Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 12 | மதுரை - சிற்றூர், பேரூர், மூதூர்!

தூங்காநகர நினைவுகள்
News
தூங்காநகர நினைவுகள்

ஊர்களில் சிற்றூர், பேரூர், மூதூர் போலவே சங்க காலத் தமிழகத்தில் சில நகரங்களும் இருந்தன. நகரங்களில் பல வகைகள் இருந்தன.

Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 12 | மதுரை - சிற்றூர், பேரூர், மூதூர்!

ஊர்களில் சிற்றூர், பேரூர், மூதூர் போலவே சங்க காலத் தமிழகத்தில் சில நகரங்களும் இருந்தன. நகரங்களில் பல வகைகள் இருந்தன.

தூங்காநகர நினைவுகள்
News
தூங்காநகர நினைவுகள்
உலகம் முழுவதிலும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும் என்பதை நமக்கு வரலாற்றாசிரியர்கள் விவரித்த வண்ணம் உள்ளனர். மன்னர்கள், ஆட்சியாளர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள் ஏனெனில் அதிகாரம் என்பது கால அளவுடன் கூடிய ஒரு பண்டம். அது வடிவமைப்பிலேயே தனக்கான வீழ்ச்சியையும் சேர்த்தே சுமக்கிறது.

உலகின் எந்த நிலத்திலும் மன்னர்கள், ஆட்சியாளர்கள் நிரந்தரமானவர்கள் அல்லர் மாறாக மக்கள்தான் வரலாற்று காலம் தொட்டே ஒரு நிலத்தின் நிரந்தர குடிகள். பொதுவாகவே வரலாறுகள் ஆட்சியாளர்கள் பற்றி பேசும் அளவிற்கு மக்களைப் பற்றி பேசியதில்லை.

ஒரு நிலத்தில் வசித்தவர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டார்கள், அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்வதில் எப்பொழுதுமே எனக்கு விருப்பமாகவே இருந்துள்ளது. அவர்கள் வாழ்ந்த ஊரும் அவர்களது வாழ்க்கையும், தொழிலும், இடம்பெயர்வும், அனுபவமும்தானே மனித குலத்தின் வரலாறாக இருக்க முடியும். சாமானியர்கள் பற்றியும் அவர்களை ஆட்சி செய்த அரசுகளின் நிர்வாக முறைகள் பற்றியும் தமிழ் இலக்கியங்கள் அளவிற்கு உலகத்தில் வேறு எந்த இலக்கியமும் பதிவு செய்யவில்லை.

வேளாண் குடிகள்
வேளாண் குடிகள்

சங்க காலத்திலேயே ஊராட்சி, நகராட்சி என்ற அமைப்புகள் இருந்தன. பாண்டிய பேரரசு காலத்திலேயே ஊராட்சி ஓங்கி வளர்ந்து இருந்தது. ஊர்களின் பரப்பளவை, மக்கள் தொகையை பொறுத்து அவை சிற்றூர், பேரூர், மூதூர் என அழைக்கப்பட்டன.

ஊரின் நடுவில் மக்கள் கூடிப் பேசுவது வழக்கமாக இருந்தது. இப்படி கூடும் கூட்டத்திற்கு மன்றம், பொதியில், அம்பலம், அவை என்னும் பெயர்கள் இருந்ததாக இலக்கியங்களின் துணையுடன் அறியமுடிகிறது. மன்றம் என்பது ஊர் நடுவிலுள்ள மக்கள் கூடும் இடம் எனவும், அம்பலம், பொதியில் என்பன சிறுமாளிகை போலான ஒரு கட்டிட அமைப்பை குறிப்பிடுகின்றன. பொதியில் சாணத்தால் மெழுகப்பட்டிருந்தது எனப் பட்டினப்பாலை கூறுகிறது. சில ஊர்களில் பெரிய மரத்தடியில் மன்றம் கூடியது. வேப்ப மரத்தடியில் இது அமைந்திருந்தது எனப் புறநானூற்றுப் பாடல்கள் துள்ளியமாக விவரிக்கின்றன. இந்த மன்றத்தில் முதியோர்கள் கூடினார்கள். இந்தக் கூட்டங்களில் மக்களிடையே நிகழ்ந்த வழக்குகளைத் தீர்க்கும் பணி நடைபெற்று வந்தது. மன்றத்தார் தான் ஊர்ப் பொதுக்காரியங்களையும், சமூக நலத் திட்டங்களையும் பொறுப்பேற்று நடத்தி வந்தனர். இன்றைய ரசிகர் மன்றங்கள், நற்பணி மன்றங்களின் செயல்திட்டங்களுக்கு இந்த நிலத்தில் ஒரு வரலாற்று தொடர்ச்சி உள்ளது.

ஊர்களில் சிற்றூர், பேரூர், மூதூர் போலவே சங்க காலத் தமிழகத்தில் சில நகரங்களும் இருந்தன. நகரங்களில் பல வகைகள் இருந்தன. கடலோரத்தில் இருந்த நகரத்தைப் பட்டினம் என்றும், பாக்கம் என்பது பட்டினத்தின் ஒரு பகுதியாக இருந்த நகரத்தையும் குறிக்கிறது. பின்னாள்களில் நீர்நிலைகளை ஒட்டி அமைந்த இடங்களையும் பாக்கம் என்று அழைத்தார்கள்.

சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த நகரங்களுள் சிறந்தவை புகார் (காவிரிப்பூம்பட்டினம்), கொற்கை, மதுரை, வஞ்சி, கரூர், முசிறி, காஞ்சி முதலானவை. நகரங்கள் வணிகத்தினாலும், தொழில் சிறப்பினாலும் வளமுடன் இருந்தன. தொழிலின் பயனால் மதுரையும் காவிரிப்பூம்பட்டினமும் சிறப்பாகவே வளர்ந்திருந்தன.

இரவு நேரங்களில் நகரங்கள் பாதுகாக்கப்பட்டன. இரவு நேரங்களில் ஊர்க்காவலர்கள் ஊரை வலம் (patrol) வந்து பாதுகாத்தனர். இன்றளவும் நம் காவல்துறையில் ஊர்க்காவல்படை ஒரு பிரிவாக செயல்பட்டு வருகிறது.

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை

காலம் காலமாக நிலவரிதான் அரசின் முக்கிய வருவாயாகத் திகழ்ந்துள்ளது. விளைச்சலில் ஆறில் ஒரு பாகம் அரசுக்கு வரியாக வசூலிக்கப்பட்டது. இந்த வருவாய்களுடன் சிற்றரசர்கள் செலுத்திய திறையும் அரசாங்கத்தின் வருவாயில் முக்கிய இடம் வகித்தது. மன்னன் போர் புரிந்து ஒரு நாட்டை வென்றால் பெரும்பாலும் அந்நாட்டிலிருந்து செல்வங்களைக் கைப்பற்றுவது வழக்கம். இதுபோன்று கைப்பற்றப்பட்ட செல்வங்களும் அரசிற்கு வருவாயாகவே கணக்கிடப்பட்டது. குற்றம் புரிந்தோரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. பொருள்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது வரி வசூலிக்கப்பட்டது. இது போன்ற வரிகளை மக்கள் பண்டமாகவோ அல்லது பணமாகவோ அரசுக்குச் செலுத்தி வந்தனர்.

வரி வசூலிப்பதற்கு என்று தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். வரி வசூலித்த அதிகாரி வாரியர் என்று அழைக்கப்பட்டார். வரி பற்றிய கணக்குகளைப் பராமரித்தவரை ஆயக் கணக்கர் என்றார்கள். நீர்ப்பாசனத்திற்காகக் கால்வாய்கள் மற்றும் குளங்கள் வெட்டுதல், பிற பொதுப்பணிகள் வழங்குதல் போன்ற செலவுகளுக்கு அரசின் வருவாயிலிருந்து செலவு செய்தனர். வரிவசூலிப்பது போல் வரிவிலக்கும் சங்க கால அரசியலில் இருந்ததாகத் தெரிகிறது.

கிராமங்கள் அவற்றில் வசிக்கும் மக்கள் மற்றும் எண்ணிகையின் அடிப்படையில்தான் பெயரிடப்பட்டன. பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாதவர்கள், தொடங்கி யார் ஓர் ஊரில் வசிக்கிறார்கள் என்பதை பொறுத்தே அந்த கிராமம் அழைக்கப்பட்டது. கள்ளர்கள் வசிக்கும் கிராமங்கள் பட்டி அல்லது குறிச்சி என்று அழைக்கப்பட்டன, அரண்காப்பு கொண்ட கிராமங்கள் கோட்டை என்று அழைக்கப்பட்டன, தெலுங்கு/கன்னடம் பேசுபவர்கள் வசிக்கும் கிராமங்கள் ஊர்கள் என்று அழைக்கப்பட்டன, பிராமணர்கள் வசிக்கும் இடங்கள் சதுர்வேதிமங்கலம் என்றும் தமிழர்கள் வசிக்கும் கிராமங்கள் குடி என்றும் அழைக்கப்பட்டது. மறவர் கிராமங்கள் கொண்ட தொகுதிகள் (மாவட்டம்) மாகாணம் என்று அழைக்கப்பட்டது, கள்ளர்கள் வசிக்கும் மாவட்டங்கள் நாடு என்று அழைக்கப்பட்டது. மதுரை மாவட்டம் அல்லது தலைநகருக்கு அருகில் உள்ள பகுதியை மதுரை வளநாடு என்று அழைத்தார்கள். பயிர்த் தொழில் செய்பவர்களும் தங்கள் தொகுதிகளை நாடு என்றே அழைத்தனர். நாயக்கர் ஆட்சி காலத்தில் சில நாடுகள் சீமை என்று அழைக்கப்பட்டன. தமிழ்நாடு என்பதில் நாடு என்பது தவறாக வந்துவிட்டது என்று புலம்புகிறவர்கள், நாடு என்கிற இந்தச் சொல் இங்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக புழங்கும் சொல் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை

நாடு என்கிற பெயரில் இருந்துதான் நாட்டாமைக்காரன் என்கிற வார்த்தை உருவாகியிருக்கிறது. ஆனால் பின்னாட்களில் ஒவ்வொரு கிராமத்திற்கும் நாட்டாமைக்காரர்கள் இருந்தார்கள் என்பதை மதுரையில் அறிய முடிகிறது. ஆனால் இதை ஒத்த அதிகாரப்பதவி கள்ளர், மறவர் கிராமங்களில் அம்பலக்காரர்கள் என்றும் பிற கிராமங்களில் மணியக்காரர்கள் என்றும் அழைக்கப்பட்டது. இவர்கள் வரிவசூலிப்பவர்களாகவும் கணக்குப் பிள்ளைகளாகவும் இருந்துள்ளனர்.

பிரதானிகள் நாட்டின் நிதி மந்திரியாக வரி வசூலிக்கும் பொறுப்பை ஏற்றார்கள், ஒரு நாட்டில் உள்ளாட்சி நிர்வாக பொறுப்பாளர்களாகவும் இவர்களே இருந்துள்ளார்கள். வருவாய் மற்றும் செலவினங்கள் (Budget) குறித்த கணக்குகளைத் தயாரித்து வைத்திருப்பது கணக்கரின் பொறுப்பாகும்.

இந்த வரிகள் பெரும்பாலும் பொருளாகவே செலுத்தப்பட்டன. போர் காலங்களில் வரியின் அளவு கூடியிருக்கிறது. மெல்ல மெல்ல திறை கூடிக் கொண்டே சென்று கும்பினிக் காலத்திலும் அதனைத் தொடர்ந்த பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும் இவர்களின் திறை விளைச்சலில் மூன்றில் ஒரு பங்காக அதிகரித்தது.

நில வரியை தவிர்த்து நிலச்சொந்தக்காரர்கள் அரசருக்கு தேவைப்படும் நேரத்தில் எல்லாம் ஒரு ஏர் வைத்திருப்பவர் ஒரு ஆள் என்கிற விகிதத்தில் ஒரு தொழிலாளியை அனுப்பி வைக்க வேண்டும், இந்த வரியை ஏர்விணை என்றார்கள். ஒரு கிராமத்தில் சாகுபடி நிலங்களை பொறுத்து தோணித்துறைக்கு படகு வரிகள் போடப்பட்டன. மழைக்காலத்தில் ஆற்றை கட்டணமின்றி கடக்க இந்த வரி விதிப்பு செலவிடப்பட்டது. திருவிழாக் காலங்களில் கோயிலின் பெரிய தேர்களை இழுக்க ஒவ்வொரு கிராமமும் தேரிழுக்க ஆள்களை அனுப்பி வைக்க வேண்டும், இதனை தேர் ஊழியம் என்றார்கள். தறி நெசவாளர்கள், எண்ணெய் ஆட்டுபவர்கள், கைவினைஞர்கள், மோர் விற்பவர்கள், மாட்டு வண்டி வைத்திருப்பவர்கள் என இவர்கள் அனைவருக்கும் ஆண்டு வரி இருந்தது. நகருக்குள் நுழையும் தானியங்கள் மற்றும் எல்லா விற்பனைப் பொருட்களுக்கும் வரி வசூலிக்கப்பட்டது. முத்து குளித்தவர்கள் தங்களின் படகு ஒன்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட வரியைச் செலுத்தினார்கள்.

1860ல் மதுரையின் தோற்றம்
1860ல் மதுரையின் தோற்றம்

தளகர்த்தர்தான் தலைநகரில் உள்ள அனைத்து படைகளுக்கும் படைத்தலைவராக இருந்தார். உள்நாட்டு பகைவர்களை, அந்நிய நாட்டு எதிரிகளை வெற்றிகொள்ளும் பொறுப்பு இவருடையது. அரசரின் படை, பீரங்கிப் படை, யானைப் படை, குதிரைப்படை என ஏராளமான பிரிவுகள் இருந்தன. தளகர்த்தர் இந்த அனைத்துப் படைகளையும் நவீனமாக்குதல், பயிற்சி அளித்தல், ஆயுதங்கள் தயாரித்தல் என முழு பாதுகாப்பையும் உத்திரவாதப்படுத்தும் பொறுப்பை ஏற்றார். மதுரை நகரத்தின் கோட்டை காவல் படை இருந்தது. எழுபத்தியிரண்டு பாளையக்காரர்களும் தேவைப்படும் நேரத்தில் கோட்டை காவல் பணிக்கு வீரர்களை அனுப்ப வேண்டும். இதற்காக எப்பொழுதுமே தயார் நிலையில் அவர்கள் வசம் படைகள் இருக்க வேண்டும். வயது வந்த திடகாத்திரமான விவசாயிகள் அனைவருமே போர் முனைக்கு செல்ல எப்பொழுதும் தயாராகவே இருக்க வேண்டும். போர் பயிற்சி பெற்றவர்களும் இருந்தார்கள். அதே வேலையில் போருக்கு சென்றால் கொள்ளையடித்து வரலாம் என்கிற எண்ணமும் அன்றே ஒரு சாராரிடம் இருந்தது.

ராயசம் அரசரின் நம்பிக்கைக்கு உரியவரான அந்தரங்கச் செயலாளர், கடிதப் போக்குவரத்திற்கான ஆவணங்களையும் கொடைகளுக்கான அரசரின் ஆவணங்களையும் தயார் செய்வார். சேனாதிபதி அரசரின் தூதுவராக அந்நிய அரசவை நிகழ்வுகளில் பங்கேற்பார், வெளிநாடுகளுக்கு செல்வார். அரசியல் நுணுக்கங்கள் அறிந்தவர்களே இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர், அத்துடன் பேச்சுத் திறனும், ஆழ்ந்த நுட்பமும், பக்குவமும் சேனாதிபதி பதவிக்கு முக்கிய அம்சங்களாக கருதப்பட்டன.

திருமலையின் காலத்தில் இந்த நிர்வாகப் பதவிகளில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன, மந்திரி மற்றும் தளகர்த்தர் பதவிகள் ஒழிக்கப்பட்டு தளவாய் என்கிற புதிய பதவி ஏற்படுத்தப்பட்டது. தளவாய் என்பது ஒரு நாட்டின் பிரதம மந்திரிக்கு இணையான பதவி. தளவாய் ஊரில் இல்லாத நேரம் அந்த நிர்வாகப் பொறுப்பிற்கு கோட்டை தளகர்த்தர் என்கிற புதிய பதவி உருவாக்கப்பட்டது.

