Published:Updated:

`வைராக்கியத்தைக் கைவிடல!' - விருதுநகர் அருகே ஊராட்சித் தலைவரான பெண் துப்புரவுப் பணியாளர்

சரஸ்வதி
சரஸ்வதி

விருதுநகரில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய பெண், தனது அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது கான்சாபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தவர் சரஸ்வதி. இவர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காகத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நினைத்து, தான் பார்த்து வந்த அரசுப் பணியை ராஜினாமா செய்தார். கடந்த முறை அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஸ்ரீ.வி, பேருந்து நிலையம்
ஸ்ரீ.வி, பேருந்து நிலையம்

ஆனால், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால், தனது அரசு வேலையைப் பறிகொடுத்து ஏமாற்றமடைந்த சரஸ்வதி இதே ஊராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், மீண்டும் இத்தேர்தலில் தலைவர் பதவிக்காகப் போட்டியிட்ட அவர் 1,113 வாக்குகள் பெற்று 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதுகுறித்து சரஸ்வதியிடம் பேசினோம். முதலில் பேசத் தயங்கியவர் பின்னர் பேச ஆரம்பித்தார், ``நான் ஒன்னாம் கிளாஸ்கூடப் படிக்கலய்யா. எனக்கு 50 வயசாகுது. நானும் என் கணவரும் இதே ஊராட்சியிலதான் துப்புரவுத் தொழிலாளியா வேலைபார்த்துட்டு வர்றோம். துப்புரவுத் தொழிலாளிங்கிறதுனால ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாப் பேசுவாங்க. அதுல அன்பாப் பேசுறவங்களைவிடவும், அதட்டிப் பேசுறவங்கதான் அதிகம்.

சரஸ்வதி
சரஸ்வதி

இந்த வேலைக்கு வந்துட்டா அந்த அதட்டல், கோபம் எல்லாம் பழகிப்போயிடனும். குப்பைகளைத் துப்புரவு செய்யச் சொல்றவங்க அவரவர் மனசுல இருந்து ஏற்றத்தாழ்வை துப்புரவு செய்ய மாட்டாங்க. நாம இந்த வேலை பார்க்குறதுனாலதான் ரொம்பத் தாழ்வா நினைக்குறாங்களோ, நாமளும் முன்னேற வழியில்லையான்னு யோசிச்சேன்.

அப்பதான் நாம ஏன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிடக் கூடாதுன்னு எனக்கு ஒரு யோசனை தோணுச்சு. என்னோட யோசனையை முதலில் கணவரிடம் சொன்னேன். `இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது'ன்னு சொன்னார். என்னோட பிள்ளைகள்தான், `நீங்க தைரியமா நில்லுங்கம்மா. வெற்றிபெற்றா நம்மளால முடிஞ்ச நல்லதைச் செய்வோம்'னு சொல்லி ஊக்கம் கொடுத்தாங்க.

`வைராக்கியத்தைக் கைவிடல!' - விருதுநகர் அருகே ஊராட்சித் தலைவரான பெண் துப்புரவுப் பணியாளர்

அந்த ஊக்கத்துலதான் மூணு வருசத்துக்கு முன்னால உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிச்சபோதே என்னோட வேலையை ராஜினாமா செய்தேன். ஆனா, அதுக்குள்ள தேர்தல் ரத்தாகிடுச்சு.

மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கிறது வரைக்கும் எப்படி சும்மா இருக்குறதுன்னு, இதே ஊராட்சியில் மீண்டும் தற்காலிக துப்புரவுப் பணியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். ஆனா, எப்போ தேர்தல் அறிவிச்சாலும் தலைவர் பதவிக்குப் போட்டியிடணுங்குற வைராக்கியத்துல இருந்து, நான் பின்வாங்கல. இந்த முறை தேர்தல் அறிவிச்சதும் தற்காலிகப் பணியையும் ராஜினாமா செய்துட்டு வேட்புமனுத்தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கினேன்.

`அவரால் நமக்கு நன்மை கிடைக்கும்!’- ஊராட்சி மன்றத் தலைவர் ஏலத்தை எதிர்த்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

எங்க ஊரு மக்கள் ஒத்துழைப்போட 213 ஓட்டுகள் வித்தியாசத்துல ஜெயிச்சுட்டேன். வெற்றி பெற்ற பிறகு, எனக்குள்ள ஒரு பொறுப்பு வந்ததுபோல உணர்கிறேன். நிச்சயம் என்னை நம்பி ஓட்டுப்போட்ட மக்களுக்கு நல்லதைச் செய்வேன்” என்றார் மகிழ்ச்சி பொங்க.

அடுத்த கட்டுரைக்கு