மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

அரிய உயிரினங்கள் வாழும் அரிட்டாபட்டி... தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பர்ய தலம்...

அரிட்டப்பட்டி பல்லுயிர் பாரம்பர்ய தலம்
பிரீமியம் ஸ்டோரி
News
அரிட்டப்பட்டி பல்லுயிர் பாரம்பர்ய தலம்

சுற்றுச்சூழல்

மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டியை, பல்லுயிர் பாரம்பர்ய தலமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பர்ய தலம் எனக் குறிப்பிடப்படுவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் மத்தியில் அரிட்டாபட்டி குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. இவ்வூரில் உள்ள இயற்கை சூழ்ந்த மலைகளை, கல்குவாரி கொள்ளையர்கள் அபகரிக்க முயற்சி செய்து வந்த நிலையில்... அரசின் தற்போது அறிவிப்பு, இப்பகுதி மக்களை நிம்மதி பெருமூச்சடைய வைத்துள்ளது.

அரிட்டப்பட்டி பல்லுயிர் பாரம்பர்ய தலம்
அரிட்டப்பட்டி பல்லுயிர் பாரம்பர்ய தலம்

எதற்காக பல்லுயிர் பாரம்பர்ய தலமாக இந்த ஊர் அறிவிக்கப்பட்டது என்ற தேடலோடு, பனி படர்ந்த ஓர் அதிகாலைப் பொழுதில் அரிட்டாபட்டியை நோக்கி பயணித்தோம்.

மதுரையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் அழகர்மலைக்கும் பெருமாள் மலைக்கும் நடுவில் அமைந்துள்ளது அரிட்டாபட்டி. இவ்வூரை காக்கும் அரண் போல் சுற்றிலும் 7 மலைகள் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றன. குரங்குகள் ஒரு பக்கம் தாவி விளையாட, ஊர் சிறுவர்கள் இம்மலை களின் மீது சர்வ சாதாரணமாக சரசரவென்று ஏறுவதைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

அரிட்டப்பட்டி பல்லுயிர் பாரம்பர்ய தலம்
அரிட்டப்பட்டி பல்லுயிர் பாரம்பர்ய தலம்

இம்மலைகளில் உள்ள சுனைகளிலிருந்து கசியும் தண்ணீரால், இவ்வூரில் உள்ள நீர்நிலைகளில் பெரும்பாலான நாள்கள் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இவ்வூரைச் சுற்றிலும் ஏராளமான கண்மாய்கள்... ஊருக்கும் மலைக்கும் இடையே மிகப்பெரிய குளம் ஒன்று அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இங்குள்ள மலைகளிலிருந்து வரும் அதிக அளவிலான தண்ணீரை தேக்கி வைத்து விவசாயம் செய்ய, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதி மக்கள் தடுப்புகள் அமைத்துள்ளனர். இவ்வூரில் தருமம் என்ற ஒரு குளம் உள்ளது. இதைக் கடந்து சென்றால், களிஞ்சமலையை அடையலாம். இதன் மீது ஏறி மறுபக்கம் இறங்கி நடந்து சென்றோம். அங்கு பல்வேறு வடிவங்களில் சிறு சிறு மலைக்குன்றுகள் காட்சியளித்தன. ஏராள மான பனை மரங்கள், குளம், குடைவரைக் கோயில் என அங்கு நாம் கண்ட காட்சி நம் மனதைப் பரவசத்தில் ஆழ்த்தியது. இவ்வூரில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் பிரதான தொழில் நெல் விவசாயம். பல்லுயிர் பாரம் பர்ய தலமாகத் தங்களுடைய ஊர் அறிவிக்கப் பட்டிருப்பது குறித்து இப்பகுதி மக்கள் பெருமிதப்படுகிறார்கள்.

அரிட்டப்பட்டி பல்லுயிர் பாரம்பர்ய தலம்
அரிட்டப்பட்டி பல்லுயிர் பாரம்பர்ய தலம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சீராளன், ‘‘இந்தியாவுல இப்ப அழிஞ்சுகிட்டு வரக்கூடிய அரிய வகை உயிரினமான ‘லகுடு’ங்கற வல்லூறுகள்... ராஜஸ்தானில் உள்ள சில மலைப்பகுதிகள்லயும், எங்களோட அரிட்டா பட்டி மலைகள்லயும் வாழ்ந்துகிட்டு இருக்கு. இதுமாதிரி இன்னும் பல அரிய வகை பறவை யினங்கள், விலங்கினங்கள், பூச்சியினங்கள் இங்கவுள்ள மலைகள்ல வசிச்சுக்கிட்டு இருக்குறதுனாலதான் அரிட்டாபட்டியை பல்லுயிர் பாரம்பர்ய தலமாகத் தமிழக அரசு அறிவிச்சிருக்கு.

கருங்குருவி, மழைக்குருவி, இரட்டைவால் குருவி, சில்வர்பில் கொக்கு, மஞ்சள் வாலாட்டி, பனங்காடை, தீக்கை அரிவாள், மூக்கன், சிவப்பு ஆள்காட்டி, மஞ்சள் ஆள்காட்டி, கருந்தோள், வல்லூறு, செம்பருந்து, கரும்பருந்து, பனை உழவாரன், ராஜாளி, குட்டைகால் கழுகு, தேன் பருந்து, பகடு வல்லூறு, சிவப்பு வல்லூறு, வெள்ளைக் கறி கொம்பன், ஆந்தை, மல்கோ மைனா, கொம்பன் ஆந்தை உட்பட 280 வகையான பறவைகள் இங்க இருக்குறதா ஆய்வாளர் களால் கண்டறியப்பட்டுருக்கு. அரியவகை தேவாங்குகள், எறும்புத் தின்னிகள், மலைப் பாம்புகள் உள்ளிட்ட இன்னும் பல விலங்கினங்களும் இங்க இருக்கு. 700-க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களும் இங்க வசிக்குது. இங்க எல்லா ஜீவராசிகளும் நீண்டகாலமா தொடர்ந்து வாழ்ந்துகிட்டு இருக்குறதுனால தான் எங்க ஊரை பல்லுயிர் பாரம்பர்ய தலம்னு சொல்றாங்க. பல நூறு வருஷங் களுக்கு முன்னாடி எங்க ஊர்ல சமணர்கள் வாழ்ந்ததா சொல்லப்படுது. எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாதுங்கறதைத் தங்களோட கோட்பாடாக அவங்க கடைப்பிடிச்சுருக் காங்க. அதுதான் தொன்றுதொட்டு இப்ப வரைக்கும் நீடிச்சுக்கிட்டு இருக்குறதா எங்க பகுதி மக்கள் மத்தியில ஒரு பேச்சிருக்கு.

குடைவரைக்குச் செல்லும் வழி
குடைவரைக்குச் செல்லும் வழி

இது ஒரு அதிசயமான ஊராகவே வெளியூர் மக்களால பார்க்கப்படுது. எங்க ஊர்ல உள்ள சிவன் குடைவரைக்கோயில் ரொம்பவே பிரபலமானது. சிவராத்திரி அன்னைக்கு... வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள்ல இருந்தெல்லாம் நிறைய பேர் இங்க வருவாங்க. இங்கவுள்ள எந்த உயிரினத் துக்கும் யாரும் எந்தவித தொந்தரவும் கொடுக்க மாட்டாங்க’’ எனத் தெரிவித்தார்.

சீராளன், ஸ்டாலின்
சீராளன், ஸ்டாலின்


இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஸ்டாலின், ‘‘சூழலியல் ஆய்வாளர்கள் இங்க நீண்டகாலமா ஆய்வுகள் நடத்தி, இது பல்லுயிர்கள் வாழக்கூடிய தலம்னு உறுதிப்படுத்தினாங்க. இப்பவும்கூட ஆய்வாளர்கள் நிறைய பேர் இங்க வந்துட்டுப் போறாங்க. இங்க சமணர்கள் வாழ்ந்ததுக்கான அடையாளங் களும், மிகவும் பழைமையான குடைவரைக் கோயிலும் இருக்குறதால தொல்லியல் துறையினர் எங்க ஊர்ல சிறப்பு கவனம் செலுத்துறாங்க.

சிவன் கோயில் குடைவரை
சிவன் கோயில் குடைவரை

ஆனா, இதைப்பத்தி எல்லாம் கொஞ்சமும் கண்டுக்காம, பத்து வருஷத்துக்கு முன்னாடி, இங்கவுள்ள மலைகள்ல கிரானைட் குவாரிகள் அமைக்க சிலர் முயற்சி செஞ்சாங்க. அப்ப இருந்த ஆட்சியாளர் களோட ஆதரவால, அவங்களுக்கு அரசு அனுமதியும்கூட கிடைச்சது. ஆனா, அதை எதிர்த்து, இந்தப் பகுதி மக்கள் தொடர்ச்சியா அறவழிப் போராட்டங்கள் நடத்தியதாலும், உயர் நீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தியதாலும்... கிரானைட் குவாரிக்கான அனுமதியை அரசு ரத்து செஞ்சது. இப்ப தமிழக அரசு இந்த ஊரை பல்லுயிர் பாரம்பர்ய தலமா அறிவிச்சதுனால, இங்கவுள்ள மலைகளுக்கும், ஜீவராசிகளுக்கும் நிரந்தரமான பாதுகாப்பு கிடைச்சிருக்கு’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அரிட்டப்பட்டி பல்லுயிர் பாரம்பர்ய தலம்
அரிட்டப்பட்டி பல்லுயிர் பாரம்பர்ய தலம்

மலைகள் சூழ்ந்த முதூர்

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஆனைமலை, நாகமலை, பசுமலை, அழகர்மலை, திருப்பரங்குன்றம் மலை, கீழக்குயில்குடி சமணர் மலை, கீழையூர் மலை, அரிட்டாபட்டி மலை உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும் சூழலியல், பண்பாடு, சமயம், தமிழ்மொழி சார்ந்த பெருமிதங்கள் உள்ளன. இவற்றில் அரிட்டாபட்டி மலை முதன்மை இடம் வகிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கல்வெட்டு
கல்வெட்டு

பாண்டியர் காலம்

மகாவீரர் சிற்பம், தமிழ் பிராமி எழுத்துகள், சமணர் பள்ளிகள், குகைகள் இங்கு அமைந்துள்ளன. இங்குள்ள சிவன் (லகுலீசர்) குடைவரைக்கோயில், பாண்டியர் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப் பட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் 6 தலைமுறைகளுக்கு முன்னர் குடியேறிய தமிழர்களின் வம்சாவழியினர் இப்போதும் இங்கு வந்து செல்கிறார்கள்.

 சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

பாதுகாப்பது நம் கடமை!

பல்லுயிர் பாரம்பர்ய தலமாக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, அரிட்டாபட்டியைப் பார்வையிட வந்த மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி சு.வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘அரிட்டாபட்டி தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பலவிதமான அரிய வகை உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இயற்கை எழிலோடும் இவ்வூர் திகழ்கிறது. பண்பாடு மற்றும் வரலாறு சார்ந்த பெருமைகளையும் கொண்ட ஊர் இது. இதைப் போற்றிப் பாதுகாப்பது நம் தலையாய கடமை. அரிட்டாபட்டியைத் தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தவும் இந்த ஊருக்குத் தேவையான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.