Published:Updated:

`ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டா போட்டி!’- இது கடலூர் உள்ளாட்சி தர்பார்

ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்கு சத்தமில்லாமல் பேரம் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது.

ஊராட்சி
ஊராட்சி

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியானது. அரசியல் களம் ஓரளவு ஓய்வடைந்த நிலையில் மீண்டும் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்கு சத்தமில்லாமல் தமிழகமெங்கும் பேரம் நடைபெற்று வருகிறது.

ஊராட்சி
ஊராட்சி

கடலூர் மாவட்டத்தில் முக்கிய புள்ளிகளே நேரடியாகக் களத்தில் இறங்கி பேரத்தை நடத்தி வருகின்றனர். வெற்றிபெற்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வாக்களித்து ஊராட்சி மன்றத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதுதான் விதி. இதில் பசையான வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் போட்டியில் இறங்கியுள்ளனர்.

வார்டு உறுப்பினர்கள், வாக்காளர்களிடம் சில நூறுகள் கொடுத்து வெற்றி பெற்றது போதாதென்று பல லட்சங்கள் கொடுத்து பதவி பெற்றிடவும் துடிக்கின்றனர். கடலூர் - வடக்குத்து ஊராட்சி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் இதில் சில அரசியல் புள்ளிகள் நேரடியாகப் போட்டியிட முடியாமல் தங்கள் பினாமிகளைக் களமிறக்கியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 29 மாவட்ட கவுன்சிலர், 287 ஒன்றிய கவுன்சிலர், 683 ஊராட்சி மன்றத் தலைவர், 5,040 வார்டு உறுப்பினர் என மொத்தம் 6,039 பதவிகளுக்குத் தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 4-ம் தேதி இவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இவர்களில் வெற்றி பெற்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவியைக் குறி வைத்து மற்ற வார்டு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதற்குச் சன்மானமாக ஆதரவளிக்கும் வார்டு உறுப்பினர்களுக்கு 50,000 முதல் 5,00,000 வரை பேரம் பேசி வருகின்றனர். தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளே களத்தில் நேரடியாக இறங்கி டீல் பேசி வருவது கவனிக்கத்தக்கது.

ஊராட்சி
ஊராட்சி

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பஞ்சாயத்தில் பேரம் தாறுமாறாக நடைபெற்று வருகிறது. சாதி பார்த்துதான் சீட் கொடுக்கப்படுகிறது என உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில் அடுத்த களேபரம் தொடங்கியுள்ளது. 15,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ள மிகப்பெரிய ஊராட்சியான வடக்குத்து கிராம ஊராட்சிக்கு துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதைத் தங்களுக்குச் சாதகமாக்கி, செலவு செய்த மொத்த பணத்தையும் பல மடங்காக ஒரே நாளில் அள்ளிவிட தயாராக குஷியுடன் வலம் வருகிறார்கள் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள்.