வணிகத்திற்காகப் பலர் மதுரை வந்தனர் என்பதைப் பற்றி நாம் அறிந்தோம். ஆனால் வணிகத்திற்கு வந்தவர்கள் போலவே இந்த நிலப்பகுதியை அறிந்துகொள்ளும் நோக்கிலும் பலர் வந்தனர். பயணிகள், உளவாளிகள், தூதர்கள், மதம் பரப்ப வந்தவர்கள் தொடங்கி பலர் வந்தவண்ணம் இருந்தனர். இந்த நிலத்திற்கு வந்தவர்கள் அனைவருமே தங்கள் ஊருக்குச் சென்று இந்த நகரத்தைப் பற்றி விவரித்தனர், அவர் அவர் மொழியில் குறிப்புகள் எழுதினர், அவ்வூர் மக்களுடன் உரையாடினர். உலகம் முழுவதுமிருந்து பயணிகள் ஏன் மதுரை நோக்கி வந்தார்கள் என்கிற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழும். மதுரை குறித்த கதைகள், செய்திகள், விவரிப்புகள்தான் இவர்களை மதுரை நோக்கி அனுப்பி வைத்துள்ளது என்பதையும் இவர்களின் பயணக் குறிப்புகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

கிரேக்க, லத்தீன், அரபு, சீன, பாரசீக மொழிகளில் மதுரை பற்றிய ஏராளமான குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன. பிளினி, தாலமி, நிகோலஸ் தாமஸ், இபின் பதூதா, ஸ்ட்ராபோ, மெகஸ்தனிஸ், மார்க்கோ போலோ எனப் பலர் காலம்தோறும் மதுரையைப் பற்றி ஏராளமான குறிப்புகளை விரிவாக எழுதிச் சென்றனர். இந்தக் குறிப்புகளின் வழியே நமக்கு மதுரையின் வரலாற்றுக் காலத்துள் வெவ்வேறு பரிணாமங்கள் கிடைக்கின்றன.
மெகஸ்தனிஸ் இந்த நிலப்பகுதிக்கு சுமார் கி.மு 300-ல் வந்தார். பண்டேயா என்னும் நாடு பெண்களால் ஆளப்படுகிறது எனக் குறிப்பு எழுதியிருக்கிறார். பாண்டிய என்பதை அவர்கள் பண்டேயா என்று அழைத்தனர். மெகஸ்தனிஸ்-ன் நாட்குறிப்பில் பாண்டிய நாடு பற்றிப் பல தகவல்கள் உள்ளன.
"ஹெர்க்குலிஸ் (Hercules) என்ற மன்னனுக்கு ஒரு பெண் பிறந்தாள், அதற்கு அவர் 'பண்டேயா' என்று பெயர் சூட்டினார். அவளுக்குக் கடல் வரை பரவியிருக்கும் தென்னாட்டைக் கொடுத்தார். அதில் 350 ஊர்கள் இருந்தன. நாள்தோறும் அரசுக் கருவூலத்திற்கு ஓர் ஊர் மக்கள் திறை (வரி) செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டார். அப்படித் திறை செலுத்தாத கிராமங்களிடம் வற்புறுத்தி திறை செலுத்தவும் ஏற்பாடுகள் இருந்தன. அதனால் அரசிக்குத் துணையாக எப்பொழுதும் சிலர் இருந்தனர்" என்று குறிப்புகளில் எழுதியிருக்கிறார். யவன நாட்டுத் தூதுவனின் நாட்குறிப்பில் மதுரையை மெதோரா ('Methora') என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிளினி (Pliny the Younger) என்பவர் உயிரியல் நூல் ஒன்றையும் (கி.பி.70), தாலமி (Ptolemy) பூகோள நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்கள். இந்த இரு நூல்களில் பண்டைய தமிழகத்தின் கடல் வாணிகத்தைப் பற்றிய ஏராளமான சான்றுகள் உள்ளன. வாணிகம் விரிவடைய விரிவடைய தமிழ்நாட்டிலேயே குடியேறிவிட்ட ரோமாபுரியினரின் ஜனத்தொகையும் வளர்ந்து வந்தது. அப்படித் தங்கியிருந்தவர்களிடமிருந்தே தமிழகத்தினைப் பற்றிய செய்திகளைத் தாம் கேட்டறிந்ததாக பிளினி கூறுகின்றார். அவர்களுடைய குடியிருப்பு (சேரி) ஒன்று மதுரை மாநகருடன் இணைந்திருந்ததாகத் தெரிகின்றது.

கி.மு.60-ல் இங்கு வந்த நிகோலஸ் தாமஸ் மற்றும் ஸ்ட்ரேபோ, “இந்திய ராஜ்ஜியம் ஒன்றில் இருந்து ஒரு தூதுக்குழு அகஸ்டஸ் சீசரின் அவைக்கு வந்தது, அந்தக் குழுவை அனுப்பிய அரசன் பாண்டியன் என்பவன் ஆவான். அந்தக் குழு அகஸ்டஸுக்கு அளிப்பதற்கான பரிசுகள் சிலவற்றைக் கொண்டு வந்தது. அந்தத் தூதுக்குழுவில் வந்த ஒருவன் ஏதென்ஸ் நகரில் தீக்குளித்து உயிர் துறந்தான்” என்றும் தனது குறிப்புகளில் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் கொண்டு வந்த பரிசுப் பொருள்களில் பத்து அடி நீளப் பாம்பும் ஏனைய பாம்புகள் சிலவும் இருந்தன எனவும், மூன்று அடி நீளமுள்ள ஆற்று ஆமையும், கழுதையைக் காட்டிலும் பெரிய கெளதாரி ஒன்றும் இருந்தன எனவும் எழுதியுள்ளனர்.
தமிழகத்துடன் ரோமர்கள் மேற்கொண்டிருந்த வாணிகம் அவர்களுடைய பேரரசரின் ஆதரவுடன் செழிப்புடன் வளர்ந்து வந்தது. இவ்வாணிகத்தின் வளர்ச்சியில் பேரரசர் அகஸ்டஸ் விருப்பம் காட்டினார். ஆர்மஸ் (Hormuz) துறைமுகத்திலிருந்து ஏறக்குறைய நூற்றிருபது மரக்கலங்கள் பாய்விரித்தோடியதை நேரில் கண்டதாக ஸ்டிராபோ கூறுகின்றார்.
பிளினி மற்றும் தாலமி (கி.பி 1-140) இங்கு வந்தனர் அவர்கள் மதுரையைப் பாண்டிய மன்னன் ஆண்டதாகத் தங்கள் குறிப்புகளில் தெரிவிக்கிறார்கள். இந்தியாவிலிருந்து இறக்குமதியான ஒன்பதடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்றைத் தாம் எகிப்தில் கண்டதாகவும் ஸ்டிராபோ எழுதியுள்ளார்.

முதல் இரண்டு நூற்றாண்டுகளில் (கி.பி. 1 – 200) தமிழர்கள் யவனர்களோடு சிறந்த வணிக உறவு வைத்திருந்தனர் என்று செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலின் குறிப்புகளில் உள்ளது. பாண்டிய நாட்டுத் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காயல்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளஸ் கூறுகிறார்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் தங்கிவிட்டு தெற்கே வந்துள்ளார். அவர் தனது நாட்குறிப்பில் மதுரையை இவ்வாறு விவரிக்கிறார், “அது நிலவளமற்ற நாடு, எங்கும் களரும் தரிசு நிலமுமே மிகுந்திருந்தன. ஆனால் கடல்முத்து வணிகத்திற்கு அந்த நாடு மையமாகத் திகழ்ந்தது. மக்கள் கறுப்பு நிறமுடையவர்கள், இனிமையற்ற மூர்க்கர்கள், மதத் துறையில் கலப்புக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள், ஆனால் வணிகத்தில் கைதேர்ந்தவர்கள். அங்கே பாழடைந்த பழைய மடங்கள் இருந்தன, மிகச் சிலரே நல்ல நிலையில் இருந்தனர் பௌத்தமல்லாத பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக இருந்தனர், அவர்களுள் முக்கியமாக திகம்பரர்களைச் சொல்லலாம். அந்த இடத்தில் புத்தர் தம்முடைய சமயக் கொள்கைகளைப் பிரசாரம் செய்து கணக்கற்ற மக்களைத் தம்முடைய மதத்தில் சேர்த்துக்கொண்டார்.”
சீன நாட்டு வரலாற்றியல் அறிஞர் யூ உவான் கி.பி. 250-ல் இங்கு வந்தார். அவர் பாண்டியர் அரசாங்கத்தைப் பாண்யுவி என அவரது எழுத்துகளில் குறிப்பிடுகிறார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே உயரம் குறைவாக உள்ளவர்கள் என அவர் குறிப்புகளில் எழுதியிருக்கிறார். சீன வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்துள்ள ஆண்டு நிகழ்ச்சிப் பதிவேடுகளில் இன்னும் விரிவான குறிப்புகள் உள்ளன.
