Published:Updated:

`அந்த 149 வாக்குகள் விழுந்திருந்தால்...!' -திருப்பூரில் கணவனை வீழ்த்திய மனைவி; வாகை சூடிய தம்பி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில், ‘வெற்றி பெறப்போவது யார்?’ என்பது பெரும் பரபரப்பாக இருந்தது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்தில் இருக்கிறது சடையபாளையம் கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் மொத்தம் 22 கிராமங்களும் 7,400 வாக்காளர்களும் உள்ளனர். இந்த ஊராட்சியின் தலைவராக வேண்டுமென 6 பேர் தேர்தல் களத்தில் இறங்கினர். போட்டியிட்ட ஆறு பேரில், மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெரியசாமி, அவருடைய மனைவி லட்சுமி, பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாக்கு கேட்டு வீதியில் இறங்க, மக்கள் குழம்பிப் போயினர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில், ‘வெற்றி பெறப் போவது யார்?’ என்பது பெரும் பரபரப்பாக இருந்தது.

பிரசாரத்தின் போது ஈஸ்வரன்
பிரசாரத்தின் போது ஈஸ்வரன்

கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடந்த தேர்தலில் இந்த ஊராட்சியில் மொத்தம் 5,488 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அண்ணன் பெரியசாமி 1,986 வாக்குகளும் அவருடைய மனைவி லட்சுமி 149 ஓட்டுகளும் பெற்றனர். அண்ணன் பெரியசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட அவரது தம்பி ஈஸ்வரனோ 2,147 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஈஸ்வரன் திருப்பூர் மாவட்ட தி.மு.க விவசாய அணி அமைப்பாளராக இருக்கிறார்.

`அவர் நிறைய ஊழல் பண்ணிட்டாரு..!' -திருப்பூரில் வேட்பாளருக்கு எதிராகக் களமிறங்கிய மனைவி, தம்பி

கடந்தமுறை இந்த ஊராட்சியின் தலைவராக இருந்த பெரியசாமியை எதிர்த்துக் களமிறங்கிய அவருடைய மனைவியும் தம்பியும் வாக்குகளைப் பிரித்து தோற்கடித்துள்ளனர். பெரியசாமியின் மனைவி 149 ஓட்டுகளைப் பிரிக்காமல் இருந்திருந்தால் கிட்டத்தட்ட வெற்றிக்கு மிக நெருக்கத்தில் பெரியசாமி வந்திருப்பார்.

ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றிருக்கும் ஈஸ்வரனிடம் பேசினோம். ``என் அண்ணன் மக்களை மதிக்க மாட்டார். சரியான அணுகுமுறையும் அவரிடம் இல்லை. அவரின் ஆணவப் போக்குக்குத் தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இப்போது வாங்கியிருக்கும் ஓட்டுகளும் 100 நாள் வேலைக்குச் செல்பவர்களிடம், வாக்குக்கு 1,000 ரூபாயைக் கொடுத்து வாங்கியது தான். என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து தருவதோடு, என்னால் முடிந்த சேவைகளைச் செய்வேன்” என்றார்.