Published:Updated:

கடம்பூர் ராஜுவின் சொந்த ஊரில் வெற்றியைப் பறித்த அ.ம.மு.க மாணிக்கராஜா யார்?

மாணிக்கராஜா
மாணிக்கராஜா

தூத்துக்குடியில் கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் சொந்த ஊர் அடங்கிய வார்டு மட்டுமல்லாமல், 10 வார்டுகளில் வெற்றி பெற்று சேர்மன் பதவியைக் கைப்பற்றியுள்ளது அ.ம.மு.க. இதனால் கடும் அப்செட் ஆகியுள்ளார் அமைச்சர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், 6 ஒன்றியங்களை அ.தி.மு.க-வும், 5 ஒன்றியங்களை தி.மு.க-வும் ஒரு ஒன்றியத்தை அ.ம.மு.க-வும் கைப்பற்றியுள்ளன. இதில், அ.ம.மு.க கைப்பற்றியுள்ள கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம்16 வார்டுகள் உள்ளன. இதில், 10 வார்டுகளில் அ.ம.மு.க-வும் 2 வார்டுகளில் தி.மு.க-வும் 2 வார்டுகளில் ம.தி.மு.க-வும் ஒரு வார்டில் அ.தி.மு.க-வும் மற்றும் ஒரு வார்டில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

மாணிக்க ராஜா
மாணிக்க ராஜா

இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் சொந்த ஊரான சிதம்பராபுரம் அடங்கியுள்ள வார்டிலும் அ.ம.மு.க-வே வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஊராட்சி ஒன்றியத்தில் 10 வார்டுகளில் அ.ம.மு.க வெற்றி பெற்றதற்கான ஒரே காரணகர்த்தா, கடம்பூர் இளைய ஜமீன் மாணிக்கராஜாதான்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரிவு செயலாளராகவும் தென் மண்டல அமைப்பாளராகவும் இருப்பவர்தான் இந்த எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா. கடம்பூர் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகத் திகழ்கிறார். சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவர் மாணிக்கராஜா.

வாக்கு சேகரிப்பு
வாக்கு சேகரிப்பு

தென் மண்டலத்தில் இவரது அனுமதியில்லாமல் கட்சியில் எந்த முடிவையும் எடுக்கமாட்டார் டி.டி.வி. மாணிக்கராஜாவுக்கு தினகரன் அளிக்கும் முக்கியத்துவம் பிடிக்காமல் தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட பல தென் மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள். இருப்பினும், அவர் மீதான மரியாதையையும் அவருக்கான முக்கியத்துவத்தையும் தினகரன் குறைக்கவில்லை.

``கட்சியை விட்டு யார் போனாலும் பரவாயில்லை. என்னுடைய உண்மையான தென்மண்டலத் தளபதி மாணிக்கராஜா மட்டும்தான்” என நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாகவே பேசினார் தினகரன். கடந்த டிசம்பர் 23-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள நெல்லையிலிருந்து குமரிக்கு காரில் சென்றபோது வழக்கமாக தினகரன் அமரும் முன் இருக்கையில் மாணிக்கராஜா அமர்ந்திருக்க.., பின் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களைப் பார்த்தபடியே கையசைத்து வந்தார் தினகரன்.

மாணிக்கராஜா
மாணிக்கராஜா

இதைப் பார்த்த தொண்டர்கள் ஆடிப் போனார்கள். இவர், இதே ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டு முறை ஒன்றியப் பெருந்தலைவராக இருந்தார். கடந்த 2010-ல் இந்த ஒன்றியத்தின் பெருந்தலைர் பதவி, இடஒதுக்கீட்டில் பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது.

இருந்தபோதிலும், தனக்கு விசுவாசமான எ.பெருமாள் என்ற பெண்ணை நிறுத்தி தலைவராக்கினார். மாணிக்கராஜா துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த அரசு விழா, சுதந்திர தினவிழாவில் கொடியேற்றுதல், தீர்மானங்கள், ஒப்பந்தங்கள் நிறைவேற்றல் என மாணிக்கராஜாவே நிஜ தலைவராக வலம் வந்தார். தலைவர் மட்டுமல்ல, ஒன்றிய வார்டு உறுப்பினர்களுமே மாணிக்கராஜாவின் பேச்சை மீறமாட்டார்கள்.

மாணிக்கராஜா வீடு
மாணிக்கராஜா வீடு

அ.தி.மு.க-வில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி செயலாளராக நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வில் சீட்டு ஒதுக்கீடு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் மாணிக்கராஜா, தற்போதைய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் சென்றனர். ஆனால், சீட் என்னவோ கடம்பூர் ராஜுவுக்குத்தான் கிடைத்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்பு மாணிக்கராஜா, தான் ஒரு ஜமீன்தார் என்பதை விட்டுக்கொடுக்காமல் பேசியதும், வைப்பாறு மணல் கொள்ளையில் முன்னாள் தூத்துக்குடி தி.மு.க எம்.எல்.ஏ., பெரியசாமியுடன் தொடர்பு இருப்பதாக கிளம்பிய புகாரும்தான் மாணிக்கராஜாவுக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் என்றனர் கட்சியினர்.

கடம்பூர்ராஜு - மாணிக்கராஜா
கடம்பூர்ராஜு - மாணிக்கராஜா
உற்சாகத்தில் தி.மு.க... உணர்ந்துகொண்ட அ.தி.மு.க- உள்ளாட்சித் தேர்தல் சொல்லும் கணக்கு என்ன?

அதன் பிறகு கட்சியில் மாணிக்கராஜாவுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. அதிருப்தியிலேயே கட்சியில் தொடர்ந்த மாணிக்கராஜாவுக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உருவான அ.ம.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார் மாணிக்கராஜா.

அ.ம.மு.கவில் தினகரனுக்கு அடுத்த சக்தியாக உருவெடுத்து, தென் மண்டல மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களைக் கைக்குள் வைத்துக்கொண்டு கோலோச்சி வருகிறார். மாணிக்கராஜாவும் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எதிரும் புதிருமாகத்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கயத்தார் ஊராட்சி ஒன்றியம் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணிக்கராஜா
மாணிக்கராஜா

ஆரம்ப காலத்தில் இருந்தே கடம்பூர் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் கடம்பூர் ஜமீன் குடும்பம் மீது பற்று வைத்திருந்தனர். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் ஜமீன் தலையிட்டுப் பேசி முடித்தால் அது முடிந்துவிடும் என்பார்கள். எந்தத் தேர்தலாக இருந்தாலும், ஜமீன் குடும்பத்தினர் கை காட்டுபவர்கள்தான் வேட்பாளர்கள். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்ற நிலை இருந்து வருகிறது.

அதன்படி, கடம்பூர் மாணிக்கராஜா அறிவிக்கும் வேட்பாளருக்கு வெற்றி நிச்சயம் என்பார்கள். அந்த வேட்பாளருக்கு எதிராக மற்ற கட்சியினர் பலமுறை யோசித்த பிறகே வேட்பாளரை நிறுத்துவார்களாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே கயத்தார் ஒன்றியத்தை எப்படியாவது அ.தி.மு.கதான் கைப்பற்ற வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜு களத்தில் பம்பரமாகச் சுழன்று மும்முரமாக வேலை பார்த்தும் பலனில்லாமல் போனது. இதனால், கடும் அப்செட்டில் உள்ளாராம் அமைச்சர் கடம்பூர் ராஜு.

வாக்கு சேகரிப்பு
வாக்கு சேகரிப்பு
மூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்... கோட்டைவிட்ட அ.தி.மு.க... உடைந்தது உள்ளாட்சி வியூகம்!

``அண்ணனின் சொந்த ஊரான சிதம்பராபுரம் உள்ளடங்கிய 5வது வார்டிலும் அ.ம.மு.க வெற்றி பெற்றதைத்தான் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” எனப் புலம்புகிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள். இந்த ஒன்றியத்தின் 16 வார்டுகளில், 10 வார்டுகளில் அ.ம.மு.க வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து தன் பலத்தை நிரூபித்துள்ளார் மாணிக்கராஜா. அ.ம.மு.க-வின் பலம் அ.தி.மு.க-வுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு