அரசியல்
Published:Updated:

லோக்கல் போஸ்ட்

குற்றாலம்
பிரீமியம் ஸ்டோரி
News
குற்றாலம்

- தேன்மொழி

‘‘நேர்மையான அதிகாரிகள் தேவை!’’

கோவை மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி உள்ளிட்டோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்கள். ஆனால், பழைய அதிகாரிகளால் இன்னும் சர்ச்சையில் சிக்கியிருப்பது கோவை மாநகராட்சி நிர்வாகம்தான். மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கடந்த நான்கு ஆண்டுகளாக இணையத்தில் பதிவேற்றாமல் இருக்கிறார்கள். தீர்மானங்களைப் பதிவேற்ற உள்ளாட்சி முறைமன்ற நடுவம் உத்தரவிட்டு மூன்று ஆண்டுகளாகியும் தற்போது வரை பதிவேற்றப்படவில்லை. அதேபோல, ‘சுமார் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்தும் வெளிப்படைத்தன்மை இல்லை’ என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். கோவை மாநகராட்சி இணையதளத்திலேயே, View our smart city website (எங்கள் ஸ்மார்ட் சிட்டி இணையதளத்தைப் பார்க்க) என்று ஒரு பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை க்ளிக் செய்தால், அது வேறொரு டிராவல் செய்தி தொடர்பான இணைய பக்கத்துக்குச் செல்கிறது. இதனால், ‘கோவை மாநகராட்சி நிர்வாகத்திலும் நேர்மையான அதிகாரிகளைப் பணியமர்த்த வேண்டும்’ என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

லோக்கல் போஸ்ட்

கவலையில் குற்றாலம் வியாபாரிகள்!

குற்றாலத்தில் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத் தொடக்கத்தில் சீஸன் தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டியபோதிலும், கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படாததால், சீஸனை நம்பியிருக்கும் வியாபாரிகள் பெரும் இழப்பைச் சந்தித்தார்கள். இந்த ஆண்டும் மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் அவ்வப்போது குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியிருக்கிறது. அதனால், சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகம் வரக்கூடும் என எதிர்பார்த்திருந்த வியாபாரிகள், கடன் வாங்கி வியாபாரத்துக்குப் பொருள்களை வாங்கிக் குவித்துவிட்டார்கள். இந்தநிலையில், கொரோனா இரண்டாம் அலை கிளம்ப... தற்போது மீண்டும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த ஆண்டும் சீஸன்கால வருவாய் போய்விடுமோ என்ற பீதியில் இருக்கிறார்கள் வியாபாரிகள்.

மோசடியில் இது புது வகை!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள வடுவூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், அந்தப் பகுதியிலுள்ள பலருக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கித்தரும் வேலையைச் செய்துவந்திருக்கிறார். இந்தநிலையில், அவர்மீது மோசடிப் புகார்கள் காவல்துறைக்கு வரத் தொடங்கியிருக்கின்றன. ``எங்கள் பெயரில், எங்களுக்கே தெரியாமல் அதிக தொகையைக் கடனாகப் பெற்றிருக்கும் ராமகிருஷ்ணன், எங்களுக்குக் குறைந்த தொகையை மட்டும் கொடுத்து ஏமாற்றிவிட்டார்’’ என்று பலரும் அவர்மீது புகார் கொடுத்துவருகிறார்கள். விவசாயிகள் பலரிடமும் ஒரு லட்சம் ரூபாய் லோன் என்று சொல்லிவிட்டு, மூன்று லட்சம், நான்கு லட்சம் ரூபாயை லோன் வாங்கி கல்லாகட்டிவிட்டாராம். இப்படி இவர் மோசடி செய்த தொகை பல லட்சங்களைத் தாண்டுகிறதாம். ``விண்ணப்பங்களை முழுசா படிக்காம, காட்டுற இடத்துல கையெழுத்து போட்டா இப்படித்தான்...” என்று அந்தப் பகுதி மக்களை எச்சரித்திருக்கிறார்கள் காவல்துறையினர்!

லோக்கல் போஸ்ட்

‘‘அண்ணன் எப்படியும் அமைச்சராயிடுவார்!’’

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியமைக்கும் என்பது தெரியவர மே 2-ம் தேதி வரை காத்திருக்கும் சூழலில், தேனி மாவட்ட தி.மு.க தொண்டர்கள் மத்தியில் புதுவிதமான பெட்டிங் களைகட்டியிருக்கிறது. மாவட்டத்திலுள்ள கம்பம் தொகுதி தி.மு.க வேட்பாளர் ராமகிருஷ்ணனும், போடி தொகுதி தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனும் அமைச்சர் பதவி ஆசையில் இருக்கிறார்களோ இல்லையோ, ‘அண்ணன் எப்படியும் அமைச்சராயிடுவார்’ என்று அவர்களின் ஆதரவாளர்கள் தொடைதட்டிவருகிறார்கள். சுற்றுச்சூழல், கைத்தறி, கால்நடைப் பராமரிப்புத் துறை... என்று துறைகளைப் பட்டியலிடும் அவர்கள், தங்கள் அண்ணனுக்கு எந்தத் துறை கிடைக்கும் என்று தங்களுக்குள் பேசிக் கொள்வதோடு, அது தொடர்பான பெட்டிங்கிலும் ஈடுபடுகிறார்கள். எல்லாத்தையும் கேட்டுக் கொள்ளும் சாமானியர்கள், ‘‘இன்னும் பெட்டியவே திறக்கலையாம்... அதுக்குள்ள தங்களோட பெட் கட்டுறாங்க...’’ என்று நக்கல் அடிக்கிறார்கள்.

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

மூச்சிரைக்க ஓடும் யானைகள்...

காடுகளை ஆக்கிரமித்துள்ள மனிதர்களால், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகிலுள்ள ஊர்களுக்குள் புகுந்துவிடுகின்றன. அப்படி வரும் விலங்குகள்மீது மனிதர்கள் தாக்குதல் நடத்துவதால், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விலங்குகளும் மூர்க்கமாகிவிடுகின்றன. அப்படிப்பட்ட விலங்குகளைத்தான் கொம்பன், கொம்பேறி மூக்கன் என்றெல்லாம் விதவிதமாகப் பெயர் சூட்டி வில்லன்களாக்குகிறார்கள் மனிதர்கள். இப்படித்தான் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதியில் 10 யானைகள் குடும்பமாக முகாமிட்டு தண்ணீர் தேடி அலைந்து திரிகின்றன. ஆனால் தமிழக, ஆந்திர வனத்துறையினரும், காடுகளை ஆக்கிரமித்துள்ள மக்களும் மூர்க்கத்தனமாக விரட்டி விரட்டித் தாக்குவதால், யானைகள் மூச்சிரைக்க அங்கும் இங்கும் ஓடித் திரிகின்றன. யானைகளை நிரந்தரமாக இங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கும் வன ஆக்கிரமிப்பாளர்கள், “யானைங்க ஊருக்குள்ள வரப்போகுது... பட்டாசை ரெடியா வெச்சுக்கோங்க” என்று ஊர் மக்களை உசுப்பேற்றிவருகிறார்கள். இப்படி மாறி மாறி யானைகளை விரட்டுவதால், குட்டி யானைகள் மற்றும் வயது முதிர்ந்த யானைகளுக்கு உடல்நலம் பாதித்திருப்பதாக வருத்தப்படுகிறார்கள் கானுயிர் ஆர்வலர்கள்!