குலசேகர பாண்டியனின் (கி.பி. 1268-1310) ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச் செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறிப்புகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இபின் பதூதா (Ibn Battuta) என்கிற மோரோகோ நாட்டுப் பயணி மதுரையில் இருந்த நேரத்தில் மதுரையில் பெரும் காலரா தொற்று பரவியிருந்தது. இந்தத் தொற்றுக்கு இபன் பதூதா ஆளானார். அந்த நேரம் மதுரையை ஆண்ட சுல்தான் அவரது மனைவி, தாய் மற்றும் ஒரே மகன் காலராத் தொற்றுக்கு ஆளாகி மரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து சுல்தானாக ஆட்சிக்கு வந்த நஸ்ருத்தீன், இபன் பதூதாவிற்கு முந்நூறு தங்க நாணயங்கள் கொடுத்து அரசின் மரியாதைக்குரிய அங்கியையும் கொடுத்து கௌரவித்தார். அடுத்து இங்கிருந்து சீனா செல்ல விருப்பம் தெரிவித்த இபன் பதூதாவிற்குக் கப்பலை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.
இபின் பதூதா தனது பயணத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் என்ற கடற்கரைத் துறைமுகத்திற்கு வந்து மூன்று மாதம் தங்கியிருந்ததாக ஒரு குறிப்பு எழுதியுள்ளார். இந்த நிலத்தின் மக்கள் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். விருந்தினர்களை வரவேற்று வெற்றிலை பாக்கு தருவது அவர்களுக்குத் தங்கமோ வெள்ளியோ தருவதைவிடவும் உயர்வானதாகக் கருதப்பட்டதாக அவர் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளார். பாண்டியர்களுக்கும் ஏமன் நாட்டவர்க்கும் 1289-ம் ஆண்டில் சிறந்த குதிரைவணிகம் நடந்ததாக இபின் பதூதா குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்துக்கும் எகிப்துக்குமிடையே நடைபெற்ற வாணிகத் தொடர்பு மிகப் பழைமையானது. ‘எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ்’ (Periplus of the Erithraean Sea) என்னும் நூலை டபிள்யூ. எச்.ஸ்காபி என்பவர் பதிப்பித்துள்ளார். அதன் பதிப்புரையில் அவர் கிரேக்க மக்கள் நாகரிகம் அடைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தும் பண்டைய இந்திய நாடுகளும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன என்று கூறுகிறது.
தென்னிந்தியாவுக்கும் சுமேரியாவுக்குமிடையில் கி.மு. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வணிகப் போக்குவரத்து நடைபெற்று வந்ததென்று சேஸ் (Sayce) என்பார் தம் ஹிப்பர்ட் சொற்பொழிவுகளில் (1887) குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்துக்கும் பாபிலோனியாவுக்கும் இடையே மிக விரிவான வாணிகம் நடைபெற்று வந்ததற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. பாபிலோனியாவில் ஒரு வணிகர் நடத்திவந்த காசு வாணிகத்தில் கணக்குப் பதியப்பட்ட களிமண்ணேடுகள் (Clay Tablets) சிலவற்றில் பாபிலோனியர் தமிழக வணிகருடன் கொண்டிருந்த பற்று வரவுக் கணக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. அதே காலத்தில் தமிழ் வணிகர்கள் பாபிலோன் நகரத்தில் குடியேறி அங்கேயே தங்கி தங்கள் தொழிலை நடத்தி வந்ததற்கும் கணிமண்ணேடு சான்றுகள் கிடைத்துள்ளன.

வணிகத்தின் வழியே நம் பண்டங்கள் உலகின் பல நகரங்களுக்குச் சென்றது போலவே நம் மொழியும் சென்றது ஒரு சுவாரஸ்யமான கதை. இங்கு புழங்கும் பண்டங்கள் பலவற்றின் பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளே என்பதை மொழியியல் நிருபணர்கள் தெரிவிக்கிறார்கள். கிரேக்கர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்துடன் வணிகத்தில் இறங்கினார்கள். இந்த வணிகத்தின் மூலம் தமிழ்ச் சொற்கள் பல கிரேக்க மொழியில் நுழைந்து இடம்பெற்றுள்ளன. சொபோகிளீஸ், அரிஸ்டோ பேனீஸ் முதலிய கிரேக்க அறிஞரின் நூல்களில் இவற்றைக் காணலாம். ‘அரிசி’ என்னும் தமிழ்ச் சொல் கிரேக்க மொழியில் நுழைந்து ‘அரிஸா’ என்று உருக்குலைந்தது. அம்மொழியில் கருவா (இலவங்கம்) என்னும் தமிழ்ச் சொல் ‘கார்ப்பியன்’ என்றும், இஞ்சி வேர் ‘சின்ஞிபேராஸ்’ என்றும், பிப்பாலி ‘பெர்ப்பெரி’, முருங்கை ‘மொரிங்கா’, மாங்கா ‘மெங்கோ’ வாகவும் உருமாற்றம் அடைந்தன.

வெளிநாட்டவர்களின் குறிப்புகளில் நம் ஊர்ப் பெயர்கள் அவர்கள் நாவில் நுழையாததால், அவர்களுக்குப் புரிந்த அளவில் அவர்கள் தங்களின் பிரதிகளில் அதன் பெயர்களை எழுதியுள்ளனர். ரோமாபுரி ஆசிரியர்கள் எழுதிய நூல்களில் அன்றைய தமிழகத்தின் துறைமுகங்களைப் பற்றிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றில் பல துறைமுகங்களின் பெயர்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன.
துறைமுகப் பட்டினங்களான தொண்டியைத் திண்டிஸ் என்றும், முசிறியை முஸிரிஸ் என்றும், பொற்காட்டைப் பகரி என்றும், குமரியைக் கொமாரி என்றும் ரோமர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தின் கீழைக் கடற்கரைத் துறைமுகங்களான கொற்கையைக் கொல்சாய் என்றும், நாகப்பட்டினத்தை நிகாமா என்றும், காவிரிப்பூம்பட்டினத்தைக் கமரா என்றும், புதுச்சேரியைப் பொதுகே என்றும், மரக்காணத்தைச் சோபட்மா என்றும், மசூலிப்பட்டினத்தை மசோலியா என்றும் சில நூல்கள் குறிப்பிடுகின்றன.
பாக்ட்ரியானாவை ஆண்ட கிரேக்க மன்னர்களுள் பலருடைய பதக்கங்களில் இந்திய மொழி ஒன்றின் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன என்றும் அது தமிழ்தான் என்றும் ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் உறுதி செய்கிறார்கள். அகஸ்டஸ், டைபிரியஸ் ஆகியவர்களின் காலத்தைச் சேர்ந்த ரோமானிய நாணயங்கள் தமிழக அகழாய்வுகளில் கிடைத்துள்ளன.
ரோமானியப் படைகளில் பணியாற்றிய ஹிப்பாஸ் எனும் எகிப்திய மாலுமி பருவக்காற்றின் தன்மைகளைக் கண்டுபிடித்தான். அதன் பின்னர் கப்பல்கள் நடுக்கடல் வழியாக நேரடியாக இந்தியாவுக்கு வந்தன. இதுவரை வருடத்திற்கு 20 கப்பல்கள் இந்தியா வந்துகொண்டிருந்த நிலையில் இந்தப் புதிய சுருக்கமான வழிக்குப் பிறகு சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு கப்பல் எகிப்தியத் துறைமுகங்களிலிருந்து கீழை நாடுகளுக்குச் சென்றது.

இப்பொழுதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஜனவரி வரை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தேனீக்களைப் போலவே மதுரை நகரத்தின் தெருக்களில் உலவும். அவர்களில் பலர் இந்த நகரத்தை நேசிப்பவர்கள், மீண்டும் மீண்டும் இங்கே வருபவர்கள். ஒரு முறை ஹோட்டல் ஒன்றில் என் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஐரோப்பியக் குடும்பத்தினருடன் உரையாடினேன், அவர்கள் உள்ளூர்க்காரர்களைப் போலவே விரும்பி நம் ஊர் உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் நான்கு வாரங்களை மதுரையில் செலவிடுகிறோம் என்றார்கள். நான்கு வாரங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன், இந்த நகரத்தின் வீதிகள் ஒவ்வொன்றிலும் காலார நடப்போம் என்றார்கள். மதுரையில் காலார நடப்பது வரலாற்றுக்குள் நடப்பது என்பதை மதுரைக்காரர்கள் போலவே அந்தச் சகோதரர்கள் அறிந்துவிட்டார்கள் போலும்.
நன்றி: தென்னிந்தியாவைப் பற்றிய வெளிநாட்டினர் குறிப்புகள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி