Published:Updated:

மொத்த கடைகள் 137, கணக்குக் காட்டப்பட்டதோ வெறும் 19... கோடிகளில் கொள்ளை, மிரண்ட தூத்துக்குடி கமிஷனர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காமராஜர் காய்கனி மார்க்கெட்
காமராஜர் காய்கனி மார்க்கெட்

தற்காலிகக் கடைகள் ஒதுக்கீட்டுக்கான டோக்கன் பெற, 140 வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் கூடியதால், மார்க்கெட் சம்மந்தமான கோப்புகளை எடுத்துப் பார்த்த ஆணையர், 19 கடைகள் மட்டுமே இருப்பதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் காமராஜர் காய்கனி மார்க்கெட் நிர்வாகம், மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய உரிமைக் கட்டணத்தை கடந்த 4 ஆண்டுகளாக செலுத்தாததைக் கண்டுபிடித்த ஆணையர் ஜெயசீலன், அதிரடியாக 2 அலுவலர்களை சஸ்பெண்டு செய்துள்ளார்.

இந்த காமராஜர் காய்கனி மார்க்கெட்டுக்கு `ஆல் இன் ஆல்’ ஆகவும், தலைவராகவும் இருப்பது முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செல்லப்பாண்டியனின் அண்ணன் சுந்தரபாண்டியன். இவர், மார்க்கெட்டில் தொடங்கி தியேட்டர், ஹோட்டல், மினரல் வாட்டர் கம்பெனி எனப் பல தொழில்களில் கோலோச்சி வருகிறார். மார்க்கெட்டில் ஏல விற்பனைக்காக இறக்குமதியாகும் வாழைத்தார், இலைக்கட்டுகள், தேங்காய் அனைத்துக்கும் இவரால் நியமிக்கப்பட்ட ஏஜென்டுகளே விலை நிர்ணயம் செய்கின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

மார்க்கெட்டில் உள்ள கடைகள்
மார்க்கெட்டில் உள்ள கடைகள்

தற்போதைய ஊரடங்கால் மார்க்கெட் மூடப்பட்ட பிறகு, பழைய பேருந்து நிலையம், வ.உ.சி கல்லூரி உட்பட சில இடங்களில் காய்கறி வியாபாரம் செய்ய மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் அனுமதி அளித்தார். தற்காலிகக் கடைகள் ஒதுக்கீட்டுக்கான டோக்கன் பெற, 140 வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் கூடியதால், மார்க்கெட் சம்பந்தமான கோப்புகளை எடுத்துப் பார்த்த ஆணையர், 19 கடைகள் மட்டுமே இருப்பதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ந்துவிட்டார். காரணம், மார்க்கெட்டில் 137 கடைகள் உள்ளன.

அதிலும், 19 கடைகளின் மொத்த வருமானத்தில் 25 சதவிகிதமான, ரூ.70,000-ஐ உரிமைக் கட்டணமாக ஆண்டுதோறும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக எந்தக் கட்டணமும் கட்டப்படவில்லை எனத் தெரிந்து டென்ஷனான ஆணையர், கட்டணவசூல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காத உதவி வருவாய் அலுவலர் பாலசுந்தரம், உதவி அலுவலர் சுமித்ரா ஆகிய இருவரையும் அழைத்து கடுமையாக டோஸ் விட்டவர், இறுதியில் இருவரையும் சஸ்பெண்டு செய்துவிட்டார். தற்போதுள்ள 137 கடைக்கும் உரிமைக் கட்டணத்தைக் கணக்குப் போட்டால் ஆண்டுக்கு ரூ. 1.25 கோடி வரை செலுத்தியிருக்க வேண்டும்.

