Published:Updated:

`வேட்புமனுக்கள் நிராகரிப்பு; மற்ற கட்சிகள் வாபஸ்!’- அ.தி.மு.கவால் கலங்கும் தஞ்சை தி.மு.க

தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாஸ்கரன் ,செந்திலுக்கு ஆதரவாக செயல்பட்டார்.அவர் சரியான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என கருணாநிதி மனுவை நிராகரித்தார்.

துரை.செந்தில்
துரை.செந்தில்

`பட்டுக்கோட்டை அருகே தனது மனைவியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தித் தேர்தல் அலுலர்களை கைக்குள் வைத்து கொண்டு தி.மு.க வேட்பாளர்களின் மனுக்களை நிராகரிக்க செய்து விட்டார். இது வெளிப்படையாகவே ஜனநாயகத்தை நசுக்கும் செயல்' என தி.மு.கவினர் புலம்பி வருகின்றனர்.

அமுதா செந்தில்
அமுதா செந்தில்

தமிழகத்தில் 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் பிஸியாக பிரசாரங்கள் செய்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அ.தி.முகவினர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அத்துமீறுவதாக தி.மு.க தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது.

பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருப்பவர் துரை.செந்தில். இவர் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலங்கத்தின் தீவிரமான ஆதரவாளர். செந்திலின் மனைவி அமுதா, மதுக்கூர் ஒன்றியத்தில் 13 வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்தார். அவரைப் போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக செந்தில் ஆளும் கட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தி.மு.க வேட்பாளர்கள் மனுக்களை நிராகரிக்க செய்துவிட்டார் என தி.மு.கவினர் புலம்பி வருகின்றனர்.

மதுக்கூர்
மதுக்கூர்

இதுகுறித்து தி.மு.கவின் மதுக்கூர் ஒன்றிய செயலாளர் இளங்கோவிடம் பேசினோம், ``மதுக்கூர் ஒன்றியத்தில் 13வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 6 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். கடந்த முறை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் செந்தில் என்பவர் பல முறைகேடுகளை செய்து தனது மனைவி அமுதாவை ஜெயிக்க வைத்து ஒன்றிய பெருந்தலைவராகவும் ஆக்கினார். அதனால், இந்தமுறை நாங்கள் தொடக்கம் முதலே எச்சரிக்கையாகவே செயல்பட்டோம். அதனால் தி.மு.க சார்பிலேயே கருணாநிதி, அண்ணாதுரை என இரண்டு பேரை மனுதாக்கல் செய்ய வைத்தோம்.

தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாஸ்கரன், செந்திலுக்கு ஆதரவாக செயல்பட்டார். அவர் சரியான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என கருணாநிதியின் மனுவை நிராகரித்தார். வேடிக்கை என்னவென்றால் முன்மொழிபவர் ஆவணங்களும் சரியில்லை என காரணம் கூறினார். அதன்பின்னர் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் காலம் தாழ்த்தி அண்ணாதுரை மனுவையும் நிராகரித்து விட்டார். இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பழநிமாணிக்கம் கலெக்டர் கோவிந்தராவிடம் முறையிட்டு தேர்தல் அலுவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என புகார் தெரிவித்தார். கலெக்டரும், `சரியா செய்யுங்க; யோசிச்சு செய்யுங்க' என அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

இளங்கோ
இளங்கோ

அதன்பிறகும் எங்க கட்சியை சேர்ந்த வேட்பாளர் மனுவை நிராகரித்து விட்டார். இதே போல் காங்கிரஸ், அ.ம.மு.க வேட்பாளர்களிடம் பேசி அவர்கள் மனுக்களை வாபஸ் வாங்க செய்துவிட்டார். இது வெளிப்படையான ஜனநாயக மீறல். இப்போது அமுதா செந்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். மதுக்கூர் ஒன்றியத் தலைவர் மீண்டும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய மனைவியை மீண்டும் ஒன்றிய பெருந்தலைவர் ஆக்குவதற்கே அதிகாரிகளை கைக்குள் வைத்து கொண்டு செந்தில் இது போன்ற செயல்களை செய்கிறார்" என்றார்.

அண்ணாதுரையிடம் பேசினோம், ``தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் என்னுடைய மனுவில் எந்த குறையும் இல்லாத போதும் குறை இருக்கு என்றார். சரி என அவர் சொன்ன அனைத்தையும் சரி செய்து அதற்கான ஆவணங்களை கொடுத்துவிட்டோம். அதன் பிறகும் பல்வேறு காரணங்களை கூறி எனது மனுவை நிராகரித்து விட்டார். `எனது மனுவை நிராகரித்ததற்கு சரியான விளக்கம் கொடுங்கள்' என்றால் அதற்கு முறையான பதில் இல்லை.

அண்ணாதுரை
அண்ணாதுரை

ஆளும்கட்சி பிரமுகரான செந்தில் தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை நசுக்கி தன் மனைவியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வைத்து விட்டார். அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக பெருமையுடன் கூறி வருகிறார். இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல இருக்கிறோம்" என்றார்.

`ஏலம் இல்லை; மிரட்டல் இல்லை!' - உள்ளாட்சி நிர்வாகிகளைப் போட்டியின்றித் தேர்வுசெய்த தஞ்சை கிராமம்

குற்றச்சாட்டுகள் குறித்து துரை.செந்திலிடம் கேட்டபோது, ``அண்ணாதுரை கோழிபண்ணை மற்றும் செல்போன் டவர் வைத்து நடத்தி வருகிறார். இதற்கு ஊராட்சியில் முறையான அனுமதி வாங்கவில்லை. அத்துடன் ரூ.15 லட்சம் வரிபாக்கியும் வைத்திருக்கிறார். கருணாநிதி ஊராட்சிமன்றத் தலைவராக இருந்த போது ஊராட்சி பணத்தை முறைகேடு செய்து விட்டார். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது அது இன்னும் நிலுவையில் இருக்கு.

துரை.செந்தில்
துரை.செந்தில்

தேர்தல் அதிகாரி வந்து முழுமையாக ஆய்வு செய்த பிறகே அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. என்னை எதிர்த்து உள்ளூரில் நிற்பதற்கு ஆள் இல்லை என்பதால் வெளியூரில் இருந்து ஆள்களை நிறுத்தினர். தி.மு.கவினருக்கு அரசியல் செய்ய தெரியவில்லை. வாக்கெடுப்பு நடத்தினால் தி.மு.கவினர் டெபாசிட் வாங்க மாட்டார்கள். காழ்புணர்ச்சியுடன் திட்டமிட்டு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறி வருகின்றனர்” என்றார்.