Published:Updated:

`15 பட்டியலின வாக்காளர்கள்; ஒருவரும் போட்டியிட விரும்பவில்லை!' -தலைவர் இல்லாத தஞ்சை கிராமம்

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

வார்டு உறுப்பினர்கள் ஆறு பேரில் ஒருவரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க உள்ளோம். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கு அனைத்து அதிகாரங்களும் மாற்றித்தரப்படும் என்றனர்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊராட்சி ஒன்று மறுசுழற்சி முறையில் ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அங்கு மொத்தமே 15 பட்டியலின வாக்காளர்களே உள்ளதால் அவர்கள் யாரும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லை எனக் கூறப்படுகிறது.

த.மறவக்காடு
த.மறவக்காடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிவடைந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இதனால் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பல கிராமங்களில் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஒரு ஊராட்சியில் மட்டும் தலைவர் பதவிக்குத் தேர்தலில் போட்டியிட யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டைப் பகுதியில் உள்ளது த.மறவக்காடு ஊராட்சி. இந்த ஊராட்சித் தொகுதி மறுசீரமைப்பில் இடஒதுக்கீட்டின்படி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் யாரும் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அத்துடன், அவர்களில் மொத்தம் 15 வாக்காளர்களே ஊரில் உள்ளனர். இதனால், ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. அதனால், அந்த ஊரில் தேர்தலும் நடைபெறவில்லை.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வேதரத்தினம் என்பவரிடம் பேசினோம். ``எங்க ஊராட்சியில் மொத்தம் 1,100 வாக்குகள் உள்ளன. இடஒதுக்கீட்டின்படி இந்த முறை எங்கள் ஊராட்சி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் இங்கு மொத்தமே சுமார் 15 வாக்காளர்கள்தான் உள்ளனர். கணக்கெடுப்பிற்கு வந்த அலுவலர்கள் அருகில் உள்ள பத்தாங்காடு கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர்களை எங்கள் ஊரில் வசிப்பதாகக் கணக்கெடுப்பில் சேர்த்து விட்டுச் சென்று விட்டனர். இதனால் மக்கள் தொகை அடிப்படையிலும் மறுசுழற்சி முறையிலும் எங்க ஊர் ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டது.

நாங்கள் 2016-ம் ஆண்டிலிருந்தே இது தொடர்பாக தஞ்சாவூர் கலெக்டருக்கு மனு கொடுத்து வந்தோம். ஆனால், அப்போதைய கலெக்டரும், அதற்கு பின் வந்த கலெக்டர்களும் இதுகுறித்து முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்தநிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு ஆதிதிராவிடர்களிலிருந்து யாரும் போட்டியிடவில்லை. அவர்கள் போட்டியிட்டிருந்தால் கூட அதை நாங்கள் தடுத்திருக்கப் போவதில்லை.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
ஊரக உள்ளாட்சித் தேர்தல்

போட்டியிடுவதற்கான வாழ்க்கைச் சூழ்நிலையும் அவர்களுக்கு இல்லை. இதையடுத்து ஊராட்சியில் உள்ள ஆறு வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு மட்டும் மனுத்தாக்கல் செய்தோம். மேலும், அவர்களைப் போட்டியின்றித் தேர்ந்தெடுத்தோம். ஊராட்சிமன்றத் தலைவருக்கு யாரும் போட்டியிடாததால் அந்தப் பதவி காலியாகவே இருக்கிறது. வார்டு உறுப்பினர்கள் ஆறு பேரில் ஒருவரை ஊராட்சிமன்றத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க உள்ளோம்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டோம். `ஊராட்சிமன்றத் துணைத் தலைவருக்கு அனைத்து அதிகாரங்களும் மாற்றித் தரப்படும்' என்றனர்.

அத்துடன், `இன்னும் ஆறு மாதத்தில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும்' என கலெக்டர் தரப்பிலிருந்து உறுதி கூறுயிருக்கிறார்கள். அதுவரை எங்கள் ஊராட்சி மட்டும் ஊராட்சி மன்றத் தலைவர் இல்லாமலேயே செயல்படும்'' என்றார்.

மறவக்காடு
மறவக்காடு

``ஆதிதிராவிடர் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சியில் யாரும் போட்டியிடவில்லை எனத் தெரிந்ததுமே அரசு அதிகாரிகள் ஏன் என விசாரித்திருக்க வேண்டும். 15 வாக்காளர்களே இருந்தாலும் நீங்கள் யாரும் போட்டியிட விரும்பவில்லையா என விசாரணை செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்து தேர்தலை நடத்தியிருந்தால்தான் அதுதான் உண்மையான ஜனநாயகம்'' என்று அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் கொதிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு