லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஒருநாள் உன் இலக்கினை அடைவாய்!

லொரெட்டா சிரால்டொ
பிரீமியம் ஸ்டோரி
News
லொரெட்டா சிரால்டொ

22 வயதைத் திரும்பிப் பார்க்கிறேன்

லொரெட்டா சிரால்டொ, நிர்வாக இயக்குநர், டாக்டர் லொரெட்டா ஸ்கின்கேர், இப்போது வயது 65

லொரெட்டா மிக எளிய பின்புலத் திலிருந்து வந்தவர். தந்தை சிறிய வயதிலேயே குடும்பத்தை விட்டுப்பிரிய, தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார். 16 வயது முடிந்த அடுத்த நாளே தன் வேதியியல் ஆசிரியரின் சிபாரிசில் வேதிப்பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் லேபிள்கள் தட்டச்சு செய்யும் பணியில் சேர்ந்தார். படித்துக்கொண்டே பணியாற்றிய லொரெட்டா, மருத்துவம் படித்து அதிலும் முதல் மாணவியாக வெற்றி பெற்றது பெரும் சாதனை.

நியூயார்க் மருத்துவக் கல்லூரியில் சேர நடத்தப்பட்டது அந்த நேர்முகத் தேர்வு. லொரெட்டாவின் அறிவுத்திறனைச் சோதிப்பதைவிட, சிங்கிள் பேரன்ட் வளர்ப்பு, 18 வயதிலேயே சொந்த உழைப்பு என அவரது பொருளாதாரப் பின்புலத்தையும், `அவரால் படிப்பைத் தொடர முடியுமா?' என்கிற கேள்வியையும் முன்வைத்தே கேள்விக் கணைகள் வந்து விழுந்தன. சோர்வடையாத லொரெட்டா, வெற்றிகரமாகத் தேர்வில் ஜெயித்து நியூயார்க் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். கிடைத்த ஒவ்வொரு நிமிடமும் படிப்பு, அது இல்லாத நேரம் அசராத உழைப்பு. 500 டாலர் ட்யூஷன் ஃபீஸ் கட்டுவதற்குள் மூச்சு முட்டிப்போனது. ஆனாலும் மனம்தளரவில்லை லொரெட்டா. இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சிறப்புப் பிரிவைத் தேர்ந்தெடுக்கும் நிலை வந்தபோது 1970-களின் பிற பெண்கள் போல மகப்பேறு மருத்துவத்தைத் தேர்ந்தெடுக்காமல், சரும மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்தார்.

சருமம் சம்பந்தப்பட்ட ஆய்வுகளில் குறிப்பாக, புறஊதா கதிர்கள் தாக்கத்தால் ஏற்படும் நோய்கள் பற்றிய ஆய்வுகளில் தீவிரமாக இறங்கினார். தன்னுடன் பயின்ற மருத்துவரையே திருமணம் செய்து கொண்டவர், இன்று நான்கு குழந்தைகளுக்குத் தாய்.

40 ஆண்டுகளாக இனிய இல்லறம் தொடர்கிறது. இரு பிள்ளைகள் சரும மருத்துவம் பயின்று, இன்று லொரெட்டாவுடன் பணியாற்றி வருகிறார்கள்.

மருத்துவத் துறையில் தனக்குள்ள அனுபவத்தைப் பயன்படுத்தி 23 வயதில் `தி ஆர்ட் ஆஃப் ஷேவிங்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். கணவனும் மனைவியும் 12,000 டாலருக்குத் தங்கள் காரை விற்று அந்தப் பணத்தை முதலீடாகக் கொண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினர். லொரெட்டாவின் 34 வயதில், உலகப்புகழ் பெற்ற பி&ஜி நிறுவனம், ஜில்லெட் பிராண்டு விற்பனையாளராக இவரது `ஆர்ட் ஆஃப் ஷேவிங்'கை அறிவித்தது.

50 விற்பனை நிலையங்கள், 1,000 விநி யோகஸ்தர்கள் என்று பிரமாண்டமாக வளர்ந்தது இவரது நிறுவனம். இவை தவிர சருமப் பாதுகாப்பு க்ரீம்களும் `தி லொரெட்டா பிராண்டு' என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளன.

லொரெட்டா சிரால்டொ
லொரெட்டா சிரால்டொ

முழுக்க முழுக்க பெண்கள் குழுவைக்கொண்டே தன் வர்த்தகத்தை நிர்வகித்து நடத்தி வருகிறார் லொரெட்டா. ‘சமூகம் உங்கள் சருமம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கற்பிதத்தை நிறுவினால், அதை உடையுங்கள்’’ என்கிறார் லொரெட்டா.

‘`20 வயது முதலே சருமத்தின் மேல் அக்கறை காட்டுங்கள்; ஆரோக்கியமான உணவு, நடை பயிற்சி, மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்றவை இருந்தாலே சருமம் பொலிவாக இருக்கும்.குடும்பத்துக்கும் பணிக்குமான பேலன்ஸ் மிக முக்கியம்'' என்கிற லொரெட்டா, ``அதை சரிவர சமன்செய்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்'’ என்றும் சொல்கிறார்.

22 வயதுப் பெண்ணாகத் தன்னை மீண்டும் சந்திக்க நேர்ந்தால், “ `நீ முன்னெடுப்பது சரியானது. உனக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய். வாழ்க்கை நீளமானது. பொறுமையுடன் கடினமாக உழைத்துக்கொண்டே இரு. என்றேனும் ஒருநாள் உன் இலக்கினை அடைவாய். எதுவுமே எளிதாகவும் விரைவாகவும் இங்கு கிடைப்பதில்லை' என்றே சொல்வேன்'' என்கிறார் லொரெட்டா!