தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வாழ்வை இனிக்கச் செய்ய இரண்டு விஷயங்கள்!

லவ்
பிரீமியம் ஸ்டோரி
News
லவ்

லவ் @ லாக் டெளன்

`எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்...' என்று பாடி கணவனும் மனைவியும் ரொமான்ஸ் செய்வதைத் திரைப்படக் காட்சிகளில் வேண்டுமானால் ரசிக்கலாம்.

உண்மையிலேயே கணவன் வெளியில் எங்கும் செல்லாமல் 24 மணி நேரமும் மனைவியுடன் வீட்டிலேயே இருக்கும்போது, அந்தத் தம்பதி எந்தவிதமான அன்புத் தொல்லைகளையும் வம்புத் தொல்லை களையும் சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்த ஒரு மாத கால லாக் டௌன் சம்பவங்களே சாட்சி!

வாழ்வை இனிக்கச் செய்ய
இரண்டு விஷயங்கள்!

எப்போது தொடங்கி எப்போது முடிகிறது என்றே தெரியாத அளவுக்குக் கடுமையாக இருக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம், இதற்கு நடுவில் செய்தே ஆக வேண்டிய தினசரி வீட்டு வேலைகள், சமையல், குழந்தைகள் பராமரிப்பு என்று வாட்டி வதைக்கும் பணிகளுடன் தொடர்ந்துகொண்டே போகிறது லாக் டௌன் காலம். இந்தச் சூழலானது கணவன் மனைவிக்கு நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்பைவிட மன உளைச்சலின் உச்சத்துக்குச் செல்லும் அபாயத்தையே அதிகம் வழங்குகின்றன.

`காலையிலேயிருந்து அந்த கம்ப்யூட்டரையே கட்டிட்டு அழறீங்களே... இங்க ஒருத்தி தனியா வீட்டு வேலையெல்லாம் செஞ்சிட்டு இருக்கேனே... கொஞ்சமாவது ஹெல்ப் பண்ணணும்னு தோணுதா?' என்று மனைவி தன் கணவனிடம் புலம்ப, வீடியோ கால் மீட்டிங்கில் தன் மேனேஜரிடம் திட்டு வாங்கிய கடுப்பில் இருக்கும் கணவன், `என்ன புரிஞ்சிக்கவே மாட்டியா? இங்கே நானும்தான் வேலை பார்த்துட்டிருக்கேன். சும்மா இருந்தா யாராவது சம்பளத்தைக் கொடுத்துடுவாங்களா?' என்று எரிந்து விழ, அங்குதான் ஆரம்பிக்கிறது லாக் டௌன் ஃபேமிலி வார்!

லவ்
லவ்

இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் தம்பதிகளுக்குள் கருத்துவேறுபாடுகள் வருவது வழக்கம்தான். அந்தக் கருத்துவேறுபாடுகளைக் கடந்து காதலோடு இருப்பதைத்தான் `கப்புள் கோல்' என்கிறோம். அப்படி இந்த லாக் டௌன் காலத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் மனக்கசப்புகளைக் கடந்து இனிமையான வாழ்க்கையை வாழ்வது எப்படி? ஆலோசனை அளிக்கிறார் உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு.

“தினமும் காலையில் எழுந்து வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் செல்வது, அலுவலகம் முடிந்து வீட்டுக்கு நேரடியாக வருவது அல்லது வெளியில் சென்று சற்று இளைப்பாறி வருவது, பின்பு வீட்டில் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவது, இரவு உறக்கம், மீண்டும் காலையில் எழுந்து அலுவலகத்துக்குத் தயாராவது... இப்படி ஓடிக்கொண்டிருந்த ஆண்களுக்கும், காலையில் எழுந்து வீட்டு வேலைகள், சமையலை முடித்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் அல்லது அடுத்தடுத்து காத்திருக்கும் வீட்டு வேலைகளைக் கவனிக்க காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த பெண்களுக்கும் இப்போது ஏற்பட்டுள்ள `லாக் டௌன்' என்கிற வீட்டுச் சிறை நிச்சயமாக ஒரு சவால்தான். இந்த லாக் டௌனால் அவர்களின் வேலைகளில் ஏற்பட்ட மாற்றங்களைவிட மனதளவில் ஏற்பட்ட மாற்றங்கள்தாம் அதிகம்.

கணவன் மனைவி மட்டுமல்ல... இங்கு எல்லாருமே தங்கள் அன்புக்குரியவரிடமிருந்து எதிர்பார்க்கும் முதல் முக்கியமான விஷயம் தங்களுக்காக அவர்கள் ஒதுக்கும் நேரம்தான்.

இந்த லாக் டௌனில் கணவன் மனைவியைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு விஷயம், நேரம். அதாவது லாக் டௌன் இல்லாத ரெகுலர் நாள்களில் தம்பதியினர் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு வெளியிலும் வீட்டிலும் வேலைகள் இருக்கும். அவர்கள் பேசிக்கொள்வதற்கு அதிக நேரம் இருந்திருக்காது. அப்படிப் பேசிக்கொண்டாலும் அப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், கணவன் மனைவி இருவரும் 24 மணிநேரமும் ஒருவர் கண்முன் மற்றொருவர் நடமாடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இருவரும் பேசிக்கொள்ள நிறைய நேரமும் வாய்ப்புகளும் இருக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் அவர்களுக்கிடையே `வீட்டு வேலை களை யார் செய்வது' என்பதில் தொடங்கி, `நீ என்ன புரிஞ்சிக்கவே மாட்டியா' என்பதுவரை பலவிதமான கருத்துவேறுபாடுகளும் மனக்கசப்புகளும் ஏற்படலாம்.

முன்பு அலுவலகம், வீடு என்று தனித்தனியே சென்று வரும்போது அலுவலகப் பிரச்னைகளை மறந்து இளைப்பாற வீடு சிறந்த இடமாகவும், வீட்டுப் பிரச்னைகளை மறக்க அலுவலகம் ஒரு தீர்வாகவும் இருந்துவந்தது. ஆனால், இப்போது வீடே அலுவலகம் என்றான பிறகு இரண்டு இடங்களிலும் ஏற்படும் பிரச்னைகளை ஒன்றாகப் போட்டுக் குழப்பிக்கொண்டு மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்று விடுகிறார்கள். குறிப்பாக, கணவன் மனைவி இருவருமே ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்றால் அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்.

லவ் @ லாக் டெளன்
லவ் @ லாக் டெளன்

உங்களுக்குள் எதனால் சண்டை வருகிறது என்று தம்பதியரிடம் விசாரித்தால், `என் துணை எனக்காக நேரம் ஒதுக்குவதே இல்லை... நான் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பதே இல்லை; புரிந்துகொள்வதேயில்லை' என்கிற புலம்பலையே அதிகம் கேட்க முடியும். கணவன் மனைவி மட்டுமல்ல... இங்கு எல்லாருமே தங்கள் அன்புக்குரியவரிடமிருந்து எதிர்பார்க்கும் முதல் முக்கியமான விஷயம் தங்களுக்காக அவர்கள் ஒதுக்கும் நேரம்தான்.

தம்பதியருக்கிடையே அன்பையும் நெருக்கத்தையும் அதிகரிக்க உதவும் மற்றொரு முக்கியமான விஷயம்... ஒருவரை மற்றொருவர் புரிந்துகொள்வது. இந்த இரண்டு விஷயங்களை மட்டும் தம்பதியினர் புரிந்துகொண்டால் இந்த லாக் டௌனில் மட்டுமல்ல, லைஃப் லாங் வரை கருத்துவேறுபாடுகளே வராது.

அலுவலக வேலை, வீட்டு வேலைகளுக்கு நடுவிலும் தம்பதியர் ஒருவர் மற்றொருவருக் காகச் சிறிது நேரம் ஒதுக்கிச் சிரித்துப்பேசலாம். வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம். அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தலாம்.

கணவன் மனைவி இருவரும் அதிக நேரம் சேர்ந்து இருந்தாலே அவர்களுக்கு இடையே சின்ன சின்ன கருத்துவேறுபாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். இருந்தாலும் உங்களுக்கிடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகளுக்கு நடுவே... நீங்கள் உங்கள் துணைக்குத் தரும் ஜென்டிலான நெற்றி முத்தமும், மென்மையான சிறு அணைப்பும் எல்லாவித மனக்கசப்புகளையும் நீக்கி வாழ்வை இனிக்கச் செய்யும். இதை மறந்துவிடாதீர்கள்” என்றார் வசந்தி பாபு.

லாக் டௌன் காலகட்டத்தை அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்க வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பாகவே கருத வேண்டும். லாக் டௌன் முடிந்தபிறகு எப்போதும்போல அந்தப் பழைய வாழ்க்கை ஓட்டத்தில்தான் ஓடப் போகிறோம். அதுவரையில் உங்களுக்குக் கிடைத்துள்ள பொன்னான இந்த நேரத்தை உங்கள் குடும்பத்தினருடனும் வாழ்க்கைத் துணையுடனும் செலவிடுங்கள். இல்லறம் இனிக்கும்.

அப்புறமென்ன, நீங்களே சொல்வீர்கள்... ஹேப்பி லாக் டௌன்!