
கொரோனா இல்லாவிட்டாலும் ஜென்டில்மேனின் கதை மாறித்தான் போயிருக்கும்.
கொரோனா வந்ததால் ஒட்டுமொத்தத் தமிழ் சினிமாவும் முடங்கியிருக்கிறது. தியேட்டர் திறக்கவில்லை. ஓடிடியில் படம் போட்டால் பஞ்சாயத்து. ஷூட்டிங் நடத்த முடியவில்லை என்று தமிழ் சினிமாவுக்கு சோதனை மேல் சோதனை. சரி, அதை மறக்கணும்னா கொஞ்சம் கலகலப்பா யோசிச்சுப் பார்க்கணும்ல. இதே லாக்டௌன் ஸ்கிரீனுக்கு உள்ளேயும் இருந்ததுன்னா நம்ம தமிழ் கிளாசிக் சினிமாக்கள் எல்லாம் எப்படி இருந்திருக்கும்?
டீச்சர்னாலே உங்களுக்கு நினைவுக்கு வர்றது ‘பிரேமம்’ மலர் டீச்சராவோ ‘முந்தானை முடிச்சு’ கிளாஸ் டீச்சராவோ ‘நாட்டாமை’ ராணி டீச்சராவோ இருக்கலாம். ஆனால் என்னை மாதிரி பசங்களுக்கு டீச்சர்னதும் நினைப்பு வர்றது ‘கடலோரக் கவிதைகள்’ ஜெனிபர் டீச்சர்தான். இப்போ முட்டத்துல சின்னப்பதாஸுக்கு நேரடியா கிளாஸ் எடுக்க முடியாது. அதனால வீட்டிலிருந்தே ஜெனிபர் டீச்சர் ஆன்லைன் கிளாஸ் எடுக்க, பீச் மணலில் அனா, ஆவன்னா கிறுக்கிட்டிருப்பார் சின்னப்பதாஸ். ‘தப்பு செஞ்சா பெஞ்ச்மேல ஏறி நிக்கணும்’னு ஜெனிபர் டீச்சர் சொல்லவும் சட்டுன்னு பாறைமேல ஏறி நின்னுடுவாரு. ஆனா போன், காலை மட்டும் போகஸ் பண்ண, கலங்கிப்போயிடும் ஜெனிபர் டீச்சர். ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை மட்டன் வாங்க முடியாத சோகத்தில ஜெனிபர் டீச்சர் இருக்க, வீடியோ காலில் வஞ்சிரம் மீனைத் தூக்கிக்காட்டி வருத்தத்தைப் போக்குவான். அஞ்சாங்கிளாஸுக்கும் பப்ளிக் எக்ஸாம்கறதால அரண்டுபோன சின்னப்பதாஸுக்கு கொரோனா வந்து பால் வார்த்துச்சு. ‘தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ். பாஸ் பாஸ் எல்லாமே ஆல் பாஸ்’னு பாடிக்கிட்டிருப்பான் சின்னப்ப தாஸ். இது சாம்பிளுக்குத்தான். மத்தபடி எல்லா பாரதிராஜா படத்திலும் தேவதைகள் மாஸ்க் போட்டு குரூப் டான்ஸ் ஆடும். ஹீரோ ஹீரோயினைத் தொட்டதும் கடல் அலை ப்ரீஸ் ஆகிறது, பறவைகள் அந்தரத்தில் நிக்கிறதெல்லாம் கிடையாது. தொட்டாத்தானே? ஒவ்வொரு தனிமனிதரும் ரெண்டு கஜம் இடைவெளியைக் கடைப்பிடிக்கணும்ல?

கொரோனா இல்லாவிட்டாலும் ஜென்டில்மேனின் கதை மாறித்தான் போயிருக்கும். மெடிக்கல் கவுன்சலிங்கிற்குப் பதில் நீட் வந்திருக்கும். இருக்கும் கொஞ்சநஞ்ச காசையும் கோச்சிங்கிற்குக் கொடுத்து, எக்ஸாம் சென்டராக ஒரு நடுக்காட்டில் தன் ராசியான மோதிரம் உட்பட எல்லாவற்றையும் கழற்றி வெளியே வைத்துவிட்டுப் போய் எழுதி பெயிலாகியிருப்பார்கள் கிச்சாவும் ரமேஷும். அடுத்த தேர்வுக்கு வசதியில்லாமல் பிசினஸ் பார்ட்னர்களாகி கிச்சா அப்பளக் கம்பெனியைத் தொடங்கியிருப்பார்கள். இவர் கதை இப்படின்னா, நம்ம வசூல்ராஜாதான் வசூல் பண்ணி ஏகப்பட்ட காசைச் சேர்த்து வெச்சிருப்பாரே, நீட் கோச்சிங் சென்டர் சேர்ந்திருப்பார். அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சிருக்கும் உண்மையான வசூல்ராஜாவே அவங்கதான்னு. அப்புறம் ஆள்மாறாட்டம் பண்ணி நீட் எழுதி மெடிக்கல் காலேஜில் சேர்ந்துடுவார். ஆனா கொரோனா ட்ரீட் மென்டுக்குக் கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தார்னு அவரைத் தனி வார்டுல வெச்சிடுவாங்க. அதிலேயும் வார்டு நம்பர் ராசி நம்பரா இருக்கணும்னு சண்டை போடுவார் கருணாஸ்.
நம்ம ‘தேவர் மகன்’ சக்தியை எடுத்துக்கங்க. லண்டனிலிருந்து தூவலூருக்கு வந்த மாத்திரத்தில் சின்னய்யா சக்திவேலை க்வாரன்டீன் செய்திருப்பார்கள். ஒரே ஒரு கோயிலைத் திறந்ததற்குத்தான் அவ்வளவு களேபரமும். ‘ஏது, கொரோனா காலத்துல கோயில் வேறயா?’ என அரசாங்கமே அதை மூடிவிடுவதால் ரெண்டு குடும்பமும் சண்டை போட விஷயம் இல்லாமல் சமாதானமாகிப்போயிருப்பார்கள்.
கொரோனாவால் நல்லது நடக்கும் ஒரே சினிமா கேரக்டர் துள்ளாத மனமும் துள்ளும் குட்டியாகத்தான் இருக்கும். மாஸ்க் போட்டபடி சண்டைகள் போட்டுத் திரிவார். அதனால் ருக்குவுக்கும் குட்டியின் முகம் தெரியாமல் போயிருக்கும். ரவுடி என்கிற எண்ணமும் தோன்றியிருக்காது.

உலக வரலாற்றிலேயே சோஷியல் டிஸ்டன்சிங் செய்துகொண்ட முதல் ஆள் ‘படையப்பா’ நீலாம்பரிதான். அமெரிக்காவிலும் முழு லாக்டௌன் என்பதால் ‘இதை நான் சொல்லியே ஆகணும், நீ அவ்ளோ அழகு’ன்னு சொல்ல ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா அமெரிக்கா போயிருக்க மாட்டார். ‘வீட்டுல சும்மாதானே இருக்கே, கித்தாரைத் துடைச்சுவைடா’ன்னு அவங்க அப்பா மண்டையில நாலு போட்டிருப்பாரு. என்னதான் லாக்டௌன்னாலும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில சேவல் சண்டை நடக்கும். மேலே மதுரை மாநகர காவல்துறையின் ட்ரோன் பறக்கும். பேட்டைக்காரனும் கே.பி.கருப்பும் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு கையில் சேவலோடு தலைதெறிக்க ஓடியிருப்பாங்க.
‘காதல் கோட்டை’ க்ளைமாக்ஸே நடந்திருக்காது. ரயில் ஓடினாத்தானே கமலி ஸ்வெட்டரைக் கண்டுபிடிச்சிருப்பாங்க. ‘என்னங்கடா பார்க்காத காதல்’னு கடுப்பாகி ஜூம் மீட்டிங்ல ரெண்டுபேரும் கடலை வறுத்து காதல் கோட்டை கட்டியிருப்பாங்க. பாலா படத்து கேரக்டர் களெல்லாம் கொரவளையக் கடிக்கிறதுக்கு முன்னால ‘கொரோனா’ வந்துடுமோ’ன்னு யோசிச்சிருப்பாங்க. பாட்டுக்கச்சேரி, நடனப் போட்டியெல்லாம் நடக்க வாய்ப் பேயில்லைங்கிறதால பாவம் இந்த மைக் மோகன் உருவாகியே இருக்கமாட்டார்.
விஜய் நடிச்ச ‘சச்சின்’ படத்தில வடிவேலுவும் காலேஜ் ஸ்டூடன்ட். கேட்டா ‘நீங்கல்லாம் பாடம் சொல்லித்தந்த வாத்தியாரை விட்டுட்டுப் போயிடுவீங்க. நான் அப்படியா?’ன்னு கொடூரமான காரணம் சொல்லுவார் ‘அய்யாச்சாமி’ வடிவேலு. ஆயிரம் அரியர் இருந்தாலும் கோர்ஸ் முடிஞ்சு காலேஜ் விட்டுப் போய்த்தான் ஆகணும். அட, அந்த லாஜிக்கைத்தான் மதிக்கலை. இப்போ நம்ம எடப்பாடி பழனிசாமி அரியர் எக்ஸாமுக்கும் சேர்த்து பாஸ்மார்க் போட்டுட்டார்ல, இப்பவாவது வெளியேறுவாரா ‘அரியர்’ அய்யாச்சாமி?
நம்ம ஆலமரத்து நாட்டாமைங்க எல்லாம் சொம்புக்குப் பதிலா ஹெட்செட்டுடன் ஆன்லைன்ல பஞ்சாயத்து நடத்துவாங்க. ‘நீதிடா, நேர்மைடா, மைக்கை ம்யூட்ல போடுங்கடா’ன்னு சொல்றதோட நிறுத்திக்கணும். ‘மேலத்தெரு ராசு வீட்டுல ஆரும் அன்னந்தண்ணி புழங்கக்கூடாது. இது நாட்டாமையோட தீர்ப்பு’ன்னு சொன்னார்னா, ‘கொரோனாவால ஊர்ல அத்தனை பய வீடும் அப்படித்தான் இருக்குய்யா யோவ்’ன்னு ஊரே சொல்லிடும். இன்னும் கொஞ்சகாலம் பின்னோக்கிப் போனா, சின்னவயசிலயே ட்வின்ஸ் பிரிஞ்சுடறது, ஒருத்தர் போலீஸா, இன்னொருத்தர் ரவுடியா மாறுறது, அப்புறம் பேமிலி சாங் பாடறதெல்லாம் இருக்காது. ஏன்னா, பெரும்பாலும் பிரிஞ்சது ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி குடிக்கப் போனப்பதானே. இப்பத்தான் ரயிலே ஓடலையே!