Published:Updated:

சிவகங்கை: முடிவுக்கு வந்தது மாவட்ட ஊராட்சித் தலைவர் விவகாரம்! - குலுக்கல் முறையில் அ.தி.மு.க வெற்றி

அமைச்சர் ஜி.பாஸ்கரனுடன் பொன்மணி. பாஸ்கரன்
அமைச்சர் ஜி.பாஸ்கரனுடன் பொன்மணி. பாஸ்கரன்

இன்று தலைவர் பதவிக்கு காலையிலும், துணைத் தலைவர் பதவிக்கு மாலையிலும் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில், 16 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. இவற்றில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி எட்டு இடங்களிலும், தி.மு.க கூட்டணி எட்டு இடங்களிலும் மாவட்ட ஊராட்சி வார்டுகளில் வெற்றிபெற்றன. இதனால் அ.தி.மு.க., தி.மு.க கூட்டணி சமபலத்தில் இருந்துவருகின்றன. மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்கள் நடத்தும் சமயத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அ.தி.மு.க தொண்டர்கள்
அ.தி.மு.க தொண்டர்கள்

ஜனவரி -11, ஜனவரி 30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்த முடிவாகி, ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் தி.மு.க ஆதரவாளர்கள் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலை நடத்த வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது `இரு வாரத்துக்குள் தேர்தல் நடத்தப்படும்’ என தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கிடையே கடந்த 4-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை வந்த நிலையில், மீண்டும் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நான்காவது முறையாக ஒத்திவைக்கபட்டன.

இந்தநிலையில் இன்று தலைவர் பதவிக்கு காலையிலும், துணைத் தலைவர் பதவிக்கு மாலையிலும் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் 1-வது வார்டு கவுன்சிலர் பொன்மணி. பாஸ்கரனும், தி.மு.க சார்பில் 7-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமாரும் போட்டியிட்டனர். தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் தொடங்கி நிறைவு பெற்றது. இருவரும் சமநிலையில் வாக்குகள் பெற்றதால், குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இரு தரப்பினர் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் குலுக்கல் சீட்டு முறையில் தேர்வு செய்தனர். அப்போது அ.தி.மு.க தரப்பு வேட்பாளர் பொன்மணி. பாஸ்கரன் பெயர் வந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அமைச்சர் ஜி.பாஸ்கரனுடன் பொன்மணி. பாஸ்கரன்
அமைச்சர் ஜி.பாஸ்கரனுடன் பொன்மணி. பாஸ்கரன்

இதனால் அ.தி.மு.க வேட்பாளர் பொன்மணி. பாஸ்கரனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தி.மு.க தரப்பினர் ஒத்துழைப்புடன் தேர்தல் நடைபெற்றதால், தி.மு.க தரப்பில் எதிர்ப்புகள் எதுவும் கிளம்பவில்லை. இன்று மாலை சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு