Published:Updated:

`ஓட்டு போட மிஸ் பண்ண மாட்டோம்..!'- குஷியாகச் சொல்லும் திருச்சி எம்.ஜி.ஆர் - நம்பியார்

நாங்கள் நாடோடிகள்தான். ஆனால், எந்த ஊரில் இருந்தாலும் ஊருக்கு வந்து ஓட்டு போட்டால்தான் மனசே நிறையும் எனச் சொல்கிறார்கள், திருச்சியைச் சேர்ந்த நாடோடி இனத்தவர்கள்.

எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியார்
எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியார்

தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்தது. இன்று, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவில் ஆர்வமாக வந்து மக்கள் வாக்களித்தார்கள். அதில், திருச்சி தேவராயநேரி வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய நம்பியாரும், எம்.ஜி.ஆரும் தம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய குஷியில் உள்ளனர்.

எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியார்
எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியார்

திருச்சியிலிருந்து 20 கி.மீ தொலைவில், திருச்சி - தஞ்சாவூர் சாலையில் உள்ளது தேவராயநேரி நாடோடிகள் காலனி. இங்கு வாழும் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு சினிமா நட்சத்திரங்களின் பெயர்களைச் சூட்டியுள்ளனர்.

திரும்பும் பக்கமெல்லாம் சினேகா, ஸ்வேதா, ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் எனத் திரை நட்சத்திரங்களின் பெயர்களில் அவர்கள் வலம் வருகின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட 'மதுரை விடிஞ்சா போச்சு’ படத்தின் ஹீரோயின் நிவேதா, தமிழகத்தின் முதல் நாடோடி இனப் பெண் பொறியாளர் சுவேதா மகேந்திரன் உள்ளிட்டோர் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள்தான்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்காக வரிசையில் நின்ற எம்.ஜி.ஆர், நம்பியாரின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாக, மாமன் மச்சான் இருவரும் செம குஷி. அவர்களிடம் பேசினோம். “எங்க காலத்தில், எம்.ஜி.ஆர் - நம்பியார் ரொம்பப் பிரபலம். அதனால், எங்களுக்கு அந்தப் பெயர்களை வைத்தனர். எங்க மக்களுக்கு சினிமா மற்றும் தலைவர்கள்மீது அதிகப் பிரியம். ஒருவர்மீது பாசம் வைத்துவிட்டால், அவர்கள்மீது நாங்கள் உயிராக இருப்போம்.

அப்படித்தான் எம்.ஜி.ஆர் மீது அவ்வளவு பிரியம் எங்களுக்கு. சினிமாவுலதான் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் எதிரிகளாக இருப்பார்கள். ஆனால், நாங்கள் இருவரும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். அதுமட்டுமல்லாமல் மாமன் மச்சான் உறவு என்பதால் கூடுதல் நெருக்கம். எங்க ஜனங்கள் எந்த இடத்திலும் நிலையாக வாழ்ந்தது கிடையாது.

நாங்கள் நிலையாக ஒரு இடத்தில் வாழ வேண்டும் என்பதற்காக, கடந்த 30 வருடங்களுக்கு முன்பு, அப்போதைய திருச்சி மாவட்ட கலெக்டர் மலைச்சாமி ஐயா, எங்களுக்கு இந்த இடத்தை ஒதுக்கினார். அதில் இருந்து இங்கேயே தங்கி ஊசிமணி, பாசிமணி விற்று எங்களது குடும்பத்தை நடத்திவருகிறோம். முன்புபோல திருவிழாக்கள், கோயில் விழாக்கள் நடப்பது இல்லை. அதேபோல், வியாபாரம் படுத்துப்போச்சு.

எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியார்
எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியார்

நாங்க நாடோடிகள்தான். ஆனா, எந்த ஊர்ல இருந்தாலும் ஊருக்கு வந்து ஓட்டுப்போட்டாதான் மனசே நிறையும். ஒவ்வொரு தேர்தலிலும் எங்களுக்கும் ஏதாவது நல்லது நடக்கும்னு நினைச்சு ஓட்டு போடுறோம். ஆனா, எங்க வாழ்க்கையும், பிழைப்பும் முன்பு இருப்பதைவிட மோசமா போய்க்கிட்டே இருக்கு.

நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் இந்த அரசாங்கம் நல்லது பண்ணணும்” என்று கோரிக்கை வைத்தவர்கள், ``தேர்தல் வந்தாலே எங்களுக்குத் திருவிழாதான். என்னதான் கஸ்டம் இருந்தாலும் ஓட்டுப் போடாம இருக்க மாட்டோம்” என்கிறார்கள் உற்சாகமாய்.