Published:Updated:

`தேர்தலுக்கு மட்டும் எங்கிருந்தாலும் வந்திடுவேன்!'- ஓட்டு போடுவதற்கு ரூ.10 ஆயிரம் செலவுசெய்த டிரைவர்

டிரைவர் ராதா
டிரைவர் ராதா

என்னுடைய உறவினர்களையும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என நான் வலியுறுத்துவேன். ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவது எனக்குச் சிறிதும் பிடிக்காது.

தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்கும் நபர்கள் அதிகரித்துவரும் சூழலில், செலவு செய்து வாக்களித்து கடமையை நிறைவேற்றும் இந்தியக் குடிமகனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

சிவகங்கை மாவட்டம் பாகனேரியைச் சேர்ந்தவர் ராதா. வாகன ஓட்டுநரான இவர், ஜனநாயகக் கடமையான தேர்தலில் வாக்களிப்பதைச் சரியாக நிறைவேற்றி வருகிறார்.

representational image
representational image

ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் எங்கிருந்தாலும் வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்துவிடுகிறார். இதனால் பலரது பாராட்டுகளைப் பெற்ற ராதாவிடம் பேசினோம், ``நான் ஒரு டிரைவர். தற்போது எனக்கு வயது 52. ஆரம்பத்திலிருந்தே எனக்கு டிரைவர் தொழில் மட்டும்தான். வாகனம் ஓட்டுவதை உயர்வாக நினைக்கிறேன்.

நான் தமிழ்நாடு மட்டும் இல்ல டெல்லி, பாம்பேனு எல்லா இடங்களிலும் வண்டி ஓட்டியிருக்கிறேன். ஏன் அரேபிய நாடுகளிலும் வண்டி ஓட்டியிருக்கிறேன். ஆனால் எங்க இருந்தாலும் தேர்தலுக்கு வந்துவிடுவேன். எப்போது தேர்தல் வந்தாலும் கரெக்ட்டா வந்து ஓட்டு போட்டுவிடுவேன். தேர்தல் சமயத்தில் இரண்டு நாள்களுக்கு முன்னரே ஊருக்கு வந்து எனக்கு ஒவ்வொரு முறையும் ஓட்டு வந்துருக்கானு பார்த்துக்கொண்டு வாக்குச் சாவடியையும் வரிசை எண்களையும் குறித்து வைத்துக்கொள்வேன்.

representational image
representational image

இதனால் ஒருமுறைகூட தவிர்க்காமல் ஓட்டுப் போட முடிகிறது. எனக்கு ஆஞ்சியோ பண்ணயிருக்காங்க. அதனால டிரைவர் தொழிலை தற்காலிகமாக விட்டுட்டு டெல்லியில் ஜவுளிக் கடை ஒன்றில் வேலை செய்துவருகிறேன்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் எனது கிராமத்தில் வாக்களிக்க ஒரு வாரம் விடுப்பு எடுத்து ஜனநாயக கடமை ஆற்றியுள்ளேன். இதனால் எனக்குப் போக்குவரத்து செலவு சாப்பாடு, சம்பளம் என்று எல்லாத்தையும் கணக்கு பார்த்தால் பத்தாயிரம் செலவு ஏற்படும். ஆனாலும் வாக்களிப்பதைப் பெரிதாகக் கருதித்தான் வாக்களித்துள்ளேன்.

தேர்தல் ஆணையம்! 
தேர்தல் ஆணையம்! 

என்னுடைய உறவினர்களையும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என நான் வலியுறுத்துவேன். ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவது எனக்குச் சிறிதும் பிடிக்காது. ஒரு நாள் சுகத்திற்காக 5 ஆண்டுகளை அடகு வைக்க வேண்டுமா என்று எண்ணுவேன். என்னைப் போல அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

ஓட்டுக்குப் பணம் வாங்கும் நபர்கள் மத்தியில் பாகனேரியைச் சேர்ந்த ஓட்டுநர் ராதா வாக்களிக்க பணம் செலவு செய்து தனது கடமையை நிறைவேற்றுவது பாராட்டக்கூடியதாகும்.

அடுத்த கட்டுரைக்கு