Published:Updated:

`சின்னத்தைக் கிழித்து வாக்காகச் செலுத்திய வாக்காளர்கள்!'- திண்டுக்கல்லில் `வடிவேலு பாணி'யில் காமெடி

வாக்குகள்
வாக்குகள்

பழனி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான 205 வாக்குகளில், 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 374 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இவற்றை இன்று காலையில் எண்ணும் பணி தொடங்கிது. தபால் வாக்குகளைப் பொறுத்தவரையில் வாக்கை ஒரு கவரிலும் அதற்கான உறுதிமொழி படிவத்தை மற்றொரு கவரிலும் என இரண்டு கவர்களில் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் ஒரே கவரில் இரண்டையும் வைத்துள்ளனர். பயிற்சி வகுப்பின்போது இதுபோல் தவறாகவே அரசு ஊழியர்களுக்கு அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அதிகாரிகளின் குளறுபடியினாலேயே தபால் ஓட்டுகள் கவரில் வைப்பதில் குளறுபடி ஏற்பட்டு ஒரே கவரில் வைத்து வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.

வாக்குகள்
வாக்குகள்

இதனால் தபால் வாக்குகளைச் செல்லாதவை என அறிவிக்கக் கூடாது என்று கூறி தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சி முகவர்களும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் வாக்கு எண்ணும்பணி நிறுத்திவைக்கப்பட்டது. அதன்பின் சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஒரே கவரில் வாக்கும் உறுதிமொழி சான்றும் வைக்கப்பட்டவை அனைத்தையும் செல்லாத ஓட்டுகளாக அதிகாரிகள் அறிவித்து வருகின்றனர்.

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்குப் பதிவான 17 தபால் ஓட்டுகளும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதேபோல் ஒட்டன்சத்திரத்தில் பதிவான 74 தபால் ஓட்டுகளில் 73 தபால் ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. ஒரே ஒரு வாக்கு மட்டும் செல்லுபடியானது. பழனி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான 205 வாக்குகளில், 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் செல்லாத ஓட்டுகளைப் பதிவு செய்துள்ளது நகைப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, தற்போது ஊராட்சி ஒன்றிய வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் சீலப்பாடி மற்றும் செட்டிநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்து வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்குகள்
வாக்குகள்

வாக்குப் பெட்டியைப் பிரித்துப்பார்த்தபோது ஒரு வாக்குப் பெட்டியில் சின்னத்தை மட்டும் கிழித்து வாக்காகச் செலுத்தப்பட்டிருந்தது. வாக்கு செலுத்தும்போது யாருக்கு ஓட்டு போட்டார்களோ அந்த சீட்டில் அதற்குரிய சின்னத்தை மட்டும் கிழித்து முத்திரை இட்டு பெட்டிக்குள் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

ஒரு பெட்டியில் தி.மு.க சின்னத்தை மட்டும் கிழித்துப்போட்டு சென்றுள்ளனர். வாக்குச் சீட்டுகளைப் பிரித்தபோது இந்தக் காட்சியைப் பார்த்து அரசு ஊழியர்கள் சிரித்தனர். இந்த ஓட்டுகள் அனைத்தும் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வடிவேல் காமெடியில் காமெடி நடிகர் முத்துக்காளை வாக்குச் செலுத்தியதைக் காண்பிப்பதற்காக தான் ஓட்டுப் போட்ட சீட்டை எடுத்துவந்து காண்பிப்பார். அதுபோல் நடந்துள்ளது இந்தச் சம்பவம்.

அடுத்த கட்டுரைக்கு