Published:Updated:

`வாழ்க ஜனநாயகம் சொல்தைத் தவிர வேறுவழியில்லை!'- வாக்களிக்கச் சென்ற தொழிலாளிக்கு நேர்ந்த அதிர்ச்சி

 மாரிமுத்து
மாரிமுத்து

தஞ்சாவூர் அருகே வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்தவரின் பெயர் பட்டியலில் இல்லை. அத்துடன் அவர் இறந்துவிட்டதாகப் பட்டியலில் இருக்கவே தேர்தல் அலுவலர்கள் அந்த நபரை வாக்களிக்க அனுமதிக்காததால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் இன்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனது ஜனநாயக கடமையாற்றுவதற்காக அதே பகுதியில் இருந்த தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு வந்தார். அவரிடம் பூத் சீலிப் இல்லாததால் வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு வாக்களிப்பதற்காக வரிசையில் சென்றார்.

"இதையடுத்து தேர்தல் அலுவலர்களிடம் தனது அடையாள அட்டையைக் கொடுத்தார். பிறகு, அவரின் பெயர் பட்டியலில் இருக்கிறதா எனப் பணியாளர்கள் பார்த்தனர். ஆனால், பட்டியலில் மாரிமுத்துவின் பெயர் இல்லை. அத்துடன் நீங்கள் இறந்துவிட்டதாகப் பட்டியலில் உள்ளது எனத் தேர்தல் பணியாளர்கள் கூற அதிர்ச்சியடைந்த மாரிமுத்து ``தன் தந்தை வீரையன்தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் நான் உயிருடன்தான் இருக்கிறேன்" என்றிருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

ஆனால், தேர்தல் பணியாளர்கள் உங்க அப்பா வீரையன் உயிருடன் இருப்பதாகப் பட்டியலில் இருக்கிறது. உங்கள் பெயர் இல்லை. எனவே, உங்களை வாக்களிக்க அனுமதிக்க முடியாது. மேலும், இதை நாங்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கிறோம் என்றனர். ஆனால் மாரிமுத்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இதைத்தான் சொன்னார்கள். இப்போது நான் வாக்களிக்காமல் செல்ல மாட்டேன் எனத் தேர்தல் பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அலுவலர்கள் ஒரு வழியாக அவரைச் சமாதானம் செய்து வெளியே அனுப்பி வைத்தனர். இதனால் ஓட்டுப் போட முடியாமல் வேதனையுடனும் ஏமாற்றத்துடனும் திரும்பிச் சென்றார்.

இது குறித்து மாரிமுத்து கூறியதாவது, ``என் தந்தை இறந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்தேன். அப்போதும் வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை. நான் இறந்துவிட்டேன் எனப் பட்டியலில் இருப்பதாகத் தெரிவித்தனர். இது குறித்து, வி.ஏ.ஓ-விடம் பலமுறை கடிதம் எழுதி கொடுத்திருக்கிறேன். ஆனால், இந்தப் பிரச்னை மாறவும் இல்லை; தீரவும் இல்லை. வாக்காளர் பெயர் திருத்த முகாமிலும் எழுதிக் கொடுத்திருக்கிறேன், ஒரு பயனும் இல்லை.

 மாரிமுத்து
மாரிமுத்து

ஓட்டுப் போட ஆர்வமாக இருந்தும் மூன்று தேர்தல்களில் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறேன். ஒரு பெயரைக் கூட பட்டியலில் சேர்க்க முடியவில்லை என்றால் என்ன ஜனநாயகம் இது எனத் தெரியவில்லை. வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவரை இறந்துவிட்டதாக, அதுவும் நான்கு ஆண்டுகளாகப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள் என்றால் வாழ்க ஜனநாயகம் எனக் கூறுவதைத் தவிர வேறு வழியில்லை. போராட்டம் நடத்தினால்தான் இதற்குத் தீர்வு வரும் என நினைக்கிறேன்" என வேதனையுடன் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு