Published:Updated:

`டிச.27-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா?' - செக் வைக்கும் இடஒதுக்கீடு வழக்கு

`உள்ளாட்சித் தேர்தலில், துணைத் தலைவர் பதவிகள் இட ஒதுக்கீட்டு முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், தேர்தல் நடத்தப்படக்கூடாது' என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார், இந்திய குடியரசுக் கட்சித்தலைவர் செ.கு.தமிழரசன்.

செ.கு.தமிழரசன்
செ.கு.தமிழரசன்

`டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்' என்று தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. ஆனால், இப்போதும் `குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடைபெறுமா...' என்ற `திக் திக்' எதிர்பார்ப்பு குறைந்தபாடில்லை. காரணம்... இந்திய குடியரசுக் கட்சி.

`உள்ளாட்சிப் பதவிகளில் துணைத் தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தாமல், தேர்தல் நடத்தப்படக் கூடாது' என்று உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி இக்கட்சியின் சார்பில், ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள், `வரும் ஜனவரி 7-ம் தேதிக்குள், இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில்தான், நேற்று காலை 10 மணி அளவில் தமிழகத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்
`உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகியது ஏன்?' - விளக்கம் சொல்லும் ஸ்டாலின்

ஏற்கெனவே, கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், `உள்ளாட்சிப் பொறுப்புகளில் இடஒதுக்கீட்டு முறை சரிவர பின்பற்றப்படவில்லை' எனக்கூறி, தி.மு.க தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தேர்தலை ரத்துசெய்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், ``அடுத்து, புதியதாக ஓர் அறிவிப்பாணையை வெளியிட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும்'' என்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம், பதவி நீட்டிப்புக்கு எதிர்ப்பு... என அடுத்தடுத்து நீதிமன்றப் படிகள் ஏறியதில், ஆண்டுகள்தான் உருண்டோடின. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதமும் முடிந்துவிட்டது. முழுதாக 3 வருடங்கள் உள்ளாட்சித் தேர்தலே நடத்தப்படாமல், இழுத்தடிக்கப் பட்டுக்கொண்டே வந்தது.

இந்த நிலையில், எல்லாப் பிரச்னைகளும் ஒருவழியாக முடிவுக்கு வந்து, தேர்தல் ஆணையமே உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியையும் அறிவித்துவிட்ட நிலையில், இப்போது இந்திய குடியரசுக் கட்சி, `உள்ளாட்சிப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் துணைத் தலைவர் பதவிகளில், இந்திய அரசியல் சாசனத்தின்படி இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை; இந்தத் தேர்தலிலிருந்து கண்டிப்பாக இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். இல்லையென்றால், தேர்தல் நடத்தப்படக்கூடாது' என்று நீதிமன்றப் படியேறி உரிமைக் குரல் எழுப்பியிருப்பது திடீர் திருப்பமாகியிருக்கிறது.

இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனிடம் பேசினோம்...

செ.கு.தமிழரசன்
செ.கு.தமிழரசன்

``1989-ல் உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர்பாலிகா சட்டங்களில், `இந்திய அரசியல் சட்டத்தால் வலியுறுத்தப்படுகிற இட ஒதுக்கீட்டு முறை, அனைத்துத் தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்' என்பது ஒரு முக்கியமான பிரிவாக இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் மேயர், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர், நகர் மன்றத் தலைவர், ஒன்றியக் குழுத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்தல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தத் தலைவர்களுக்கு இணையாக `துணைத் தலைவர்' பதவியில் நியமிப்பதற்கான நபர்களைத் தேர்வுசெய்வதில் மட்டும் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை.

அதாவது, துணை மேயர், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர், நகர்மன்ற துணைத்தலைவர், ஒன்றியக் குழு துணைத் தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் என அனைத்துவகை துணைத் தலைவர் பதவிகளுமே இட ஒதுக்கீட்டின் முறையில் அல்லாமல், அவரவர் வசதிக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர். இதனால், சமூகநீதி ஒட்டுமொத்தமாக மறுக்கப்படுகிறது. எனவே, கட்டாயம் இங்கேயும் இட ஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டே ஆகவேண்டும்.

கருணாநிதியின் நண்பர்... திராவிட இயக்கத்தின் பேராசிரியர்... எப்படி இருக்கிறார் க.அன்பழகன்?

பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில்கூட துணைத் தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீட்டு முறைதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒடிசா மாநிலத்தில், இன்னும் ஒரு படி மேலே போய், `துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் கட்டாயம் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்பட வேண்டும்' என அம்மாநில அரசு சட்டமே இயற்றிவிட்டது. ஆனால், சமூக நீதியில் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்துவரும் தமிழ்நாட்டில், எங்களது இந்தக் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

மாநில தேர்தல் ஆணையர்
மாநில தேர்தல் ஆணையர்

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழ்நாடு முழுக்க துணைத் தலைவர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுமானால், 1,790 தலித் மக்கள் பொறுப்புகளுக்கு வந்துசேர முடியும். கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலேயே இதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி, பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிமன்றமும், `இதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்கவேண்டும்' என்று அறிவுறுத்தியிருந்தது. ஆனாலும் கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைப் படுத்தப்படவில்லை.

எனவே, இந்த முறை `இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் தேர்தலே நடத்தக்கூடாது' என்று தடை கேட்டிருக்கிறோம்!'' என்கிறார் உறுதியாக.