Published:Updated:

`நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகச் செயல்படுகிறார் ஆட்சியர்?!' - தொடரும் சங்கராபுரம் தேர்தல் சர்ச்சை

சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தேர்தல் விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தேர்தலில் இரண்டு வெற்றிச் சான்றிதழ் வழங்கியதாகப் பெரும் சர்ச்சை ஏற்பட்டு, குழப்பம் நீடித்தது.

தேவி
தேவி

அதிகாரிகள் செய்த தவறால் ஒரே ஊராட்சியில் இரண்டு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டு தேர்தல் முடிவு நாள் முதல் பிரச்னைகள் தொடங்கின. இவற்றைத் தொடர்ந்து முதலாவதாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி மாங்குடி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இதனால் அ.தி.மு.க ஆதரவு வேட்பாளர் பிரிதர்ஷினி அய்யப்பன் பதவியேற்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில் நீதிபதிகள் அமர்வு, முதலாவதாகச் சான்றிதழ் பெற்ற தேவி மாங்குடிதான் வெற்றிபெற்றார். பிரியதர்ஷினி அய்யப்பன் பெற்ற சான்றிதழ் செல்லாது என உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து பிரியதர்ஷினி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம், தாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், தேவி தரப்பினர் பதவியேற்கக் கூடாது என்று மனு அளித்தனர்.

பிரியதர்ஷினி அய்யப்பன்
பிரியதர்ஷினி அய்யப்பன்

இதன் அடிப்படையில் ஆட்சியர் ஜெயகாந்தன் தேவி மாங்குடி தரப்பினர் பதவி ஏற்பதை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தேவியின் கணவர் மாங்குடியிடம் பேசினோம்.``நாங்கள் வெற்றிபெற்றதாக உயர்நீதிமன்ற கிளை நியாயமான தீர்ப்பை வழங்கியது.

மாங்குடி
மாங்குடி

அதன் உத்தரவு காப்பி கைக்கு கிடைக்கும் முன்னரே மாவட்ட ஆட்சியர், நாங்கள் தற்போது பதவி ஏற்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விரைவாகச் செயல்பட்டுள்ளார். இது வேதனையளிக்கிறது. மாவட்ட ஆட்சியர், ஆளும் கட்சி அழுத்தம் காரணமாகவே இவ்வாறு செயல்பட்டுள்ளார் என்பது தெரிகிறது. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

காங்கிரஸ் தொண்டர்கள், ``மாவட்ட ஆட்சியர் நடுநிலையாகச் செயல்படுவார் என்று நினைத்தோம். ஆனால், அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மட்டும்தான் செயல்பட்டுள்ளார். எங்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர்கூட அ.தி.மு.க., பக்கம் நின்று முழுமையாகப் பணியாற்றியிருக்கிறார். இது வருத்தமளிக்கிறது'' என்றனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பிரியதர்ஷினியின் கணவர் அய்யப்பன், ``தேர்தல் முடிவு அன்று ஒரு பண்டலை எண்ணாமல் வெற்றி அறிவிக்கப்பட்டது. பிறகு முறையாக எண்ணி, வெற்றி அறிவிக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றக் கிளை முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டவர்கள்தான் பதவி ஏற்கவேண்டும் என கூறியுள்ளது. இதை எதிர்த்து, நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளோம். அதன், அடிப்படையிலேயே ஆட்சியர், பதவி ஏற்பை நிறுத்தி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆட்சியர், நியாயமாகவே நடந்து கொண்டுள்ளார்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு