Published:Updated:

`300 குடும்பங்களுக்கு ஒரேயொரு போர்வெல்; டேங்க் இல்லாத பைப் லைன்'- இது வேலூர் ஸ்மார்ட் சிட்டி அவலம்!

டேங்க் இல்லாத பைப்லைனில் தண்ணீர் பிடிக்கும் பெண்கள்
டேங்க் இல்லாத பைப்லைனில் தண்ணீர் பிடிக்கும் பெண்கள்

மாநகராட்சியின் இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 22-வது வார்டு மூலக்கொல்லைப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.

மத்திய அரசின் `ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 31 திட்டங்களுக்கு ரூ.906 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. `சரியான திட்டமிடல் இல்லாமல் பணிகளை மேற்கொள்வதால் கோடிக்கணக்கில் பணம் விரயம் ஆகிறது. ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன’ என்று எதிர்க்கட்சியினரும் வேலூர்வாசிகளும் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். 

வேலூர் மாநகராட்சி அலுவலகம்
வேலூர் மாநகராட்சி அலுவலகம்

மாநகராட்சியில் மொத்தமே 60 வார்டுகள்தான் உள்ளன. இதை நான்கு மண்டலங்களாகப் பிரித்து நிர்வகித்துவருகிறார்கள். குடிநீர் வசதி, பொது கழிவறை, சாலை அமைப்பு போன்ற அடிப்படை வசதிகளைக் கூட மாநகராட்சி நிர்வாகம் சரியாக செய்துகொடுக்கவில்லை என்று கொந்தளிக்கிறார்கள் வேலூர் மக்கள். மாநகராட்சியின் இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 22-வது வார்டு மூலக்கொல்லைப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். 

இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சீராக இருந்தும் குடிநீர் வசதி முறையாகச் செய்துகொடுக்கப்படவில்லை. பல்வேறு தொழிற்சாலைகளால் மாசற்றுக் கிடக்கும் இந்தப் பகுதியை மாநகராட்சி நிர்வாகம் சுத்தமாக கண்டுகொள்வதும் கிடையாது. கட்டப் பஞ்சாயத்தில் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பதைப் போன்று மாநகராட்சி நிர்வாகம் புறந்தள்ளி வைத்திருக்கிறது என்று கொதிக்கிறார்கள் மூலக்கொல்லைவாசிகள். 

மூலக்கொல்லையில், டேங்க் இல்லாத பைப்லைன்
மூலக்கொல்லையில், டேங்க் இல்லாத பைப்லைன்

300 குடும்பங்களுக்கும் சேர்த்து ஒரேயொரு போர்வெல் போட்டு சிறிய சின்டெக்ஸ் தொட்டி வைத்து குடிநீர் விநியோகிக்கிறார்கள். இந்த போர்வெல்லின் மின் மோட்டார் அடிக்கடி பழுதாவதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இப்படியிருக்க டேங்க் உடைந்து இருபது முப்பது ஓட்டைகளிலிருந்து தண்ணீர் வெளியேறி ஆறாக ஓடி வீணாகிறது. இதுநாள்வரை நான்கைந்து டேங்குகளை மாற்றியிருக்கிறார்கள். 

அத்தனையுமே ஏற்கெனவே ஊரகப் பகுதிகளில் பயன்படுத்தி தூக்கிவீசப்பட்ட டேங்க்குகள் எனக் கூறப்படுகிறது. அதைத் தூக்கிவந்து மாநகராட்சிப் பகுதிகளில் வைக்கிறார்கள் என்றும், இப்போது, அந்த டேங்க்கைக் கூட எடுத்துவிட்டனர் என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், 4 அடி உயரச் சுவரின் மேல் ஏறி அந்தரத்தில் நிற்கும் பைப் லைனில் குடத்தைத் தாங்கிப்பிடித்து தண்ணீர் பிடிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் மூலக்கொல்லை பெண்கள். 60 வார்டுகளிலும் இதேபோன்ற அவலநிலைதான் நீடிக்கிறது. 

தண்ணீருக்காக அவதிப்படும் பெண்கள்
தண்ணீருக்காக அவதிப்படும் பெண்கள்

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, `புதிய டேங்க் வைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இரண்டொரு நாளில் டேங்க் வைக்கப்படும்’ என்றனர். `இதுவும் புதிய டேங்க் இல்லை. ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு தேய்மானமாகி ஓட்டை உடைசலாக இருக்கிறது. காயிலான் கடைக்குப் போட வேண்டியதைக் கறுப்பு கலர் பெயின்ட் அடித்து புதிய டேங்க் என்று கணக்கு காட்டுகிறார்கள்’ என்று மாநகராட்சி அதிகாரிகள் மீது பாய்கிறார்கள் மூலக்கொல்லை மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு