Published:Updated:

`ஆட்சிக்கு வந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்!' - கவுன்சிலர்களிடம் உருகிய தஞ்சை தி.மு.க நிர்வாகிகள்

தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள்
தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள்

`ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது. அத்துடன் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். அதற்காகவே நாம் உஷாராக இருக்கிறோம்' எனத் தி.மு.க நிர்வாகிகள் கூறினர்.

தஞ்சாவூர் ஒன்றியத்தில் வெற்றிபெற்ற தி.மு.க ஒன்றிய கவுசிலர்களை அ.தி.மு.க-வினர் குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தஞ்சை தி.மு.க நிர்வாகிகள் கவுன்சிலர்களைக் குடும்பத்துடன் தென் மாவட்டங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ள சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அலுவலகம்
ஒன்றிய அலுவலகம்

தஞ்சாவூர் ஒன்றியத்தில் மொத்தம் 29 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க வேட்பாளர்கள் 18 இடங்களையும், அ.தி.மு.க 8, சுயேச்சை 2, அ.ம.மு.க ஒரு இடத்தையும் பிடித்துள்ளனர். தி.மு.க பெரும்பான்மையான இடங்களைப் பிடித்திருப்பதால் எளிதாக சேர்மன் பதவியை பிடித்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

சூரக்கோட்டையைச் சேர்ந்த கேசவன் என்பவரின் மனைவிக்குதான் ஒன்றிய சேர்மன் பதவி என தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க தரப்பில் குதிரை பேரத்தின் மூலம் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்களை விலைக்கு வாங்குவதற்கான பேச்சுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின.

தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள்
தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள்

இதையடுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்ட உடனேயே தஞ்சை பைபாஸ் சாலை விளார் அருகே உள்ள கிரீன் சிட்டி என்ற சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இதை அ.தி.மு.க தரப்பு எப்படியோ தெரிந்துகொண்டுவிட்டது. அதன் பிறகு புதுக்கோட்டை சாலையில் உள்ள மற்றொரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் நேற்று மதியத்துக்கு மேல் 18 கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட அனைவரையும் தென் மாவட்டங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றுவிட்டனர். இதை தி.மு.க முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்து செய்து வருகின்றனர். இந்தத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம். ``தஞ்சை மாவட்டத்தில் பெரும்பான்மையான ஒன்றியங்களை தி.மு.க கைப்பற்றியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் குதிரை பேரத்தின் மூலம் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்களை விலைக்கு வாங்கியாவது சேர்மன் பதவியைக் கைப்பற்றிவிட எண்ணி அதற்கான காய்களை நகர்த்திவருகிறார்.

ஒன்றிய அலுவலகம்
ஒன்றிய அலுவலகம்

குறிப்பாக தஞ்சாவூர் ஒன்றியத்தை மட்டுமாவது பிடித்துவிட வேண்டும் என தனக்கு நெருமானவர்களிடம் கூறியிருக்கிறார். இதற்கு ஏற்றாற்போல் தேர்லுக்கு முன்பு தன் மனைவிக்கு சீட் தரவில்லை என்ற விரக்தியில் தஞ்சை தி.மு.க-வின் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருந்த முரளி என்பவர் பி.ஜே.பி-க்குத் தாவினார். அத்துடன் தன் மனைவியையும் ஒன்றிய கவுன்சிலராகவும் வெற்றி பெற வைத்தார்.

`சறுக்கிய ஆல் இன் ஆல்; வருத்தத்தில் வைத்திலிங்கம்!' - புலம்பும் தஞ்சை அ.தி.மு.கவினர்

முரளி, வைத்திலிங்கத்திடம் சென்று, `என்னுடன் தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் தொடர்பில் உள்ளனர். அவர்கள் பொருளாதாரரீதியாக கஷ்டத்தில் உள்ளனர். அவர்களிடம் பேசுவோம்' எனக் கூற உற்சாகமடைந்த வைத்தி, `என்ன செலவானாலும் பரவாயில்லை. உடனே இதைச் செய்யுங்க' என கூறியிருக்கிறார். அத்துடன் முரளி ஒரு சில தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்களிடமும் பேசியிருக்கிறார். இது தி.மு.க நிர்வாகிகளின் கவனத்துக்கும் சென்றது.

வாக்காளர்கள்
வாக்காளர்கள்

இதையடுத்து, பதவியேற்றுக்கொண்ட உடனேயே 18 கவுன்சிலர்களையும் சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். சிலர், `நாம்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். அப்புறம் எதற்கு ஒட வேண்டும்' என கேட்டிருக்கிறார்கள். அதற்கு, `அவர்களிடம் ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது. அத்துடன் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். அதற்காகவே நாம் உஷாராக இருக்கிறோம்' என நிர்வாகிகள் விளக்கியுள்ளனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க-வினர் தி.மு.க கவுன்சிலர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் பேசப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, நேற்று மதியத்துக்கு மேல் 18 கவுன்சிலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களை இரண்டு சொகுசு டெம்போ வேன்கள் மூலம் தென் மாவட்டங்களின் முக்கியப் பகுதிகளுக்குச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

ஒன்றிய அலுவலகம்
ஒன்றிய அலுவலகம்

அவர்கள் அனைவரையும் தொடர்ந்து ஒரே இடத்தில் தங்க வைக்காமல், வெவ்வேறு இடங்களில் மாற்றி மாற்றி தங்க வைத்து வருகின்றனர். புறப்படுவதற்கு முன் தி.மு.க நிர்வாகிகள் சிலர் 18 பேரிடமும், `பணம் இன்றைக்கு வரும் நாளைக்கு போகும். ஆட்சிக்கு வந்தா பணத்தைச் சம்பாதிச்சுக்கலாம். அ.தி.மு.க ஆட்சி முடிவதற்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. அதன் பிறகு தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான். இதற்காக அவர் பலமாக உழைத்துக்கொண்டிருக்கிறார். இதை யாரும் மறந்துவிட வேண்டாம்' என 10 நிமிடத்துக்கு மேல் உருக்கமாகப் பேசிய பிறகே அழைத்துச் சென்றுள்ளனர். இனி நேராக அந்த 18 பேரையும் வரும் 11-ம் தேதி வாக்களிப்பதற்கே அழைத்து வருவார்கள்'' என தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு