டத்தில் உள்ளது சிக்கனம்பட்டி கிராம ஊராட்சி. இந்தக் கிராம ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த 9 வார்டுகளுக்கும் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில்தான் இப்படியொரு குளறுபடி நடந்துள்ளது. அதையடுத்து, அந்த 6 வேட்பாளர்களும் நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகப் படியேறி இருக்கிறார்கள்.

இதுபற்றி சிக்கனம்பட்டி 5-வது வார்டில் போட்டியிட்ட வனிதா, ``நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சிக்கனம்பட்டி கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு நான் சாவி சின்னத்தில் போட்டியிட்டேன். என்னோடு பழனிசாமி, கெளசல்யா ஆகியோரும் போட்டியிட்டார்கள். என்னுடைய வார்டில் மொத்தம் 294 வாக்குகள் இருக்கிறது. அதில் எனக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.

வனிதா
வனிதா

தேர்தல் நடைபெற்று 2-ம் தேதி மாலை எங்கள் வார்டுக்கு வாக்கு எண்ணிக்கை பத்மாவாணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. எங்களை உள்ளே விடவில்லை. எங்கள் முன்பு ஓட்டு பெட்டிகளைத் திறக்கவில்லை. எங்களுக்கு ஓட்டு எண்ணிக்கை குறைவு என்று சொன்னதை அடுத்து திரும்பி வந்துவிட்டோம். அடுத்த நாள் 3-ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் வெற்றி பெற்றதாக என்னுடைய பெயர் வந்திருந்தது. மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆனால், வாக்கு எண்ணிக்கை நடந்த மையத்தில் கெளசல்யா வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டு அவர் 6-ம் தேதி சிக்கனம்பட்டி ஊராட்சியில் பதவியேற்று இருக்கிறார். அதையடுத்து, 7-ம் தேதி மாலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் என்னுடைய பெயர் நீக்கப்பட்டு கெளசல்யா பெயர் சேர்த்திருக்கிறார்கள்.

தமிழரசு
தமிழரசு

என்னைப் போன்றே சிக்கனம்பட்டி கிராம ஊராட்சியில் போட்டியிட்ட 2-வது வார்டில் செல்வம், 3-வது வார்டில் கலைச்செல்வி, 4-வது வார்டில் துர்கா கவுண்டர், 6-வது வார்டில் கல்பனா, 7-வது வார்டில் ராமச்சந்திரன் ஆகியோர் பெயர்கள் வெற்றிபெற்றதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் 3-ம் தேதி வெளியிடப்பட்டு பிறகு 7-ம் தேதி இவர்கள் பெயர்களை நீக்கிவிட்டு 2-வது வார்டில் கோவிந்தராஜ், 3-வது வார்டில் மங்கையர்க்கரசி, 4-வது வார்டில் முருகன், 6-வது வார்டில் வளர்மதி, 7-வது வார்டில் பழனிசாமி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நாங்கள் அனைவரும் தி.மு.க கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுடைய பெயர்களை நீக்கி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் நியாயமாகப் பணியைச் செய்யவில்லை. அதனால் எங்கள் ஊராட்சியில் மறு தேர்தல் நடத்த வேண்டும்'' என்றார்.

`பணம் வாங்கிட்டு ஏன் ஓட்டு போடவில்லை?!' -புளியம்பட்டி ஊராட்சி மக்களைப் பதறவைத்த `பூசை'

இதுபற்றி ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க-வைச் சேர்ந்தவருமான தமிழரசு, ``இந்தக் குளறுபடிக்குத் தேர்தல் ஆணையமும், அ.தி.மு.க-வும்தான் காரணம். அந்தக் கிராம ஊராட்சியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த வெள்ளையன் வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் வார்டு உறுப்பினர்களும் அ.தி.மு.க கூட்டணியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தி.மு.க கூட்டணி கட்சியைச் சேர்ந்த செல்வம், கலைச்செல்வி, துர்கா கவுண்டர், வனிதா, கல்பனா, ராமச்சந்திரன் ஆகியோரின் பெயர்களை வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்குப் புகார் தெரிவித்து இருக்கிறோம்'' என்றார்.

கலெக்டர் ராமன்
கலெக்டர் ராமன்
எம்.விஜயகுமார்

இதுபற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் ராமனிடம் கேட்டதற்கு, ``தேர்தல் பணிச் சுமையின் காரணமாக டேட்டா என்ட்ரி தவறுதலாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் வந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அளிக்கப்பட்ட சான்றிதழ் உள்ளவர்கள்தான் வெற்றி பெற்றுள்ளார்கள். அதனால், தற்போது தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் உள்ள பெயர்கள்தான் சரியானவை'' என்றார்.