Published:Updated:

`ஒரு பண்டலைத் திறக்கவே இல்லை!' - 2 வெற்றிச் சான்றிதழ்களால் கொதித்த காரைக்குடி

காரைக்குடி அருகே ஊராட்சி மன்றத் தேர்தலில் வென்றதாக இருவருக்கு வெற்றிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம்
வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம்

காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தேர்தலில் ஒரே பதவிக்கு இரண்டு வேட்பாளருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கியதால் குழப்பம் நீடிக்கிறது. சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேவி மாங்குடி என்பவர் போட்டியிட்டார். அவரின் கணவர் மாங்குடி, இரண்டு முறை தேர்தலில் வென்றவர். இந்தமுறை அது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், அவரது மனைவியைத் தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்.

வெற்றிபெற்றதாக போஸ்டர்
வெற்றிபெற்றதாக போஸ்டர்

தேர்தல் பிரசாரத்தின் போது இவரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று இரவு தேர்தல் முடிவுகளின்போது தேவி மாங்குடி 318 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றதாகச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்டு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியே கிளம்பினார்.

`ஏலம் இல்லை; மிரட்டல் இல்லை!' - உள்ளாட்சி நிர்வாகிகளைப் போட்டியின்றித் தேர்வுசெய்த தஞ்சை கிராமம்

அப்போது அங்கிருந்த மற்றொரு பெண் வேட்பாளர் பிரியதர்ஷினி, தேவி மாங்குடிக்கு வழங்கப்பட்ட சான்றிதழைக் கிழிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும்,`இன்னும் முழுமையாக வாக்கு எண்ணப்படவில்லை. நீங்கள் வெற்றி பெற்றது செல்லாது' என்று தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பதற்றம் ஏற்பட்டது.

காங்கிரஸ் மற்றும் தி.மு.க., தொண்டர்கள் போராட்டம்
காங்கிரஸ் மற்றும் தி.மு.க., தொண்டர்கள் போராட்டம்

அப்போது பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறையினர் இருதரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். மேலும், பிரியதர்ஷினி ஆதரவாளர்கள் மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து விடிய விடிய மறுவாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இதில், பிரிதர்ஷினி 63 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஒரு பதவிக்கு இரண்டு வேட்பாளர்களுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கியதால் காரைக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் காரைக்குடியில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, ``சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் ஒரு பண்டலை எண்ணாமல் தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டனர்.

இரண்டு சான்றிதழ்களுடன் எம்.எல்.ஏ ராமசாமி
இரண்டு சான்றிதழ்களுடன் எம்.எல்.ஏ ராமசாமி

அதனால் ஏற்பட்ட குழப்பம்தான். எனவே, மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டது" என்றனர். இரண்டு வெற்றிச் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டு குழப்பம் ஏற்பட்ட நிலையில், தேவி மாங்குடி தரப்பினர் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள்.