Published:Updated:

`பட்டியலினத்தவருக்குப் பதவி; கறுப்புக் கொடி எதிர்ப்பு! -பத்தே வாக்குகளில் தலைவரான பிச்சிவிளைப் பெண்

பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி
பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி

தூத்துக்குடியில் பிச்சிவிளை ஊராட்சியில் 10 வாக்குகள் மட்டுமே பெற்று பஞ்சாயத்து தலைவர் ஆகியுள்ளார் பெண் ஒருவர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், சாத்தான்குளம், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 8 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு 48 பேரும் 88 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 430 பேரும் 156 ஊராட்சித் தலைவர் பதவிக்கு 687 பேரும் 874 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 2,396 பேரும் என மொத்தம் 1,126 பதவிகளுக்கு 3, 561 பேர் போட்டியிட்டனர்.

1,14,237 ஆண்கள், 1,23,512 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 2,37,752 வாக்குகள் பதிவாகின. இது 59.43 சதவீத வாக்குப்பதிவாகும்.

பிச்சிவிளை ஊராட்சி
பிச்சிவிளை ஊராட்சி

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பிச்சிவிளை ஊராட்சியில் 6 வாா்டுகளிலும், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எழுவரைமுக்கி ஊராட்சியில் உள்ள ஒரு வாா்டு என 7 வார்டுகளில் ஒருவர்கூட வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. பிச்சிவிளை ஊராட்சித் தலைவா் பதவி சுழற்சியில் இம்முறை, பட்டியலினப் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டது. இப்பதவிக்கு ராஜேஸ்வரி, சுந்தராச்சி என இரண்டு பெண்கள் போட்டியிட்டனர்.

`வைராக்கியத்தைக் கைவிடல!' - விருதுநகர் அருகே ஊராட்சித் தலைவரான பெண் துப்புரவுப் பணியாளர்

இந்த ஊரில், மொத்தமுள்ள 785 வாக்குகளில் 6 வாக்குகள் மட்டுமே பட்டியலின வகுப்பைச் சோ்ந்தவா்களின் வாக்குகள். இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை எஸ்.சி பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தோ்தலைப் புறக்கணிக்கும் வகையிலும் மொத்தமுள்ள 6 ஊராட்சி உறுப்பினா் பதவிக்கும் ஒருவா்கூட வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. தேர்தல் அன்றும் தலைவர் பதவியைப் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதைக் கண்டித்து பிச்சிவிளை ஊராட்சியில் கிராம மக்கள், ஊர் முழுவதும் கறுப்புக் கொடிகட்டி தேர்தலைப் புறக்கணிக்கவும் செய்தனர்.

திருச்செந்தூா் ஊராட்சி
திருச்செந்தூா் ஊராட்சி

மொத்தமுள்ள 785 வாக்குகளில் 3 பெண்கள் உட்பட 13 பேர் மட்டுமே வாக்குகளைச் செலுத்தினர். இதில், 6 ஓட்டுகள் மட்டுமே பட்டியலினத்தவர்களுடையவை. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்ட நிலையில், ராஜேஸ்வரி என்பவர் 10 வாக்குகளைப் பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றிபெற்றுள்ளார். பதிவான வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர் வேட்பாளர் சுந்தராச்சி 2 வாக்குகளும் ராஜேஸ்வரி 10 வாக்குகளும் பெற்றனர். இவர்கள் இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளன.

`தலைவர் மட்டும் தேர்வான நிலையில், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படலாம்' என்கின்றனர் தேர்தல் அலுவலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு