Published:Updated:

`மறைமுகத் தேர்தலில் வாக்களிக்கத் தடை!' - தஞ்சை அ.தி.மு.க-வினர் அதிர்ச்சி

அ.தி.மு.க-வினர் பிரசாரம்
அ.தி.மு.க-வினர் பிரசாரம்

தஞ்சாவூரில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.தி.மு.க வேட்பாளர் ஒருவரை சேர்மன் பதவிக்கு நடைபெறும் மறைமுகத் தேர்தலில் வாக்களிக்க நீதிமன்றம் தடை விதித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அரசு முறைகேட்டில் ஈடுபடுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் புகார் கூறினார். அதற்கு தமிழக தேர்தல் ஆணையம் துணைபோவதாகவும் குற்றம்சாட்டினார். இதேபோல் வாக்குகள் எண்ணும்போதும் பல்வேறு அத்துமீறல்களில் அ.தி.மு.க அரசு ஈடுபடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

`சறுக்கிய ஆல் இன் ஆல்; வருத்தத்தில் வைத்திலிங்கம்!' - புலம்பும் தஞ்சை அ.தி.மு.கவினர்
வினுபாலன்
வினுபாலன்

இந்த நிலையில், தஞ்சாவூரில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.தி.மு.க பிரமுகரான வினுபாலன் என்பவருக்கு வரும் 11-ம் தேதி நடைபெற இருக்கும் மறைமுகத் தேர்தலில் வாக்களிக்கத் தடைவிதித்து தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம். ``தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 28 மாவட்ட கவுன்சிலர் வார்டுகள் உள்ளன. இதில் 22 இடங்களை தி.மு.க-வும் 6 இடங்களை அ.தி.மு.க-வும் கைப்பற்றின. 15-வது வார்டில் தி.மு.க சார்பில் பொன்னுசாமியும், அ.தி.மு.க சார்பில் அதன் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கத்தின் உறவினர் வினுபாலன் என்பவரும் போட்டியிட்டனர். தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகளிடம் வினுபாலன் வெற்றிபெற்றே தீர வேண்டும் என வைத்திலிங்கம் கூறியதுடன் தீவிரமாக பிரசாரமும் செய்தார். `கட்சியில் சீனியர் பலர் இருக்கும்போது ஜூனியரான சின்ன பையனுக்கு சீட்டு கொடுத்ததுடன், ஜெயிப்பதற்காக இப்படி வேலை செய்கிறாரே?' என அப்போதே நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு இருந்தது. 15 வார்டில் மொத்தம் 62,313 வாக்காளர்கள் உள்ள நிலையில், 39,158 வாக்குகள் மட்டுமே பதிவாகின. வாக்கு எண்ணிக்கையின்போது 2,680 வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவாகியிருப்பதாகக் கூறப்பட்டன.

அத்துடன் தி.மு.க வேட்பாளர் பொன்னுசாமி 12,554 ஓட்டுகளும் அ.தி.மு.க வேட்பாளர் வினுபாலன் 12,753 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இதனால், 199 வாக்குகள் வித்யாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் வினுபாலன் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் பிரபாகரன் அறிவித்தார். ஆனால், அப்போதே செல்லாத ஓட்டுகளைச் சேர்த்து எண்ணி வினுபாலன் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டனர் எனக் கூறி தி.மு.க வேட்பாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

நள்ளிரவில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதால், அப்போது ஏற்பட்ட சலசலப்பு கட்சிக்காரர்களுக்குத் தெரியவில்லை. ஆனாலும், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலையும் உருவானது. அப்போது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து அனுப்பினர். வைத்திலிங்கம் தரப்பில் அனைவரையும் நல்ல முறையில் கவனித்து, இது வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டனர். அப்போதே பொன்னுசாமி, `இதற்கெல்லாம் நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்' எனக் கூறிவிட்டே வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே சென்றார்.

வினுபாலன்
வினுபாலன்

இதையடுத்து, வினுபாலன் வெற்றியை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பொன்னுசாமி வழக்கு தொடர்ந்தார். தி.மு.க மாவட்ட வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நேற்று மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சிவஞானம், அ.தி.மு.க வேட்பாளர் வினுபாலன் வரும் 11-ம் தேதி நடைபெறும் சேர்மனை தேர்வு செய்யும், மறைமுகத் தேர்தலில் வாக்காளிக்கத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு அ.தி.மு.க வட்டாரத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வைத்திலிங்கமும் இதனால் அப்செட் ஆகி விட்டார்'' எனத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு