
கு.பரமேஸ்வரி
2020 மார்ச்... இந்தியா மறக்க முடியாத மாசம். குட்டியூண்டு கொரோனா வைரஸ், ‘ஜனதா கர்ஃப்யூ’ என்ற வார்த்தையை நமக்கு அறிமுகப்படுத்தி, கலவரப்படுத்தி, வீட்டுக்குள் சிறைப்படுத்தினு எல்லா வகையிலும் நம்மள படுத்தியெடுக்க ஆரம்பிச்ச மாசம். அந்த லாக்டௌன் நினைவுகளை இங்க கொஞ்சம் ரீவைண்டு பண்ணலாமா?!

க்வாரன்டீன் களேபரங்கள்!
கோவிட்-19 வைரஸ் நமக்கு டிக்ஷனரியிலயிருந்து சொல்லிக் கொடுத்த பல வார்த்தைகள்ல முக்கிய மானது... க்வாரன்டீன். அப்டீன்னா என்னன்னு நாம யோசிச்சிட்டு இருக்கும்போதே, `கொஞ்சம் இக்கட சூடு'னு தெருவெல்லாம் தகரம் அடிச்சுத் தடுத்தாங்க. குழந்தைக்கு டயப்பர் வாங்கப்போன அண்ணாக்களை எல்லாம் டிராஃபிக் போலீஸ் சிறையிலிருந்து தப்பிச்ச கொலைக் குற்றவாளி மாதிரி டீல் பண்ணினாங்க. அப்புறம் ஒரு கட்டத்துல, மக்கள் லாக்டௌனை டீல் பண்ண ஆரம்பிச்சு, ‘லாக் டௌன் எப்படி இருக்குனு சுத்திப்பார்க்க ரவுண்ட்ஸ் வந்தோம் சார்’னு சொல்லி லத்தி அடி வாங்கினாங்க.

பள்ளி, கல்லூரி குளோஸ்டு!
‘வானிலை அறிக்கை’ ரமணன் சாருக்கு அப்புறம் நம்ம மாணவர்களுக்கு ஹீரோ ஆனார்... மிஸ்டர் கோவிட் 19. லாக்டௌனால பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட, ‘கடவுளே, இந்த கொரோனா வைரஸ் நல்லபடியா வளரணும்’னு வேண்டிக்கிட்ட பயலுகதேன், நம்ம பயலுக.


அன்பே டல்கோனா!
லாக்டௌனால வீட்டுல ரொம்ப மூச்சுத் திணறுனது, கிச்சன்தான். காலையில அவசர அவசரமா லஞ்ச் பாக்ஸ் கட்டிக்கிட்டு ஓடின கூட்டமெல்லாம், மூணு வேளையும் சூடா சாப்பாடு, 11 மணிக்கு ஜூஸ், 5 மணிக்கு பஜ்ஜினு வாழ்ந்தாங்க. அதுலயும், ‘நான் சமையல் கத்துக்கப் போறேன்’னு டாடீஸ் லிட்டில் பிரின்சஸ்கள் எல்லாம் கிச்சனையே தலைகீழாக்கினது தனி சேப்டர். ‘லாக்டௌன்ல கேக் செய்யாத வீடு வீடே இல்ல’ங்கிற புது விதி எழுதப்பட்டது. அதிலும், டிரெண்டான அந்த டல்கோனா காபியை மறக்க முடியுமா?!

’மண்டே மார்னிங் புளூஸ்... ரெயின்போ ஆனது!
திங்கள்கிழமை காலைலனு சொன்னாலே `ஹய்யோ'னு சரியுற மனசு, லாக்டௌன்ல ஆல் டே ஹாலிடேல இருந்தப்போ, ‘யாரு மண்டேவா? சூனா பானாட்ட பேசுறியா..’ ரேஞ்சுக்கு தெனாவெட்டாச்சு. இன்னிக்கு என்ன கிழமை, தேதினு ஒண்ணும் தெரியாம உலகத்தையே வாழவெச்ச பெருமை, லாக்டௌனையே சேரும்.

லாக்டௌனையே பார்த்துட்டோம், இதைப் பார்க்க மாட்டோமா!
பல மாத ஊரடங்கு வாழ்க்கையில, இருக்கிறதை வெச்சு சமாளிச்சு வாழக் கத்துக்கிட்டோம். தொழில், வேலைனு எத்தனை இழப்புகளை சந்தித்தபோதும், ‘இதுவும் கடந்துபோகும்’னு மீண்டு வந்தோம். நியூ நார்மல்ங்கிற பேருல ஒவ்வொரு தனி மனுஷனும் பல பிரச்னைகளைச் சந்திச்சு, சமா ளிச்சு வந்தப்போ நம்ம கண்ணாடி நம்மகிட்ட சொல்லுச்சு... ‘எங்க தலைக்கு தில்ல பார்த்தியா?!