தற்காலிக காய்கறிக் கடைகள்
தற்காலிக காய்கறிக் கடைகள்

இதை அறிந்த கமிஷனர், 5 அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் விசாரணைக் குழுவையும் நியமித்துள்ளார். இந்த நிலையில், சுந்தரபாண்டியனும் செல்லப்பாண்டியனும் கமிஷனரை நேரில் சந்தித்து ``கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணுங்க சார்” எனக் கேட்கவே, ``ரூல்ஸ்படிதான் எல்லாத்தையும் செய்யுறேன்” எனக் கமிஷனர் கூற, கடுப்பான செல்லப்பாண்டியன், கோபத்துடன் சட்டென எழுந்து வெளியே சென்றதாக மாநகராட்சி ஊழியர்கள் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்கள் மேம்பாட்டுக்கழகத்தின் மாநில அமைப்பாளரும், வழக்கறிஞருமான அதிசயகுமாரிடம் பேசினோம், "இந்த மார்க்கெட்டுல அதிகபட்சமா 25 கடைகள் செயல்பட வேண்டிய இடத்துல, நடைபாதைக் கடைகள் உட்பட 137 கடைகள் செயல்பட்டு வருது. இவ்வளவு பெரிய மார்க்கெட்டில் முறையான கழிப்பறை வசதிகூட இல்லாமல், அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்துலயும் கடைகளைக் கட்டிட்டாங்கன்னா பாருங்க. ஒரு கடைக்கு ரூ.300 முதல் ரூ.1,500 வரை தினசரி வாடகையா வசூலிக்கிறாங்க. மார்க்கெட்டைப் பொறுத்தவரை, எல்லாமே சுந்தரபாண்டியன்தான். அரசியல் ரீதியா அவரின் தம்பி செல்லப்பாண்டியன்தான் முழு சப்போர்ட்.

மார்க்கெட்டில் உள்ள கடைகள்
மார்க்கெட்டில் உள்ள கடைகள்

தற்போது சாலையோரங்கள்ல மாநகராட்சி இலவசமா வியாபாரத்துக்கு அனுமதி கொடுத்துருக்கு. அந்த இடத்துக்குக்கூட, ’கொரோனா பிரச்னைக்குப் பிறகு மார்க்கெட்டுக்குள்ள திரும்ப கடை வைக்கணும்னா வழக்கமா கொடுக்குற வாடகையில் பாதியை ஒழுங்கா தினமும் கொடுத்திடுங்க’ எனச் சொல்லி மிரட்டி வசூல் பண்றாங்க. பாவம், வியாபாரமும் சரியா இல்லாததால, மார்க்கெட் வியாபாரிங்க, என்ன செய்றதுன்னு தெரியாம, புலம்பித் தவிக்கிறாங்க. மார்க்கெட் நிர்வாகத்தின் மீதான தொடர் புகார் காரணமா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்க்கெட் ஆபீஸ், சுந்தரபாண்டியனின் வீடு, மார்க்கெட்டுடன் இணைந்த அவரது விடுதி, ஹோட்டல்களில் மதுரையிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினாங்க.

தூத்துக்குடி மாநகரம் இரண்டு முக்கிய சாலைகளை மட்டுமே உடைய குறுகிய, மிக நெருக்கடியான பகுதி. இதில், பழைய பஸ்ஸ்டாண்ட், மாநகராட்சி அலுவலகம் அருகில் இந்த மார்க்கெட் செயல்பட்டு வர்றதால, தினமும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுது. மாநகராட்சி கமிஷனரே இந்த நெரிசலில் சிக்கித்தான் ஆபீஸுக்கு வர்றார். மார்க்கெட்டை ஊருக்கு வெளியே கொண்டு போவதுடன் மாநகராட்சி சார்பில், மார்க்கெட் கட்டித்தரணும்னு வியாபாரிகளும் மக்களும் கோரிக்கை வச்சிருக்காங்க. இது சம்பந்தமாவும், மார்க்கெட் அடாவடிகள் குறித்தும் கமிஷனர் முதல் முதல்வர் வரை மனு அனுப்பினேன்.

செல்லப்பாண்டியன், சுந்தரபாண்டியன், அதிசயகுமார் & ஜெயசீலன்
செல்லப்பாண்டியன், சுந்தரபாண்டியன், அதிசயகுமார் & ஜெயசீலன்

ஜெயசீலன், கமிஷனராப் பொறுப்பேற்றதும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டுகள பல வருஷமா தன்வசம் வச்சிருந்த மதுரையைச் சேர்ந்த ஒருவரின் ஒப்பந்தங்களை அதிரடியா ரத்து செஞ்சு மாநகராட்சியின் வசமாக்கினாரு. அடுத்ததாக, ஆளும்கட்சியினர் வசமிருந்த 53 கட்டணக் கழிப்பிடங்களையும் மீட்டு இலவசமாக அறிவிச்சாரு. அதேபோல, இப்போ மார்க்கெட் முறைகேடுகளையும் கமிஷனரே கண்டுபிடிச்சு நடவடிக்கை எடுத்ததை நினைச்சு வியாபாரிகள் சந்தோஷப்படுறாங்க” என்றார்.

`பஸ் டிக்கெட்டுடன் கொரோனா தொற்று இலவசம்?' - அதிர்ச்சியூட்டும் நெல்லைப் பேருந்துக் காட்சிகள்

இதுகுறித்து மார்க்கெட் தலைவரான சுந்தரபாண்டியனிடம் பேசினோம், "நாலு வருஷமா உரிமைக்கட்டணம் கட்டவில்லை என்பது உண்மைதான். மாநகராட்சி அதிகாரிகளும் நினைவுபடுத்தவோ, அறிவுறுத்தவோ இல்லை. வேலைப்பளுவால் மறந்துவிட்டோம். மற்றபடி வியாபாரிகளை மிரட்டி அடவடியாக எந்த வசூலும் செய்யவில்லை” என்றார்.

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனிடம் பேசினோம், "மார்க்கெட்டில் எனக்கு வாழைக்காய், இலைக்கட்டு கமிஷன் விற்பனைக்கடை மட்டும்தான் இருக்கு. மார்க்கெட் நிர்வாகத்தில் நான் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அதில் தலையிடுவதுமில்லை. மாநகராட்சி குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்துதான் கமிஷனரை சந்திக்கப் போனேன். கட்சியில என்னைப் பிடிக்காத சிலர், தூத்துக்குடி தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவனுடன் கூட்டு சேர்ந்துகொண்டு தேவையில்லாமல் என் மீது அவதூறு பரப்புகிறார்கள்” என்று முடித்துக்கொண்டார்.

தற்காலிக காய்கறிக் கடைகள்
தற்காலிக காய்கறிக் கடைகள்

மாநகராட்சி ஆணையர் முனைவர். ஜெயசீலனிடம் பேசினோம், "தற்காலிக கடைகள் ஒதுக்கீடு செய்தபோதுதான், கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியதுடன் கட்டண பாக்கி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதை வசூல் செய்யாத 2 அலுவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரிக்கக் குழு அமைத்துள்ளேன். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் நிச்சயம் வசூல் செய்யப்படும். போக்குவரத்துக்குச் சிரமமாக இருக்கும் இந்த மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது தொடர்பாகவும், மாநகராட்சி சார்பில் மார்க்கெட் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்படும்” என்றார்.

கமிஷனரின் அதிரடியான நடவடிக்கைகள் ஒருபுறமும் இருந்தாலும், இதுவரை அ.தி.மு.க உட்பட அனைத்துக் கட்சியினரும் மேற்கொண்ட ஒப்பந்தப்பணிகளை ஆய்வு செய்யவிருப்பதாக வெளியான தகவலை அடுத்து, அவரை தூத்துக்குடியிலிருந்து தூக்கி அடிக்க கட்சி பேதமின்றி காய் நகர்த்தி வருகிறார்கள் என்று அங்கு தற்போது பேசி வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு