ஒரே விஷயத்தை மையமாக வைத்து மூன்று பெயர்கள் கடந்த வாரம் தமிழ்நாட்டில் ட்ரெண்டிங்கில் இருந்தன. அஸ்வினி, செங்கேணி, மு.க.ஸ்டாலின்.
கோயிலில் நடக்கும் சமபந்தி போஜனம் எனும் அன்னதான நிகழ்வில் சாப்பிட அனுமதிக்காமல் வெளியேற்றப்பட்டதற்கு எதிராக எழுந்த ஒரு பெண்ணின் உரிமைக் குரல் அஸ்வினியினுடையது.
நாடோடிப் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் அஸ்வினி. கடந்த வாரம் சமபந்தி போஜனத்தில் கலந்துகொள்ள அஸ்வினி ஒரு கோயிலின் உள்ளே சென்றபோது, கோயிலுக்குள் வரக்கூடாது என்று சாதியைக் காரணம் காட்டி அங்குள்ள மாற்று சாதியினரால் வெளியேற்றப்பட்டிருக்கிறார். வெளியே வந்த அஸ்வினியின் கோபம் சமூக வலைதளங்களில் காணொலியாக பகிரப்பட்டது. அஸ்வினிக்கு நியாயம் கேட்டு பலரும் பதிவிடவே, உடனடியாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அஸ்வினியுடன் ஒரே மேசையில் உட்கார்ந்து கோயில் அன்னதானத்தில் உணவருந்தினார். வழக்கம்போல பல ஊடகங்கள், ”அஸ்வினிக்கு மறுக்கப்பட்ட உணவு கிடைத்தது” என்று எழுதின.

ஆனால் அஸ்வினியோ, தனக்கு கோயிலில் மறுக்கபட்டது உணவு அல்ல, மரியாதை (Dignity) என்பதை மீண்டும் சுட்டிக் காட்டி பேசினார். அமைச்சரே தன்னுடன் உட்கார்ந்து உணவருந்தியது மகிழ்ச்சியும், மரியாதையும் அளித்தது என்றாலும் இது ஒரு நாள் நிகழ்வாக முடிந்துவிடக்கூடாது. இந்த மரியாதை தங்களுடைய வருங்கால சந்ததியினருக்கும் நிலைக்க வேண்டுமானால் தங்கள் இனத்தவர்களுக்கு சரியான கல்வி வசதி வேண்டும் என்றார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் இருக்கும் தங்கள் இனத்தை பட்டியலினத்தவராக அறிவிக்கும்படி அஸ்வினி கோரிக்கை விடுத்துள்ளார். அதுபோக பள்ளி செல்லும் தங்கள் பிள்ளைகள் சரியாக படிக்கவில்லை என்றால் மற்ற சமூகத்து பிள்ளைகளுக்கு அக்கறையாக கல்வியின் அருமையை சொல்லிக் கொடுப்பது போல ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகளுக்கும் அதிக கவனம் எடுத்து படிப்பில் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும் என்று அஸ்வினி அரசிடம் கேட்டிருக்கிறார்.
இட ஒதுக்கீட்டின் மூலம் படித்து, இட ஒதுக்கீட்டின் மூலம் வேலை கிடைக்கப்பெற்ற பல பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) வகுப்பைச் சார்ந்தவர்களே இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் இல்லாமல் பேசும் சூழலில் கல்வியறிவு இல்லாத பெண் ஒருவர் இட ஒதுக்கீடு கேட்டிருப்பது பொது சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்.
தனக்கு மறுக்கப்பட்ட உரிமைக்காகக் குரல் எழுப்பியது ஒரு போராளிக்கான குணம். எழுப்பிய குரலுக்கு அரசிடம் இருந்து உடனடியாக பதில் கிடைக்க, அந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி தங்கள் இனத்துக்குக் கல்வி வசதி தேவை என்பதை முறையிட்டது அஸ்வினியின் புத்திசாலித்தனம்.
20 வருடங்களுக்கு முன்பு தங்கள் மகள்களைப் படிக்க வைத்து, பெரு நிறுவனங்களில் வேலைக்கு அனுப்ப அம்மாக்கள் விரும்பினர். அந்த அம்மாக்களின் மகள்களோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படும் பிற்போக்கான பெண்ணடிமைத்தன கருத்துக்களை எடுத்துக் கொண்டு வீடும், குழந்தைகளும் மட்டுமே பெண்களுக்கான பொறுப்பு என்கின்றனர். பெரிய கனவுகளுடன் இருக்கும் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு பட்டப்படிப்பு முடித்து திருமணம் செய்து வைத்துவிடவேண்டும் என்று சிந்திக்கின்றனர்.
ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதளங்களின் வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்திருக்க வேண்டும். மாறாக சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக பிற்போக்குத்தனமான கருத்துக்களை ஆண்களுக்கு சமமாக பெண்களும் பகிர்கின்றனர். வாட்ஸ்அப்பில் வருவதை எல்லாம் நம்பிக் கொண்டு தங்கள் வாழ்வில் அதைப் பின்பற்றவும் செய்கின்றனர்.

பெண் பிள்ளைகளை படிக்க அனுப்பாமல் இருப்பது, மாற்று மதம்/சாதியில் காதல் திருமணம் செய்ய எதிர்ப்பாக இருப்பது, அப்படி வீட்டை எதிர்த்து திருமணம் செய்யும் பெண்களை மீண்டும் அழைத்து வந்து ஆணவக்கொலை செய்யும் ஆண்களுக்கு உறுதுணையாக இருப்பது, பெண் பிள்ளைகளை எமோஷனல் பிளாக்மெயில் செய்வது, மொத்தத்தில் அடுத்த தலைமுறை பெண்களையும் ஆண்களுக்கு அடிமையாக வளர்த்தெடுப்பது என இந்த 2021-ம் ஆண்டிலும் கூட ஆண்-மைய சமூகத்தின் அச்சாணியாக ஆதிக்கச் சாதி பெண்கள் இருக்கின்றார்கள்.
சமூக வலைதளங்களில் புழங்குவதற்கு மற்றும் பத்திரிகைகளில் எழுதும் வாய்ப்பு கிடைத்ததும் பல பெண்கள் அந்த வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்தி பெண்ணடிமைத்தனத்தைத் தூக்கிப் பிடிக்கின்றனர். பெண்ணியவாதிகளைக் குறை சொல்வது, பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஆண்களுக்கு வேலை வாய்ப்பு குறைகிறது, பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது, சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்றெல்லாம் கட்டுரை எழுதுகின்றனர்.
இச்சூழ்நிலையில் நாடோடிப் பழங்குடியினத்துப் பெண் ஒருவர் தன் இனத்தின் சுயமரியாதை மற்றும் கல்விக்கான குரலாக ஓங்கி ஒலித்திருப்பது இந்தச் சமயத்தில் மிக அவசியமான, எல்லோருக்குமான முன்னுதாரணம்.
மிக பிரபலமாக பேசப்பட்ட இரண்டாவது பெயர் செங்கேணி. சூர்யா நடித்து, தயாரித்திருக்கும் 'ஜெய் பீம்' திரைப்படத்தின் நாயகி. செங்கேணியின் கணவனை கைது செய்து அழைத்துச் சென்ற காவல் துறையினர், பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றவாளி என ஒத்துக்கொள்ளும்படி அவனை அடித்துக் கொடுமைப்படுத்துகிறார்கள். சிறையில் அவனை அடித்தே கொன்றுவிட்டு பிறகு அவன் சிறையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டான் என்று கையை விரிக்கும் காவல்துறையினரை எதிர்த்து போராடுகிறாள் செங்கேணி.
நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டு தன் கணவனை மீட்டுத் தருமாறு கேட்கும் செங்கேணியை காவல்துறையினர் வழக்கைத் திரும்பப் பெறச் சொல்லி பலவாறு அழுத்தம் கொடுக்கின்றனர்.
அவள் தனக்கு நீதி வேண்டும் என்று உறுதியாக நிற்கிறாள். பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காக பணம் தருவதாக சொல்லப்பட்டபோதும் தன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் போராடுகிறாள் செங்கேணி. தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தன் கணவனைக் கொலை செய்தவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தன் கணவனோடு சேர்த்து பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மற்ற இருவரையும் காப்பாற்றி இருக்கிறாள்.
இந்தப் பிரச்னைகளின் இன்னொரு பக்கம் உண்டு. அது சமூக வலைதளங்களில் ஒரு விஷயம் ட்ரெண்டிங் ஆகும்போது அதற்கு உடனடியாக பொதுமக்கள் முதல் அரசு வரை ’இன்ஸ்டன்ட் ரியாக்ட்’ செய்வது. பிறகு ஓரிரு நாள்களில் அதை மறந்து விடுவது. 'ஜெய் பீம்' திரைப்படம் ராஜாகண்ணு கொலை வழக்கின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தற்போது இத்திரைப்படத்தை கண்டுவிட்டு காவல் துறையினரின் அராஜகம் மற்றும் லாக்கப் மரணங்கள் குறித்து முதன் முதலில் தெரிந்து கொள்வது போல மக்கள் கொதித்து எழுகின்றனர். 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் (தந்தை, மகன்) இருவரும் காவல்துறையினரை எதிர்த்துப் பேசியதாகச் சொல்லிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இந்தியாவை மட்டுமல்லாமல் உலகத்தையே உலுக்கிய மிக மோசமான வன்முறை சம்பவம் அது. சம்பவம் நடந்தபோது எப்போதும்போல் சமூக வலைதளங்களில் மிகப் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. அன்றைய எதிர்க்கட்சியினராக இருந்த தி.மு.க-வினரும், சாத்தான்குளம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் நேரில் சென்றனர். அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்து சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்களை நேரில் பார்த்ததாகச் சாட்சி சொல்ல வந்த ப்யூலா எனும் பெண் காவலரையும் சமூக வலைதளங்கள் கொண்டாடின.
இவை எல்லாம் ஓரிரு மாதங்கள் நடந்தன. அதன்பிறகு வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என கொலை செய்யப்பட்ட ஜெயராஜின் மனைவி நீதிமன்றத்தை நாடினார். வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என மார்ச் 2021-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்றோடு எட்டு மாதங்கள் ஆகிவிட்டன.
கடந்த வருடம் இந்தக் கொலைகள் பற்றி பேசிய யாருக்கும் இன்று இந்த வழக்கின் நிலை என்ன என்பது பற்றி தெரியாது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மட்டும் நீதி கேட்டு நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். நம் கண் முன்னே அதுவும் நடுத்தரக் குடும்பத்து பிற்படுத்தோர் வகுப்பைச் சார்ந்த தந்தை, மகன் இருவருக்கும் இந்தக் கொடூரம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. ஆனால் நீதி கிடைக்கவில்லை என்பதோடு அது பற்றிய வெளிப்படையான பேச்சும் இல்லாத நிலையில் ஒரு திரைப்படம் வந்ததும் திடீரென்று மக்கள் முதன்முதலில் லாக்கப் மரணங்களைப் பற்றி கேள்விப்படுவது போல அதிர்ச்சியாவது அதிர்ச்சியளிக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால் பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினருக்கு நேரும் பிரச்னைகள் செய்திகளாகக்கூட வெளியே வருவதில்லை.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்டபோது எழுந்த கண்டனக் குரல்கள் அவர்கள் கொலைக்கு நீதி கேட்டுப் போராடும் அவர்களின் குடும்பத்துப் பெண்களுடன் ஏன் இணைந்து நிற்கவில்லை?
சமூக வலைதளங்கள் வழியாக எழுப்பப்படும் கண்டன குரல்களுக்கு உடனடியாக அரசிடமிருந்து எதிர்வினை இருக்கின்றது என்பதற்கு உலகம் முழுவதும் உதாரணங்கள் இருக்கின்றன. அதேசமயம் நமது அந்த நேரத்து ஆதங்கம் மற்றும் கோபத்தினால் சமூக வலைதளங்களில் திடீரென்று ஓரிரு நாட்கள் மட்டுமே இந்த விஷயங்களைப் பேசிவிட்டு பிறகு அடுத்த பிரச்னையை தேடி ஓடுகிறோம். இது களப் போராட்டங்கள் மற்றும் போராட்ட குணத்தை நீர்த்துப் போகச் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.
காரணம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகும் விஷயங்களில் அமைச்சர்கள் கவனம் செலுத்துகின்றனர். அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றியதோடு அடுத்த ட்ரெண்டிங் விஷயத்தை கவனிக்கின்றனர்.
ட்விட்டரில் அமைச்சர்களை டேக் செய்து கேட்கப்படும் சாமனியர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வது அமைச்சர்களுக்கும் மக்களுக்கும் சுமூகமான உறவை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதான். அதே சமயம் ’லைம்லைட்டில்’ இருப்பதற்காக அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் மட்டுமே அதிக நேரம் இயங்குவதும், தங்கள் மேல் சொல்லப்படும் அவதூறுகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதும், தங்களை டேக் செய்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதும் களச் செயல்பாட்டு நேரத்தை சுருக்கிவிடும்.

ஓர் அரசு நிலையான நல்லரசாக இருக்க, சமூகவலைத்தள ட்ரெண்டிங்கின் பின்னால் ஓடிக் கொண்டிருக்காமல் களச் செயல்பாட்டில் கவனம் செலுத்துவது அவசியம். அதை உணர்த்தும் விதமாக கடந்த தீபாவளி நாள் அன்று இருளர் மற்றும் நாடோடிப் பழங்குடியின சமூக மக்களுக்கு வீட்டுமனை பட்டா, சாதிச் சான்றிதழ் முதலியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கியதோடு அஸ்வினியின் அழைப்பின் பெயரில் அவரது வீட்டுக்கும் சென்று வந்தார்.
வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் பெரும்பாலும் சொகுசான வாழ்க்கை முறைக்கு அடிமையாகி, அரசின் ஆதிக்கச் சுரண்டல்களை எதிர்க்கும் வலுவில்லாமல் முடங்கிப் போகின்றனர். பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் போராடுவதே மிகப் பெரிய சுதந்திரம் என்று நம்பிக் கொண்டிருக்கிறனர். பொதுசமூகத்தின் பெரும்பானமை சுயமரியாதையை 'Compromise' செய்து கொள்ளும்போது, எளிய மக்கள் குறிப்பாக பெண்கள் நீதிக்காக சுயமரியாதையை விட்டுவிடாமல் போராடுவது நம்பிக்கை அளிக்கிறது.
அதோடு ஒரு போராளிக்கு போராட்ட குணம் மட்டுமே போதாது. வாய்ப்புகளை உருவாக்கி, அதில் தனக்காகவும் தன் இனத்துக்காகவும் நன்மைகள் கிடைக்கச் செய்கிற சிந்தனையும், புத்திசாலித்தனமும் அவசியம் என்பதை அஸ்வினி மற்றும் செங்கேணி உணர்த்துகின்றனர்.