தமிழ் நிலத்தின் பெண்கள்
தமிழ் நிலத்தின் பெண்கள்

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பிள்ளைகள் படிக்கும் வழக்கம் இருந்தது. அரசாங்கங்கள், கல்விக்கூடங்களை வளர்க்கவில்லை. ஆனால் பிராமணர்கள் வேதபாடசாலைகளில் சேர்ந்து வேதம் பயின்றனர் என்றும், பிராமணர்களின் கல்விச் செலவை அரசு ஏற்றிருந்ததென்றும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆலயங்களை நிர்வகிப்பவர்களுக்கு தாராளமான பணம், உணவு, உடை ஆகியவை வழங்கப்பட்டன. சைவ வைணவ கோயில்கள் பராமரிப்பவர்களுக்கு அரசின் நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டன. இதனாலேயே பிராமணர்கள், குருமார்கள், புரோகிதர்கள் அரசரை எப்பொழுதுமே புகழ்ந்து பேசுபவர்களாக இருந்தனர். இவர்களுக்கு மட்டுமே அரசின் அன்றாட செய்திகள் வந்து சேர்ந்துள்ளன. இவர்கள் அரசருக்கு நெருக்கமாகவும் இருந்தார்கள்.

கடும் பஞ்சமும் வறட்சியும் நிலவிய காலத்தில் குடியானவர்கள் கடும் சிரமங்களைச் சந்தித்தார்கள். பசியால் பலர் இறந்திருக்கிறார்கள், குழந்தைகள் இறந்து பிறக்கும் நிகழ்வுகள் வழக்கமாக இருந்துள்ளன. ஊட்டச்சத்துக் குறைபாடுகள் சமூகத்தின் பெரும் பகுதியானவர்களை கடும் சோர்வுக்குள் தள்ளியது. ஆனால் இதில் பெரும் பகுதியான பஞ்சங்கள் கடுமையான வரிவிதிப்பின் பயனால் எழுந்தவை என்பதை இந்தப் பஞ்ச கால ஆவணங்களைக் கூர்ந்து பார்க்கும் போது அறிய முடிகிறது. அரசர்களின் பகட்டான வாழ்க்கை, படைகளுக்கு அவர்கள் செலவிட்ட தொகை, அரண்மனைகள் கட்ட அவர்கள் செய்த ஆடம்பரச் செலவுகள், சதித் திட்டங்களை தீட்ட செலவிட்ட தொகை, அந்தப்புரத்தில் கொட்டப்பட்ட செல்வங்கள் என ஒவ்வொரு அரசும் பகட்டிற்கு செலவிட்ட செல்வத்திற்கு கணக்குகள் ஏதும் கிடையாது.

பஞ்சகாலத்தின் இடம்பெயர்வுகள்
பஞ்சகாலத்தின் இடம்பெயர்வுகள்

இருப்பினும் அவ்வப்போது ஒற்றர்கள் வாயிலாக மக்களின் நிலையை மன்னர்கள் அறிந்து அதற்கு ஏற்றவாறு பணியாற்றினர் அல்லது சூழலுக்கு ஏற்ப பழியும் வாங்கினர் என்பதும் வரலாறு. இன்றைய ஜனநாயகத்தில் ஒரு நிலத்தின் சாமானியர்களின் நிலை எவ்வாறாக உரிமைகள், வளர்ச்சி, வாய்ப்புகள் என பரிணமித்துள்ளது என்பதை அறிந்து கொள்ள நாம் வேந்தர்கள், மன்னர்கள் காலத்தில் எவ்வாறு இருந்தோம் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. மனித குல வரலாறு நெடுகிலும் மனிதர்களைப் போலவே நம்மை ஆளும் கட்டமைப்புகளும் மெல்ல மெல்ல பரிணமித்திருக்கிறது, மேம்பட்டிருக்கிறது. இந்த வரலாற்றை ஆழமாக அறிந்துகொள்ளும் பட்சத்தில்தான் இன்றைய உரிமைகளை நாம் பாதுகாப்பவர்களாக மாறுவோம்.

நன்றி:

THE MADURA COUNTRY MANUAL - J.H.NELSON

மதுரையின் அரசியல் வரலாறு 1868 - தமிழில் ச.சரவணன்

தமிழ் இணையக் கல்விக்கழகம்