Published:Updated:

`எனது பெயரை அந்தத் தம்பி காப்பாற்றுவார்!'- வீதி வீதியாக வாக்கு சேகரித்த டிராபிக் ராமசாமி

ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களை எதிர்த்து என் குடும்பத்தை இழந்து 15 வருடங்களாகத் தனியாளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். எனக்குப் பிறகு என்னைப்போல் பலரை உருவாக்க வேண்டும்.

டிராபிக்.ராமசாமி
டிராபிக்.ராமசாமி

அரசியல் ஒரு திருட்டுத் தொழில், அரசியல்வாதிகள் ஒரு திருடர்கள் நான் யாருக்கும் வாக்கு கேட்கமாட்டேன் என்னுடைய ஆதரவு கேட்டு யாரும் என்னை அணுகாதீர்கள் என்று கடுமையான வார்த்தைகளால் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தவர் டிராபிக் ராமசாமி. ஆனால், தற்பொழுது ஒரு வேட்பாளருக்காக வீதி வீதியாகச் சென்று மக்களிடம் வாக்கு கேட்டுக்கொண்டிருப்பது வியப்படைய வைத்திருக்கிறது.

வேட்பாளர்
வேட்பாளர்

தஞ்சை சமூக ஆர்வலரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளருமான கரிகால் சோழனுக்கு ஆதரவாகக் களமிறங்கி மக்களிடம் ``எனக்கு ஓட்டுப் போடுவதாக நினைத்து எனது தம்பிக்கு ஓட்டுப் போடுங்கள் ஊழலற்ற நிர்வாகத்தையும் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் செய்துகொடுப்பார் என்று ஒரு தேசியக் கட்சி வேட்பாளருக்காக குக்கிராமத்தில் சுற்றிக்கொண்டிருப்பதை அனைத்துக் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் வியப்பாகப் பார்க்கிறார்கள்.

இதுகுறித்து டிராபிக் ராமசாமியிடம் பேசினோம். ``நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்யாதவன் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் கரிகால் சோழனுக்காக வாக்கு கேட்கிறேன் என்றால் அவர் என் தம்பி. பொது விஷயங்களுக்காகப் பல பொதுநல வழக்குகளைப் போட்டு சில வழக்குகளில் வெற்றியும் கண்டிருக்கிறார். தற்பொழுது கூட தஞ்சை புதிய பேருந்து நிலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கடைகளை அ.தி.மு.கவில் உள்ள வைத்தியலிங்கம், நகரச்செயலாளர் பண்டரிநாதன், மேயர் சாவித்திரி கோபால் உள்ளிட்ட பெரும் புள்ளிகள் ஆளு ஆளுக்குக் கடையைப் பங்குப்போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கிறார்கள்.

பிரசாரத்தில் டிராபிக் ராமசாமி
பிரசாரத்தில் டிராபிக் ராமசாமி

அத்தோடு இதில் பல்வேறு முறைகேடுகளும் அரங்கேறியிருக்கின்றன. இதைக் கண்டித்து கரிகாலன் வழக்குப் போட்டதால் அந்தக் கடைகளுக்கு ஸ்டே வாங்கி யாரும் பயன்படுத்தமுடியாமல் நிறுத்தி வைத்திருக்கிறார். இதே போல் இம்மாவட்டத்தில் உள்ள சில கல்லூரிகள், நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதை எதிர்த்து வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இதற்கு நீதிமன்றமும் அந்தக் கட்டடங்களை இடிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இங்குள்ள அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு அந்தக் கல்லூரி கட்டடத்தை இடிக்காமல் இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை மீறிய அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

ஏன் தஞ்சை மாநகராட்சி ஆணையர் செய்த ஊழலைக் கண்டித்து சிறைக்குக் கூடச் சென்றவர். அவருடைய மனைவி படித்த வழக்கறிஞர் எந்தவித பிரச்னை வந்தாலும் என்னைப் போல் எதிர்த்துப் போராடக் கூடியவர். அதனால்தான் அவருக்கு வாக்கு கேட்க தஞ்சை வந்துள்ளேன்.

கரிகால் சோழன்
கரிகால் சோழன்

ஊழலுக்கு எதிராக ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களை எதிர்த்து என் குடும்பத்தை இழந்து 15 வருடங்களாகத் தனியாளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். எனக்குப் பிறகு என்னைப்போல் பலரை உருவாக்க வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்கி வாக்கு கேட்டு வருகிறேன். எனது பெயரை அந்தத் தம்பி கரிகால் சோழன் காப்பாற்றுவார் என்று நம்பிக்கையில் எனக்கு உள்ளது” என்று முடித்துக்கொண்டார் டிராபிக் ராமசாமி.