அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

சண்டையில் முடிந்த வக்கீல் சங்கத் தேர்தல்... களேபரமான உயர் நீதிமன்றம்!

மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்’ தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
News
மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்’ தேர்தல்

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெறுவதால், பலரும் உற்சாகமாகத் தேர்தல் பணியாற்றினோம். ஆனால், சிலரின் தவறுகள் மொத்த உறுப்பினர்களின் கனவையுமே சிதைத்துவிட்டன.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த, ‘மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்’ தேர்தல், களேபரக் காட்சிகளுடன் ரத்தாகியிருக்கிறது. பல வம்பு வழக்குகளைத் தாண்டி நடத்தப்பட்ட தேர்தல், மீண்டும் காவல் நிலையத்தில் வழக்காகப் பதிவாகியிருக்கிறது!

1889-ல் தொடங்கப்பட்ட ‘மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்’தான் ஆசியாவிலேயே பெரிய வழக்கறிஞர் சங்கம். சிங்காரவேலர், வெங்கட்ராமன், வானமாமலை, வ.உ.சி., அல்லாடி கிருஷ்ணமூர்த்தி எனப் பெரும் தலைவர்கள் பலர் உறுப்பினர்களாக இருந்த இந்தச் சங்கத்தில் நடந்திருக்கும் களேபரக் காட்சிகள், உயர் நீதிமன்ற வளாகத்தையே அதிரி புதிரி ஆக்கியிருக்கின்றன. இது தொடர்பாக மேற்கொண்டு விசாரித்தோம்...

சண்டையில் முடிந்த வக்கீல் சங்கத் தேர்தல்... களேபரமான உயர் நீதிமன்றம்!
சண்டையில் முடிந்த வக்கீல் சங்கத் தேர்தல்... களேபரமான உயர் நீதிமன்றம்!

நம்மிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர், “மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க விதிப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க சங்கத் தேர்தல் நடைபெற வேண்டும். கடைசியாக 2016-ல் தேர்தல் நடந்தது. அதன் பிறகு, பல்வேறு வழக்குகள் காரணமாக இதுவரை சங்கத் தேர்தலை நடத்தவே முடியவில்லை. இந்தச் சங்கத்தில் உறுப்பினராக இருந்துகொண்டே, தமிழ்நாட்டிலுள்ள இதர வழக்கறிஞர்கள் சங்கத்திலும் பலர் உறுப்பினராகத் தொடர்கிறார்கள். உயர் நீதிமன்ற வாசல்படியைக்கூட மிதிக்காத சில உறுப்பினர்கள், ரியல் எஸ்டேட் செய்துகொண்டு அதில் சம்பாதித்த பணத்தைவைத்து சங்கப் பதவிகளுக்கு வரத் துடிக்கிறார்கள். இதையெல்லாம் ஒழுங்குமுறைப் படுத்துவதற்காகத்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதியரசர் மகாதேவன் அமர்வு, தேர்தலை நியாயமாக நடத்துவதற்கு உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபீர் தலைமையில் டெல்லர் கமிட்டியை அமைத்தது. ஜனவரி 9-ம் தேதி சங்கத் தேர்தலுக்கான தேதியும் குறிக்கப்பட்டது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், ஆறு மூத்த செயற்குழு உறுப்பினர்கள், ஐந்து இளைய செயற்குழு உறுப்பினர்கள் என 16 பதவிகளுக்கு 125 பேர் போட்டியிட்டனர். மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பவர்கள், வாக்களிக்கத் தகுதியானவர்களாகப் பட்டியலிடப்பட்டனர். பிரசாரத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கக் கூடாது, அன்பளிப்புகள் வழங்கக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சண்டையில் முடிந்த வக்கீல் சங்கத் தேர்தல்... களேபரமான உயர் நீதிமன்றம்!
சண்டையில் முடிந்த வக்கீல் சங்கத் தேர்தல்... களேபரமான உயர் நீதிமன்றம்!

தேர்தல் நாளான ஜனவரி 9-ம் தேதி, நூற்றுக்கணக்கான சங்க உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர். ‘QR Code’ மூலமாக வாக்களிப்பவர்களின் விவரங்கள், புகைப்படங்களைச் சேகரித்த பிறகே அவர்களுக்கு வாக்குச்சீட்டு தரப்பட்டது. இந்த விவரங்கள் ‘அப்லோட்’ ஆவதில் தாமதமானதால், வாக்களிக்கக் காத்திருந்தவர்களுக்கிடையே ‘டென்ஷன்’ ஏறியது. வாக்குச்சாவடியில் அனுபவமில்லாத கல்லூரி மாணவர்களும், வழக்கறிஞர் அல்லாத சிலரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் வாக்களிக்கச் சென்ற சிலர், தங்கள் இஷ்டத்துக்கு இரண்டு மூன்று வாக்குச்சீட்டுகளை எடுத்துக்கொண்டனர். இதுவே பிரச்னைக்கு வித்திட்டது.

அப்படி வாக்குச்சீட்டுகளை எடுத்துவந்த சில வழக்கறிஞர்கள், ‘பார்த்தீர்களா, தேர்தல் முறையாக நடைபெறவில்லை. வாக்குச்சாவடியைக் கைப்பற்றி சிலர் போலி வாக்குகள் போடுகிறார்கள்’ என வதந்தியைக் கிளப்பிவிட்டனர். ‘QR Code’ சீட்டுகளைச் சிலர் அள்ளிச் சென்றதாகத் தகவல் பரவியது. திடீரென வழக்கறிஞர்கள் சிலர், வாக்குச்சாவடிக்குள் புகுந்து டேபிள், சேர்களை அடித்து நொறுக்கினர். ‘தேர்தலை ரத்துசெய்ய வேண்டும்’ என கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிலைமை கலவரமானதால், சங்கத் தேர்தலைத் தள்ளிவைப்பதாக டெல்லர் கமிட்டியின் தலைவர் கபீர் அறிவித்தார். பணம் படைத்திருக்கும் சில சீனியர் வழக்கறிஞர்கள், மதிப்புமிக்க இந்தச் சங்கத்தின் பதவிகளுக்கு வரத் துடிக்கிறார்கள். தோல்வி பயத்தால் அவர்கள் தரப்பினர் செய்த கலவரம்தான் இது. வழக்கறிஞர்களுக்குள் நடந்த அடிதடி, காவல் நிலையத்தில் வழக்காகப் பதிவாகியிருக்கிறது” என்றனர் விலாவாரியாக.

நூலகர் பதவிக்குப் போட்டியிட்ட உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விஜயராஜிடம் பேசினோம். “ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெறுவதால், பலரும் உற்சாகமாகத் தேர்தல் பணியாற்றினோம். ஆனால், சிலரின் தவறுகள் மொத்த உறுப்பினர்களின் கனவையுமே சிதைத்துவிட்டன. நேர விரயம், பொருள் விரயம் என இதனால் வேட்பாளர்களுக்கு இழப்புகள் ஏராளம். கிருபாகரன் போன்ற ஓய்வுபெற்ற நீதியரசர்களை வைத்து தேர்தலை நடத்தினால்தான், இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும்” என்றார்.

விஜயராஜ், கபீர்
விஜயராஜ், கபீர்

டெல்லர் கமிட்டியின் தலைவர், மூத்த வழக்கறிஞர் கபீரிடம் பேசினோம். “இது போன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நடந்திருக்கும் சம்பவங்களை, உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறோம். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தேர்தல் நடைபெறும்” என்றார்.

டெல்லர் கமிட்டிக்கு நெருக்கமான வழக்கறிஞர்கள் நம்மிடம், “10 நிமிடங்களில் சுமார் 100 உறுப்பினர்கள் வரை ‘QR Code’ மூலமாக ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு வாக்குச்சீட்டு தரப்பட்டது. ஏஜென்சி மூலமாகத் தேர்தல் பணியில் அனுபவம் பெற்றவர்கள்தான் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எங்கேயும் தாமதம் ஏற்படவில்லை. சில வழக்கறிஞர்களின் தகாத நடவடிக்கைகளால்தான் தேர்தல் ரத்தானது” என்றனர்.

பாரம்பர்யமிக்க இந்த வழக்கறிஞர் சங்கத்தில் இப்படியொரு நிகழ்வு, உயர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே நடந்ததை யாரும் ரசிக்கவில்லை. பொதுமக்கள் மத்தியில், `படித்தவர்களே இப்படிக் கலவரம் செய்யலாமா?’ என்கிற அதிருப்தியும் ஏற்பட்டிருக்கிறது. இனி எப்போது தேர்தல் நடந்தாலும், இப்படியொரு பிரச்னை எழாதவாறு உயர் நீதிமன்றம் கண்டிப்பு காட்ட வேண்டுமென்பதுதான் பொதுமக்கள், வழக்கறிஞர்களின் விருப்பம்!