Published:Updated:

`வெற்றிபெற்றும் பதவியேற்க விடவில்லை!' - அ.தி.மு.க-வினருக்கு எதிராகக் கொதிக்கும் வார்டு மெம்பர்

குடும்பத்துடன் மனு அளித்த மாரிமுத்து
குடும்பத்துடன் மனு அளித்த மாரிமுத்து

`உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றும் எங்கள் ஊராட்சியில் அ.தி.மு.க -வினரின் தூண்டுதலால் எனக்கு மட்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை' என விருதுநகரைச் சேர்ந்த வார்டு உறுப்பினர், அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மெட்டுக்குண்டு ஊராட்சியில், 9-வது வார்டு உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டவர், மாரிமுத்து. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 9 வார்டு உறுப்பினர்களில், இவரைத் தவிர தலைவர், துணைத் தலைவர், மற்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால், 9-வது வார்டு உறுப்பினரான மாரிமுத்துவை பதவி ஏற்க விடாமல் தேர்தல் நடத்திய அதிகாரிகள் மறுப்பதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனைவி, குழந்தைகளுடன் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

புகார் மனுவுடன் மாரிமுத்து
புகார் மனுவுடன் மாரிமுத்து

இதுகுறித்து மாரிமுத்துவிடம் பேசினோம், ``கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மெட்டுக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பகுதியான பொட்டல்பட்டியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு சாவி சின்னத்தில் போட்டியிட்டேன். என்னை எதிர்த்து, அ.தி.மு.க கிளைச் செயலாளரான நடராஜன் சீப்பு சின்னத்தில் போட்டியிட்டார்.

எங்க வார்டில் மொத்தம் 203 ஓட்டுகள் இருக்கு. 2-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிகையில், நான் 100 ஓட்டுகளும் நடராஜன் 100 ஓட்டுகளும் பெற்றோம். 3 ஓட்டுகள் செல்லாதவை. ரெண்டு பேரும் சம ஓட்டுகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டதில் நான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, சான்றிதழும் வழங்கப்பட்டது. 6-ம் தேதி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குப் போனேன்.

மாரிமுத்து
மாரிமுத்து

எனது சான்றிதழை, உதவித் தேர்தல் அலுவலர் கார்த்திகேயகுமாரிடம் காண்பித்தேன்.`இந்த ஊராட்சியின் 9-வது வார்டு உறுப்பினர் பதவி ஏற்பு நிகழ்ச்சியைத் தள்ளிவைக்க வேண்டும்' என யூனியன் ஆபீஸிலிருந்து கடிதம் தரப்பட்டுள்ளது. அதனால், உங்களது பதவியேற்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்று சொல்லி, எனக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க மறுத்துவிட்டார். விளக்கம் கேட்டேன். உங்க யூனியன் ஆபீஸ் பி.டி.ஓ-விடம் கேளுங்கள் எனச் சொன்னார். பி.டி.ஓவை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டேன்,

`11-ம் தேதி நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தல் அன்று பதவியேற்று, அதேநாளில் துணைத் தலைவர் தேர்தலிலும் கலந்து கொண்டு நீங்கள் வாக்களிக்கலாம்” என்று அவரும் வாய்மொழியாகச் சொல்லி அனுப்பிவைத்தார். 11-ம் தேதி, துணைத் தலைவர் தேர்தல் நாளன்றும் போனேன். மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவும், துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கவும் அனுமதிக்கவில்லை. இந்த ஊராட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்து மற்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்டுப் பேசினேன்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம்
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம்

6 உறுப்பினர்கள் எனக்கு வாக்களிக்க சம்மதித்தனர். தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவரான சுப்புராஜ், அ.தி.மு.க -வைச் சேர்ந்தவர் என்பதால், துணைத் தலைவரும் அ.தி.மு.க -விற்கு ஆதரவு அளிக்கும் உறுப்பினரையே அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர்களுக்குள் பேசி முடிவெடுத்தனர். நான் பொட்டல்பட்டி கிராம தி.மு.க கிளைப் பிரதிநிதியாக இருப்பதால், ஊராட்சிமன்றத் தலைவர் சுப்புராஜ், வேண்டுமென்றே என்னைப் பதவியேற்க விடாமல் தடுக்கிறார்.

இதற்கு ஊராட்சியின் செயலர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடந்தை. வெற்றிச் சான்றிதழ் இருந்தும் யூனியன் ஆபீஸில் லெட்டர் வாங்கிவரச் சொல்லி துரத்துகின்றனர். 2-ம் தேதி முதல் இன்று வரை யூனியன் ஆபீஸுக்கும் பஞ்சாயத்து ஆபீஸுக்கும் அலையுறேன். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால், கலெக்டரிடம் மனு கொடுத்தேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேய குமாரிடம் பேசினோம், ``எனக்கு பி.டி.ஓ ஆபீஸிலிருந்து கூறப்பட்ட அறிவுரையின்படி நிறுத்திவைத்தோம். காரணத்தை பி.டி.ஓ சாரிடம்தான் கேட்க வேண்டும்” என்று மழுப்பினார்.

மாரிமுத்து
மாரிமுத்து

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் அலுவலருமான காஜாமைதீன் பந்தே நவாஸிடம் பேசினோம், ``அந்த ஊராட்சியின் தலைவர் சுப்பு ராஜுவுக்கும், 9-வது வார்டு உறுப்பினரான மாரிமுத்துவுக்கும் இடையே ஏதோ பிரச்னை நிலவுகிறது. அதனால், அதிகாரிகள் மீது தேவையில்லாமல் புகார் கூறுகிறார். நாளையே அவரை ஊராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து பதவிப் பிரமாணம் செய்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சமாளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு