தற்போது மாநிலத்தையே கோபத்திற்கு உள்ளாகியிருக்கிறது கோவை சிறுமியின் தற்கொலை. கோவை சின்மயா வித்யாலயாவில் படித்து வந்த 17 வயது சிறுமி அவளுடைய பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியினால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறாள். அதைப் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டபோது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்குமாறு சொன்னதுடன் மாணவியை மருத்துவரிடம் கவுன்சிலிங் அனுப்பி வைத்திருக்கிறார். ஆசிரியரின் துன்புறுத்தல் தொடரவே, மாணவி வேறு பள்ளிக்கு மாறியிருக்கிறாள். ஆனாலும் இந்த விஷயம் தொடர்ந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தன்னுடைய தற்கொலைக்குக் காரணமானவர்கள் பெயர்களை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அனைத்து வயது மாணவ மாணவியரும் செல்போன் பயன்படுத்துவது அவசியமாக இருக்கின்றது. இந்தச் சமயத்தில்தான் ஆன்லைன் வழியாகக்கூட மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்கிறது. ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அவரைத் தொடர்ந்து சென்னையில் மேலும் சில பிரபல தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் பெறப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு முறையும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் வரும்போதும் கடுமையான போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணை இல்லாமல் சிறையில் அடைக்கப்படுகின்றனர். சமுதாயத்தில் நன்மதிப்புடன் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் குழந்தைகளுடைய எதிர்காலம் மற்றும் தங்களுடைய அவமானம், தண்டனை எதைப் பற்றியும் கவலை இல்லாமல் மீண்டும் மீண்டும் இதே தவறுகளைத் துணிந்து செய்வதன் காரணங்கள் என்ன?

கோவை சின்மயா வித்யாலயா மாணவி பொன்தாரணி தற்கொலை மற்றும் மிதுன் சக்கரவர்த்தி கைதை தொடர்ந்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பொதுவாக சிறுவயது முதலே பள்ளி மற்றும் ஆசிரியர்கள் என்றாலே பயம், மரியாதை ஏற்படுத்துவது நம் நாட்டு வழக்கம். அதுவும் பள்ளி முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் என்றால் கூடுதல் பயமும் மரியாதையும் உண்டு. பள்ளி முதல்வர்கள் பெரும்பாலும் சிறந்த கல்விமான்களாகவும், நல்லறிவு, நற்சிந்தனை, நல்ல பழக்க வழக்கங்களை போதிப்பவர்களாகவும் இருந்த காலம் உண்டு.
பள்ளிகள் வணிகமயமானதற்கு பிறகு முதல்வர்கள் கார்ப்பரேட்டில் வேலை செய்யும் மார்கெட்டிங் மேனேஜர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். பிள்ளைகளின் பாதுகாப்பைவிட பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் வரக்கூடாது என்பதில்தான் அவர்களது முழு கவனமும் இருக்கின்றது.
நம் நாட்டில் பிள்ளை வளர்ப்பு என்பது பெற்றோர்களைப் பொருத்தவரையில் பிள்ளைகளுக்கு உணவு, உடை, நல்ல பள்ளி, கல்லூரிகளில் கல்வி என அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதுதான். அதற்காக பொருளீட்டவே பெரும்பாலான பெற்றோர்களுக்கு நேரம் சரியாக இருக்கின்றது. இங்கே பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவு செய்பவர்கள் ஆசிரியர்கள். அதேபோல் பிள்ளைகள் நல்ல பழக்கங்களையும் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களையும் பள்ளிகளில்தான் கற்றுக் கொள்கின்றனர். வளர் பருவத்தில் பிள்ளைகளுக்கு பெற்றோர்களுக்கு இணையாக ஆசிரியர்கள் மீதும் பிரியம் ஏற்படுகின்றது. அவர்களுடன் அதிக நேரம் இருப்பது, ஆசிரியர்கள் அன்பு மற்றும் அக்கறை, இயல்பாகவே ஆசிரியர்களை மதிக்கவேண்டும் எனச் சொல்லி வளர்ப்பது போன்றவற்றால் மாணவர்களுக்கு குடும்பத்தினருடன் இருக்கும் அதே ஒட்டுதல் ஆசிரியர்களிடமும் ஏற்படுகின்றது.
அதுவும் சிறு வயது முதல் ஒரே பள்ளியில் படிக்கும்போது பல வருடங்களாக பார்க்கும் ஆசிரியர்களின் மேல் அசாத்திய நம்பிக்கை ஏற்படுகின்றது. அந்த நம்பிக்கையால் ஆசிரியர்கள் தங்களிடம் பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுக்கும்போது அது சரியா, தவறா என்கிற குழப்பத்திற்கு பிள்ளைகள் ஆளாகின்றனர். சமீபமாக பாலியல் துன்புறுத்தல் குறித்த வெளிப்படையான பேச்சு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கிய பிறகு ஒரு சில பிள்ளைகள் வீட்டில் அல்லது பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் புகாரளிக்க துணிச்சலுடன் முன் வருகின்றனர்.
மாணவி பொன்தாரணியும் அப்படித்தான் தனது பள்ளி முதல்வரிடம் தனக்கு ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததை பற்றிக் கூறியிருக்கிறாள். ஆனால் பள்ளி முதல்வர் மாணவியிடம் இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தி இருக்கிறார். பெண்களுக்கு பெண்களால் தீங்கு நேரும்போதெல்லாம் முதலில் சொல்லும் வாக்கியம் “ஒரு பெண்ணாக இருந்துகொண்டு ஒரு பெண்ணுக்கு இப்படி தீங்கிழைக்கலாமா?” என்பதுதான். ஒரு தலைமை ஆசிரியை, வயதில் மூத்த பெண்மணி ஒரு சிறுமியிக்கு துன்பம் நேரும்போது அவளை அதிலிருந்து காப்பாற்றாமல் அந்தக் குற்றத்தை ஆதரிக்கும் விதமாகவும் மேலும் குற்றங்கள் நடக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாகவும் நடந்துகொள்வது எதனால்?
ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோர்கள் எனச் சொல்வார்கள். ஆசிரியராகவும், பெற்றோராகவும் இல்லாவிட்டாலும் கூட குறைந்தபட்சம் ஒரு பெண்ணாகவும், மனிதராகவும் பள்ளி தலைமை ஆசிரியை மாணவியின் குற்றச்சாட்டை காது கொடுத்து கேட்டிருக்க வேண்டும். தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் மாணவிக்கு அறிவுரை சொல்லி பிரச்னையை மூடி மறைக்க நினைக்கும் அளவிற்குக் கல்வித்துறை வணிக மயமாகி இருக்கிறது. பணம் மனிதத் தன்மையை முற்றிலும் கொன்றிருக்கிறது.

ஆண்கள் பணம், வருமானம் சார்ந்தும், பெண்கள் குடும்பம், அன்பு, தாய்மை சார்ந்தும் நம் சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகின்றனர். பெண்கள் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாகவது சாதனையாக பார்க்கப்படுகின்றது. இந்த வளர்ச்சி ஒருபக்கம் மகிழ்ச்சி அளித்தாலும் வெகு சிலர், ஆண்-மைய சமூகத்தில் தாங்கள் பிழைத்து நிற்க (சர்வைவல்), தங்கள் இயல்பிலிருந்து மாறி சிறிது சிறிதாக ஆண்-மைய சமூகத்தின் ஆதிக்க மனநிலையை தங்களுக்குள் வார்த்துக் கொள்கின்றனர். தங்களுக்கான இடத்தை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்கின்றனர்.
பணம் ஒருவரின் நல்லெண்ணம், குணம், நடத்தையைத் தீர்மானிக்கும் காரணியாக மாறிவிட்டது. அதன் விளைவாகத்தான் ஒரு சில பள்ளிகளின் முதல்வர்கள் பெண் குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தல் போன்ற விஷயங்களில் நடவடிக்கை எடுக்காமல் பள்ளியின் பெயர் மற்றும் வருமானத்தை பற்றிக் கவலை கொள்கின்றனர். தான் பள்ளியின் முதல்வராக இருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற தவறான நிகழ்வு நடந்தது வெளியே தெரிந்தால் தனக்கு அவமானம் என்று கருதுகிறார்கள். இப்படி ஒரு விஷயம் நடந்து அதற்கு பள்ளியின் முதல்வர் நடவடிக்கை எடுத்து அந்த ஆசிரியருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தால் அதுதான் தங்கள் பள்ளிக்கும் தங்களுக்கும் நற்பெயரை பெற்றுத் தந்திருக்கும் என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. தலைமை ஆசிரியர் நேர்மையானவராக இருக்கும்போதுதான் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்கும் என்கின்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கு வரும்.
இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். மதத்தின் பேரால் தங்களை ஒழுக்கமானவர்களாக, ஒழுக்கத்தை போதிப்பவர்களாகக் காட்டிக் கொள்பவர்கள்தான் பெரும்பாலும் இது போன்ற கேடுகெட்ட செயல்களைச் செய்பவர்களாக வழக்கில் சிக்கியிருக்கிறார்கள். அதற்கு உதாரணமாகத்தான் பல சர்ச்சைகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கைது செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும்கூட மதத்தையும் அறிவியலையும் (?!) இணைத்து ஆராய்ச்சி கட்டுரை எழுதி உள்ளார். அது எந்த மதத்தைப் பின்பற்றும்/போதிக்கும் பள்ளியாக இருந்தாலும் சரி, எல்லா மதத்திலும் இது போன்ற குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி வரும்போதும் எல்லோரும் கோபப்படுகிறோம். பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்ட பின் அமைதியாகி விடுகிறோம். கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து, தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் என்பதை பெரும்பாலும் நாம் பின் தொடர்வது இல்லை?
இது போன்ற பிரச்னைகள் வரும்போது பெற்றோருக்கு எந்த மாதிரியான விழிப்புணர்வு வேண்டும் என்று தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் முதல் சமூக வலைதளங்கள் வரை பெற்றோர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். ஒரு வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சோர்வடையச் செய்கின்றன. இன்னும் எத்தனை காலத்திற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் இந்தச் சமூகம்?
திருடனிடம் இருந்து நம் பொருள்களை பத்திரமாக வைக்க வேண்டுமானால் பூட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் திருடர்களைப் பிடிப்பதை பற்றியும், அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குவதை பற்றியும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு திருடன் உருவாகாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு பற்றியும் எப்போது சமூகம் பாடம் சொல்லவும், பாடம் கற்றுக் கொள்ளவும் தொடங்கும்?

அதேபோல் ஆண் குழந்தைகளை அவர்களது அம்மாக்கள் சரியாக வளர்க்க வேண்டும் என்றும், ஒரு பெண் குழந்தையின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால், அவள் சோர்வாக இருந்தால் அதை கண்டுபிடிக்க வேண்டியது பெற்றோரின் கடமை என்றும் கோஷங்கள் எழுகின்றன. பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஒரு ஆணை அவர் குற்றம் செய்யக் கூடியவர் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஏன் யாரும் யோசிப்பது இல்லை? ஒரு பாலியல் குற்றவாளி திடீரென்று ஒரே நாளில் இத்தனை பெரும் குற்றங்களை செய்து விடுவது இல்லை. பொன்தாரணியின் விஷயத்தில் அவளது ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும் கூட அவளுக்கு பல முறை வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியும், பேசியும் சிறிது சிறிதாகத்தான் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப நடக்குமாறு அந்த சிறுமியை பழக்கப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். அதற்காக தன்னுடைய ஆசிரியர் பணியையும், தன் மீது மாணவி வைத்திருக்கும் மரியாதையையும் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
மாணவி பொன்தாரணி எழுதியிருந்த இறுதிக் கடிதத்தில் தகாத வார்த்தைகள் பயன்படுத்தி இருந்தாள். பலருக்கும் அவள் உயிர்விட்டதைவிட அவள் பயன்படுத்திய வார்த்தைகள்தான் பிரச்னையாக இருக்கின்றன.
என்ன இருந்தாலும் ஒரு பெண் தகாத வார்த்தைகள் பயன்படுத்தலாமா என்று கேட்கிறார்கள். குழந்தைகள் எப்போதும் கேட்ட வார்த்தைகளையே பயன்படுத்துகிறார்கள். பொன்தாரணியும் அந்த வார்த்தைகளை இந்தச் சமூகத்தில் இருந்தேதான் எடுத்துக் கொண்டாள். எனவே, தவறு நம் மீதும்தானே? ஒரு சிறுமி தற்கொலைக்கு தூண்டப்பட்டு தற்கொலை செய்துகொண்டாள், இந்த நிலையிலும் கூட அவள் பயன்படுத்திய வார்த்தைகள் பற்றி பேசுபவர்களுக்கு பெண் குழந்தைகளின் பாதுகாப்பை விட மதமும் பெண்ணடிமைத்தனமும் முக்கியமாக இருப்பது ஒரு பண்பட்ட சமூகத்தின் அடையாளம் அல்ல. ஒரு குழந்தையின் வளர்ப்பில் அதன் பெற்றோர்கள் மட்டுமல்லாது பள்ளி, அரசு, உறவினர்கள் என்று ஒரு சமூகமாக எல்லோரும் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஈடுபட்டு இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தனியார் பள்ளிகளில் இத்தகைய கொடுமைகள் நடக்கும்போது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் சேர்ந்து சில விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கின்றனர். அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பி இருக்கும் இன்னமும் முழுமையாக கல்வி அறிவு பெறாத, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் குழந்தைகளின் பாதுகாப்புக்கு வழி என்ன? அதுவும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி குழந்தைகள் படிக்கும் பள்ளிகளின் நிலை என்ன? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் வெறும் கேள்விகளாக மட்டுமே இன்னமும் இருக்கின்றன.
எதிர்காலத்தை உருவாக்கவிருக்கும் பள்ளிகள், நிகழ்காலத்தையே ரணமாக்கி, 'இறந்துபோகும்' காலங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு!