Published:Updated:

`கர்ச்சீப் கட்டி சிலர் பின் தொடர்கிறார்கள்'- அஞ்சும் திருநங்கை வேட்பாளர்!

திருநங்கை என்பதால் என்மீது களங்கம் கற்பிப்பதற்காக சிலர் எங்களை பின்தொடர்ந்து வருகிறார்கள். அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் யார் என எங்களுக்குத் தெரியவில்லை.

திருநங்கை ராபியா
திருநங்கை ராபியா

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளில் வரும் 27 மற்றும் 30-ம் தேதி என இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் சகாயநகர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு திருநங்கை ராபியா போட்டியிருகிறார். இந்த ஊராட்சிக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், பிரசாரம் மேற்கொள்ளும்போது சிலர் அவரைப் பின்தொடர்வதாக நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து ராபியா கூறுகையில், ``சகாயநகர் ஊராட்சித் தலைவர் பதவிக்காக நான் போட்டியிடுகிறேன். இந்தத் தேர்தலில் பூட்டு சாவி சின்னம் பெற்று போட்டியிடுகிறேன். போலீஸ் அனுமதியுடன் வாகன பிரசாரமும் செய்து வருகிறேன். வாகன பிரசாரத்துக்குச் செல்லும்போது முகத்தில் கர்ச்சீப் கட்டி மறைத்துக்கொண்டு சிலர் எங்களைப் பின் தொடர்கிறார்கள். எங்களுக்குப் பணி செய்ய ஒரு திருநங்கை கிடைத்திருக்கிறார் என பொதுமக்கள் மாற்றத்தை விரும்பி எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்த திருநங்கைகள்
கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்த திருநங்கைகள்

இந்தச் சமயத்தில் என்மீது களங்கம் கற்பிப்பதற்காகச் சிலர் எங்களைப் பின் தொடர்ந்துவருகிறார்கள். அவர்களைத் தூண்டி விட்டவர்கள் யார் என எங்களுக்குத் தெரியவில்லை. அதற்காக சக வேட்பாளர்களை நான் குறை சொல்லவில்லை. நாங்கள் வீடு வீடாக துண்டுப் பிரசுரம் வழங்கும்போதும் அவர்கள் எங்களைப் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் யார் என கண்டுபிடிப்பதற்காக அவர்கள் அருகில் சென்று துண்டுப் பிரசுரம் கொடுப்பது போன்று பேச முயன்றோம். ஆனால், நாங்கள் அருகில் சென்றதும் பைக்கை திருப்பிக்கொண்டு வேகமாகச் சென்றுவிடுகிறார்கள்.

திருநங்கை என்றாலே தப்பானவர்கள் எனக் காட்டுவதற்காக அவர்கள் எங்களைப் பின் தொடர்கிறார்கள் என நினைக்கிறோம். எங்களைத் தவறாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதுகூட அவர்கள் நோக்கமாக இருக்கலாம். எனக்கும் என்னைச் சார்ந்த திருநங்கைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும். எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளோம்" என்றார்.