Published:Updated:

மதுரை: கழிவுநீர் தொட்டி மரணங்கள்... அலட்சிய அதிகாரிகள்... அச்சத்தில் பணியாளர்கள்!

கழிவுநீர் தொட்டி  - மீட்புப் பணி
News
கழிவுநீர் தொட்டி - மீட்புப் பணி

கழிவு நீர் தொட்டியில் மனிதர்களை இறக்கிவிடும் கொடுமை... தொடரும் அவலம்!

Published:Updated:

மதுரை: கழிவுநீர் தொட்டி மரணங்கள்... அலட்சிய அதிகாரிகள்... அச்சத்தில் பணியாளர்கள்!

கழிவு நீர் தொட்டியில் மனிதர்களை இறக்கிவிடும் கொடுமை... தொடரும் அவலம்!

கழிவுநீர் தொட்டி  - மீட்புப் பணி
News
கழிவுநீர் தொட்டி - மீட்புப் பணி

சமீபத்தில், மதுரை மாநகரில், கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்த ஒப்பந்த தொழிலாளர்கள் மூன்று பேர், விஷவாயு தாக்கி மரணமடைந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இதை ஒரு சமூகப்பிரச்னையாகப் பார்க்காமல், மாநகராட்சியில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் மீது மட்டும் வழக்கை பதிவு செய்து விட்டு கடந்து சென்றுள்ளது, தமிழக அரசு.

ஆறுதல் கூறும் சு.வெங்கடேசன்.எம்.பி
ஆறுதல் கூறும் சு.வெங்கடேசன்.எம்.பி

கழிவு நீர் அகற்ற, மலக்குழியில் சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நாடாளுமன்றம் சட்டம் இயற்றியிருக்கிறது. ஆனால், அதையெல்லாம் மதிக்காமல் நாடு முழுக்க பரவலாக மனித மலத்தை மனிதர்களே அள்ளும் கொடுமை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. மலக்குழிகளிலும், கழிவு நீர் தொட்டிகளிலும் வேலை செய்யும் பணியாளர்கள் மரணமடைவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அதன் சமீபத்திய உதாரணம்தான் மதுரை சம்பவம்.

மதுரை, பழங்காநத்தம், நேரு நகரில் மாநகராட்சியின் கழிவு நீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்வதற்காகவும், மின் மோட்டாரைப் பழுது நீக்குவதற்காகவும் சரவணன் , சிவக்குமார், லட்சுமணன் ஆகிய 3 தொழிலாளர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். கவுன்சிலர் ஒருவரின் கணவர்தான் அனுப்பினார் என்றும் சொல்கிறார்கள். அந்த சமயத்தில் கழிவு நீர்த்தொட்டியில் சிவக்குமார் என்பவர் விஷவாயு தாக்கி உள்ளே விழ, அவரைக்காப்பாற்ற முயற்சி செய்து சரவணன், லட்சுமணன் ஆகியோரும் விஷவாயு தாக்கி உள்ளே விழுந்தனர். தகவல் தெரிந்து மீட்பு படையினர் வந்து மீட்டபோது மூவரும் மரணமடைந்திருந்தனர். இரவு நேரத்தில் நடந்த இப்பணியை மேற்பார்வையிட மாநகராட்சி அதிகாரிகள் யாருமே வரவில்லை என்பதுதான் கொடுமை.

மீட்புப் பணியின்போது
மீட்புப் பணியின்போது

இச்சம்பவம்குறித்து நம்மிடம் பேசிய மதுரை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் சிலர், “இறந்து போன மூவரும் பம்பிங் ஸ்டேஷனின் ஒப்பந்தப் பணியாளர்கள். இவர்களை இப்பணிக்கு ஈடுபடுத்தக்கூடாது. இச்சம்பவத்தில் ஒப்பந்த நிறுவனம் மீது மட்டும் வழக்கு பதிந்துள்ள காவல்துறை, இவர்களை இப்பணியில் ஈடுபடுத்திய மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு பதியவில்லை.

தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகள், சட்ட விரோதமாக மனிதர்களை இப்பணிகளில் ஈடுபடுத்துவதால், கடந்த 22 மாதங்களில் மட்டும் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் இறந்த மூன்று பேரையும் பணிக்கு அமர்த்திய ஒப்பந்த நிறுவனம், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம் சரியாக ஊதியம் வழங்குவதில்லை என்று ஏற்கெனவே பலமுறை ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஒரு தொழிலாளிக்கு தினமும் 700 ரூபாய் சம்பளம் என்று உள்ளாட்சி நிர்வாகத்துடன் ஒப்பந்தம் போடும் ஒப்பந்ததாரர்கள், தொழிலாளருக்கு கொடுப்பதோ வெறும் 300 ரூபாய்தான் என்கிறார்கள். மீதியை அதிகாரிகளும் ஒப்பந்ததாரரும் பிரித்துக் கொள்கிறார்களாம். ஒப்பந்த முறையில், அரசுக்கு நிரந்தர ஊதியம் மற்றும் படிகள் கொடுக்க வேண்டிய பிரச்னை இல்லை என்பதால் இந்த நடைமுறையை ஊக்குவிக்கிறார்கள். ஆனால் இந்த நிறுவனங்கள் குறைந்த கூலிக்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை” என்றனர்.

மரணமடைந்தவர்கள்
மரணமடைந்தவர்கள்

இவ்விவகாரத்தில், கடுமையான சட்டம் இருந்தாலும் நாடு முழுக்க அதை நடைமுறைப்படுத்துவதில்லை என்பதுதான் நிதர்சனம். மேலும் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும்போது நிகழும் மரணங்களை மறைத்து வேறு காரணங்கள் சொல்லி வழக்கு பதிவு செய்வதுதான் கொடுமையின் உச்சம். இதற்கு இந்தியாவின் எந்த மாநில அரசும் விதிவிலக்கல்ல. இதனால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடும் கிடைக்காமல் போய்விடுகிறது.

மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கதிர், ‘’மலக்குழி மரணங்களில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு, கையால் மலம் அள்ளுவதை தடுக்கவும், அப்பணியாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குமாறும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

எவிடென்ஸ் கதிர்
எவிடென்ஸ் கதிர்

‘விஷவாயு தாக்கி இறந்துபோனால் சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளர், வாடகைக்கு இருப்பவர்கள், சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யலாம்’ என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வழக்கு மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன, தண்டனை கிடைப்பதில்லை” என்றார்.

துப்புரவுப் பணியாளர் தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.வெங்கடேசன், ‘’கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய ‘ரோபாட்’ பயன்படுத்ததாத நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தொழிலாளர்களிடம் உயிர் முக்கியம் என்கிற விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இப்பணியில் ஈடுபட்டு தொழிலாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர் நல வாரியம் உள்ளது. ஆனால், இதுவரை ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை. முதல்வர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் எந்தத்திட்டமும் அத்தொழிலாளர்களிடம் சென்று சேர்வதில்லை’’ என்றார்.

செல்லூர் ராஜூ ஆறுதல்
செல்லூர் ராஜூ ஆறுதல்

மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திக்கேயனிடம் பேசியபோது, ‘``இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. நாங்களும் அலுவலக அளவில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவர்கள் பம்பிங் ஸ்டேஷன் ஊழியர்கள். இவர்கள் எப்படி மோட்டார் ரிப்பேர் செய்யப் போனார்கள் என்று தெரியவில்லை. கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய, பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட இயந்திரங்களைத்தான் பயன்படுத்துகிறோம். மனிதர்களைப் பயன்படுத்துவதில்லை. ரோபாட் பயன்படுத்துவதில் பல இடங்களில் சரியான ரிசல்ட் இல்லை என்பதால் அதை வாங்கவில்லை. மாநகராட்சி தூய்மைப்பணிகள், எல்லா நகரங்களிலும் அவுட் சோர்ஸிங் முறையில்தான் நடந்து வருகிறது. அரசாங்கத்தின் பாலிசி அது. இனி இதுபோல் சம்பவம் நடக்காதவாறு கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளோம்’’ என்றார்.