அலசல்
Published:Updated:

எய்ம்ஸ்... எட்டு மாநிலங்களில் பணிகள் விறுவிறு... மதுரையில் மட்டும் மொட்டைச்சுவர்!

மதுரை
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரை

2019, டிசம்பரில் அடிக்கல் நாட்டும்போது, ‘45 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

‘‘தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து வெளிநோயாளிகள் பிரிவைத் தொடங்க முடியுமா?’’ - சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு எழுப்பியிருக்கும் கேள்வி இது. தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் ஒற்றைச் செங்கல் மூலம் சூடுபிடித்து ஓய்ந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் இப்போது நீதிமன்றக் கேள்வியால் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது!

2015-ல் மத்திய அரசு அறிவிப்பு வெளியாகி, 2018-ல் அனுமதி வழங்கப்பட்டு, 2019-ல் மதுரை தோப்பூரில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது எய்ம்ஸ் மருத்துவமனை. அதோடு சரி... தற்போது சுற்றுச்சுவர் மட்டுமே எழுப்பப் பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ‘இதுதான் எய்ம்ஸ்’ என்று செங்கல்லைக் காட்டி பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் மீது, காவல்துறையில் புகார் கொடுத்த சம்பவமும் நடந்தது. இந்தநிலையில்தான் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், ‘எய்ம்ஸ் வேலைகளை விரைந்து தொடங்குங்கள்’ என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் எய்ம்ஸ் பணிகளைத் தொடங்க தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகிறார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றித் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களைப் பெற்ற சமூக ஆர்வலர் பாவூர்சத்திரம் பாண்டியராஜாவிடம் பேசினோம். ‘‘2019, டிசம்பரில் அடிக்கல் நாட்டும்போது, ‘45 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டே கால் ஆண்டுகள் ஆகியும் கட்டுமானப் பணிகள் தொடங்கியபாடில்லை. சுற்றுச்சுவரைக்கூட முழுதாகக் கட்டி முடிக்காமல் வெறும் மொட்டை சுவர் பரிதாபமாக நிற்கிறது. 2015-ல் மத்திய அரசு இந்தத் திட்டத்தை அறிவித்த கையோடு கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருந்தால், இந்நேரம் கொரோனா அச்சுறுத்தலைச் சமாளிக்க தென்மாவட்ட மக்களுக்கு இந்த மருத்துவமனை பேருதவியாக இருந்திருக்கும்” என்றவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தனக்குக் கிடைத்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்...

எய்ம்ஸ்... எட்டு மாநிலங்களில் பணிகள் விறுவிறு... மதுரையில் மட்டும் மொட்டைச்சுவர்!

“மதுரை எய்ம்ஸ் பற்றி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ மூலம் சில தகவல்களைக் கேட்டிருந்தேன். அதில், ‘மதுரை எய்ம்ஸ்க்கான கடன் ஒப்பந்தம் கடந்த 26.03.2021 அன்று இந்தியா-ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது. கடன் தொகை மதிப்பு இந்திய ரூபாயில் 1,536.91 கோடி. டெண்டர் ஒப்பந்தங்களுக்கான நடைமுறையும் தொடங்கி விட்டது’ என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால், அதன் பிறகும் எந்த வேலையும் தொடங்கப் படவில்லை. எந்த அறிவிப்பும் இல்லை. மதுரையில் எய்ம்ஸ் விரைவில் தொடங்கப்பட்டால், 750 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனையும், மாணவர்களுக்கு 100 எம்.பி.பி.எஸ் மற்றும் 60 நர்ஸிங் இடங்களும் கிடைக்கும். தமிழ்நாடு அரசுதான் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுத்து கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும்’’ என்றார்.

“எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தில் தற்காலிக மருத்துவச் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க முடியுமா?” என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்ப காரணமான வழக்கின் வழக்கறிஞர் அழகுமணியிடம் பேசினோம். ‘‘இந்தியாவில் 16 எய்ம்ஸ் மருத்து வமனைகள் தொடங்குவதற்கான அறிவிப்பை 2015-ல் மத்திய அமைச்சரவை வெளியிட்டது. இவற்றில், 2019-ல் மதுரையில் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 2,000 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 85 சதவிகித நிதியை ஜப்பானிய நிறுவனமும் (JICA), 15 சதவிகித நிதியை மத்திய அரசும் வழங்கும்.

அதேசமயம், புதிதாக அறிவிக்கப்பட்ட 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பஞ்சாப், மேற்குவங்கம், தெலங்கானாவில் மருத்துவமனை வேலைகள் நடைபெற்று, வெளி நோயாளிகள் பிரிவே தொடங்கப்பட்டுவிட்டது. ஜார்கண்ட், இமாசலப் பிரதேசம், அஸ்ஸாம், குஜராத், ஜம்மு ஆகிய மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அதனால், ‘மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இயக்குநர், மருத்துவக் கண்காணிப்பாளர், இணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளை நியமனம் செய்து, தற்காலிக இடத்தில் வெளி நோயாளிகள் துறையைத் தொடங்கவும், எம்.பி.பி.எஸ் சேர்க்கை தொடங்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இப்போது மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அரசுகளின் பதிலை எதிர்பார்த்திருக்கிறோம்’’ என்றார்.

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசனிடம் பேசினோம். ‘‘விரைவில் எய்ம்ஸுக்கான பணி தொடங்கும். அதில் எந்த மாற்றமுமில்லை. தற்போது பேண்டமிக் காலம் என்பதால், நிதியளிக்கும் ஜப்பான் நிதி நிறுவனத்தின் செயல்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதை விரைவுபடுத்த மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது’’ என்றார்.

பாண்டியராஜா, அழகுமணி, வானதி சீனிவாசன், மங்கு ஹனுமந்த ராவ்
பாண்டியராஜா, அழகுமணி, வானதி சீனிவாசன், மங்கு ஹனுமந்த ராவ்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக, கடந்த பிப்ரவரி மாதம் மங்கு ஹனுமந்த ராவ் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரிடம் பேசினோம். ‘‘ஜப்பான் நிதி நிறுவனத்துடன் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. செப்டம்பர் அல்லது அக்டோபரில் கட்டுமான வேலைகள் நிச்சயம் தொடங்கிவிடும். சில மாதங்களில் தற்காலிக மருத்துவமனையைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து நவம்பர், டிசம்பரில் முதல் பேட்ச் எம்.பி.பி.எஸ் அட்மிஷன் போடப்படும். கட்டுமானம் முடியும்வரை அரசு மருத்துவக் கல்லூரி அல்லது தனியார் கல்லூரியில் தற்காலிக எய்ம்ஸ் செயல்படும்” என்றார்.

இப்போதே இந்தப் பகுதிக்கு அடையாளம் சொல்லத் தொடங்கும் மக்கள், ‘மொட்டைச்சுவர்’ ஆஸ்பத்திரி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் பெயரே நிலைத்துவிடப்போகிறது. அதற்குமுன் பணிகளை ஆரம்பிக்குமா மத்திய அரசு?!