Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 25: மதுரை வண்ணங்களின் கலவை!

தூங்காநகர நினைவுகள்
News
தூங்காநகர நினைவுகள்

இங்கே சாதி, மதம், மொழி எனப் பல அடைமொழிகளுடன் மக்கள் பிரிக்கப்படலாம். ஆனால் எல்லோருமே ஒரு கலப்பின் உருவாக்கம்தான் என்பதை மரபியல் ஆய்வுகள் நமக்குச் சொல்லிய வண்ணம் உள்ளது.

Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 25: மதுரை வண்ணங்களின் கலவை!

இங்கே சாதி, மதம், மொழி எனப் பல அடைமொழிகளுடன் மக்கள் பிரிக்கப்படலாம். ஆனால் எல்லோருமே ஒரு கலப்பின் உருவாக்கம்தான் என்பதை மரபியல் ஆய்வுகள் நமக்குச் சொல்லிய வண்ணம் உள்ளது.

தூங்காநகர நினைவுகள்
News
தூங்காநகர நினைவுகள்
சங்க இலக்கிய காலத்திலிருந்தே மதுரை ஒரு வர்த்தக கேந்திரமாகத் திகழ்ந்து வந்தது. ரோமாபுரி, எகிப்து, அரேபிய, சீனப் பயணிகள் - வியாபாரிகள் மதுரைக்கு வந்தவண்ணம் இருந்தனர். உலகப் பயணிகளின் குறிப்புகளின் வழியே மதுரை பற்றிய செய்திகள் உலகெங்கும் உள்ள மக்களிடையே சென்றது. மதுரை என்கிற வரலாற்று நகரம் உலகம் முழுவதும் இருந்தவர்களை ஈர்த்தது.

இப்பொழுதும் மதுரை என்கிற இந்த நகரத்தை நான் ஒரு கறிதோசையாகக் கற்பனை செய்கிறேன். வரலாறு நெடுகிலும் இந்தக் கறிதோசை எப்படி உருவாகிறது, அதன் செய்முறை என்ன, அதில் என்னென்ன பொருள்கள் அடங்கியிருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் ஆய்வு முடிவுகள் 2018 மார்ச்சில் வெளியானது. டேவிட் ரெய்ச்சுடன் இந்த ஆய்வில் உலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொல்லியல், மானுடவியல், மரபணுவியல், வரலாறு எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் பணியாற்றினார்கள். அந்த ஆய்வுகளின் முடிவுகள் கடந்த 10,000 ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வுகள் நடந்துள்ளன என்பதை நிறுவுகிறது.

65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய தற்கால மனிதர்களின் ஒரு கூட்டம் உலகம் முழுவதும் சென்றது. அவர்களின் ஒரு பகுதி நம் நிலப்பகுதிக்கும் வந்தார்கள். இதன்பிறகு இரண்டாவது குடிப்பெயர்வு தென்மேற்கு ஈரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து நடந்திருக்கிறது. அதாவது, ஜக்ரோஸிலிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும் ஆடு மேய்ப்பவர்களாகவும் ஒரு பெரும் மக்கள் கூட்டம் வந்திருக்கிறது. இந்தக் குடிப்பெயர்வானது இன்றிலிருந்து சுமார் 7000 - 3000 ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது. ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் இவர்கள் கலக்கிறார்கள். இந்த இருவரும் இணைந்துதான் சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கினார்கள்.

ஆதி மனிதனின் ஆடைகள்
ஆதி மனிதனின் ஆடைகள்

மூன்றாவது குடிப்பெயர்வில், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய கஜகஸ்தான் பகுதியிலிருந்து ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் இங்கே இவர்கள்தான் உருவாக்கினார்கள் என்று தனது ஆதி இந்தியர்கள் எனும் நூலில் மிக விரிவாக ஆய்வு செய்திருக்கிறார் டோனி ஜோசப் அவர்கள்.

இந்திய மக்களை நீங்கள் கறிதோசையாகக் கருதினால், முதலில் தோசைக்கல்லில் ஊற்றப்பட்டு ஏற்படுத்தப்பட்ட அடிபாகம்தான் முதல் அலையாக 65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து (Out of Africa) இடம்பெயர்ந்து வந்த மக்கள். இந்தக் கறிதோசையின் மீது அடுத்து போடப்பட்ட கறியாகவே சிந்து சமவெளி மக்களின் வருகை அமைகிறது. இதற்கு அடுத்து வந்த ஆரியர்களின் வருகை தொடங்கி இந்த நிலத்தில் தொடர்ந்து நிகழ்ந்த இடப்பெயர்வுகள் கறிதோசையில் உள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, மல்லித்தூள், மிளகாய்த் தூள், பட்டை, சோம்பு, கிராம்பு, கறிமசால் பொடி, கொத்தமல்லி, கறிவேப்பிலையாகவும் உள்ளன.

ஆப்பிரிக்காவில் இருந்த நவீன மனிதன் வெளியேறிச் சென்ற பாதைகள்
ஆப்பிரிக்காவில் இருந்த நவீன மனிதன் வெளியேறிச் சென்ற பாதைகள்

பழந்தமிழகத்தில் வாழ்ந்த நாகர்களுடன் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆரியர்கள் இணைகிறார்கள். அவர்களின் வருகைக்குப் பின்தான் இந்த நிலப்பகுதியின் மக்கள் வர்ணங்களாகப் பிரிக்கப்படுகிறார்கள்.

விஜயநகரப் பேரரசின் குமார கம்பனன் காலத்தில் தொடங்கி நாயக்கர் ஆட்சிக்காலம் வரை தொடர்ச்சியாகத் தெலுங்கு பேசும் பல்வேறு பிரிவினர் இந்த நிலத்தில் குடியேறுகிறார்கள். இவர்கள் இடையர்களாகவும் போர்வீரர்களாகவும் பல்வேறு தொழில் புரிகிறவர்களாகவும் உள்ளனர். மதுரையில் கணிசமான ஜனத்தொகையில் இவர்கள் வாழ்கிறார்கள்.

பெனுகொண்டா கோட்டைப் பகுதியிலிருந்து கன்னடம் பேசும் மக்கள் போர்க்காலத்தில் இந்த நிலப்பகுதிகளுக்கு இடம் பெயர்கிறார்கள். ராஷ்டிரகூட அரசர்கள் மற்றும் நுளம்ப பல்லவ வேந்தர்கள் காலத்திலும் கன்னடம் பேசும் மக்கள் இந்த நிலப்பகுதிக்கு இடம்பெயர்கிறார்கள். உழவு, நெசவு உள்ளிட்ட பல தொழில்களில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் இங்கே வந்து நெடுங்காலம் ஆகிவிட்டதால் அவர்கள் இங்கே எல்லாத் தொழில்களிலும் கலந்துவிட்டனர். தமிழர்களாகவே உருமாற்றம் பெற்றுவிட்டனர்.

சங்ககாலம் தொட்டே அரேபிய வர்த்தகர்கள் தொண்டி மற்றும் முசிரிஸ் வழியாக மதுரைக்கு வந்தார்கள், அவர்கள் இந்த நிலத்திற்குத் தங்களின் நாவாய்களில் குதிரைகளை, வாசனைத் திரவியங்களை, கண்ணாடி சீசாக்களைக் கொண்டு வந்தார்கள், வர்த்தகம் செய்து வந்த அவர்களில் பலர் இங்கேயே தங்கிவிட்டனர். வர்த்தகத்திற்கு வந்த ரோம நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கே தங்கியிருந்த ரோமச்சேரி இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதன்பின்னர் இஸ்லாமிய சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் மதுரைக்கு இடம்பெயர்ந்தார்கள். இன்றும் கிளாஸ்காரத் தெரு, காஜிம்மார் தெரு, மகபூப்பாளையம், கோரிப்பாளையம், இஸ்மாயில்புரம் பகுதிகளில் மிகுதியாக வசிக்கிறார்கள், நகரத்தின் பிற பகுதிகளிலும் வசிக்கிறார்கள். அவர்கள் தமிழ் வாழ்வியலின் அங்கமாகவே திகழ்கிறார்கள்.

மராத்திய மன்னர்கள் மதுரை மற்றும் தஞ்சையை ஆண்ட காலத்தில் மராத்தியர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தப் பகுதிக்கு இடம்பெயர்ந்தார்கள். நகை செய்யும் தச்சர்களாகவும் போர் வீரர்களாகவும் வந்த இவர்கள் இன்று பல்வேறு துறைகள் நோக்கிச் சென்றுவிட்டனர்.

1920ல் ஒரு ஆங்கிலோ இந்திய அம்மா - மகள்
1920ல் ஒரு ஆங்கிலோ இந்திய அம்மா - மகள்
கிழக்கிந்திய கம்பெனியின் காலத்தில் ஆங்கிலோ இந்தியர்கள் (Anglo-Indians) என்கிற ஒரு புதிய சமூகம் இங்கே உருவாகிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த ஐரோப்பிய ஆண்களுக்கும், இந்தியத் துணைக் கண்டத்துப் பெண்களுக்கும் திருமண உறவினால் பிறந்த கலப்பின மக்களாக இவர்கள் திகழ்கிறார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் வேலைகளில் ஈடுபட ஐரோப்பியவர்கள் படை படையாக வந்திறங்கினர். ஒரு காலத்தில் ஒட்டுமொத்த ரயில்வே துறையும் ஐரோப்பியர்களால் நடத்தப்பட்டது.

கல்வி நிலையங்கள், இந்திய இரயில்வே துறை, அஞ்சல் துறை, சுங்கம் மற்றும் கலால் துறை, வனத்துறை போன்றவற்றில் பெரும்பாலும் பணிபுரிகிறார்கள். மதுரையில் ஆங்கில மொழி, மேற்கத்திய இசை மற்றும் நடனம் கற்றுத்தருவதில் ஆங்கிலோ இந்தியர்கள் செல்வாக்குடன் இருந்தார்கள். அதேபோல் மதுரை முழுவதும் விளையாட்டுப் பயிற்சியையும் ஆங்கிலோ இந்தியர்கள்தான் அளித்தார்கள். மதுரை ஆங்கிலோ இந்தியர்கள் நான்கு பேர் (Adolphus Clade, SmithKalvin D Cruz, Ashely Cleur, Neville Rozario) இந்திய ஹாக்கி அணியில் சர்வதேச அளவில் விளையாடியிருக்கிறார்கள்.

ஹலாய் மேமோன் சமூகம் மதுரை முழுவதும் உள்ள பெரிய ஜவுளித் தொழில்களில் ஈடுபட்டுள்ள சமூகம். பாகிஸ்தானின் சிந்துப் பகுதியிலிருந்து குஜராத்தின் கத்திவார்ப் பகுதிக்கு இடம்பெயர்ந்தார்கள். குஜராத்தில் கத்திவார்ப் பகுதியிலிருந்து இவர்கள் மதுரைக்கு இடம்பெயர்ந்தார்கள், இவர்கள் உறவினர்கள் தமிழகத்தின் பல ஊர்களில் வசித்துவருகின்றனர். இவர்கள் பேசும் வட்டார மொழி வழக்கில் சிந்தி, கட்சி, உருது, அரபி, குஜராத்தி என அனைத்து மொழி வார்த்தைகள் உள்ளன.

1878-ல் இவர்கள் மதுரைக் கீழச்சித்திரை வீதியில் ஹாஜீமுசா என்கிற ஜவுளிக் கடையைத் தொடங்கினார்கள். மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள கூட்டுறவுக் கடைகள் மற்றும் தென்னிந்திய ரயில்வேயின் மொத்த ஜவுளித்தேவைகளையும் இவர்களே பூர்த்திசெய்தார்கள்.

கீழச்சித்திரை வீதி ஹாஜீமூசா ஜவுளி கடை அல்ல கடல்
கீழச்சித்திரை வீதி ஹாஜீமூசா ஜவுளி கடை அல்ல கடல்

இரண்டாம் உலகப்போர் காலத்தில் உலகம் முழுவதுமே ஜவுளிகளுக்குப் பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தை ‘control period’ என்றே அழைப்பார்கள், வெளிநாட்டிலிருந்து வரும் துணிகள் முதலில் ராணுவத்திற்குத் தான் வழங்கப்படும், துணி வாங்க இந்தியா முழுவதும் மக்கள் வரிசை கட்டி நின்றார்கள், ஒவ்வொருவருக்கும் அளவாகவே துணிகள் வழங்கப்பட்ட காலம் அது. மதுரையிலும் துணிக்குக் கடுந்தட்டுப்பாடு நிலவிவந்தது. இந்தி, குஜராத்தி, உருது மொழிகள் அறிந்த மேமோன் சமூகத்தவர்கள் ஜவுளிகளின் மெக்காவாகக் கருதப்பட்ட மும்பையில் தங்களின் செல்வாக்கான தொடர்புகளை வைத்து ஜவுளிகளை மதுரைக்கு வாங்கி வந்து அப்படியான தட்டுப்பாட்டுக் காலங்களிலும் கிடைக்கச் செய்தார்கள். மதுரை மக்கள் இவர்கள் கடைகளில் முன்பு நீண்ட வரிசைகளில் நின்று துணிகளை வாங்கியிருக்கிறார்கள், அந்தக் காலகட்டத்தில் இவர்கள் கடைகளில் மட்டுமே துணி கிடைத்துள்ளது.

க்ளாக்ஸ்கோ மல்லு, மேட்டூர் மில் காடா, கோவில்பட்டி லாங் கிளாத் எனப் பல துணி வகைகளின் மொத்தக் கொள்முதல் இவர்கள் வசம் இருந்தது. மதுரைத் தெற்குமாசி வீதி, விளக்குத் தூண், மஹால் வடம்போக்கித் தெரு, டவுன் ஹால் ரோடு, கீழச் சித்திரை வீதி எனப் பல பகுதிகளில் ஜவுளி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்கள். இன்றும் மதுரையில் இருக்கும் பள்ளிகள் முதல் தொழிற்சாலைகள் வரை அனைத்திற்குமான சீருடைகளின் துணிகளும் அதைத் தைத்துக்கொடுக்கும் தொழிலையும் செய்து வருகிறார்கள்.

அபினிப் போர்கள் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் சீனக் குடும்பங்கள் பல பர்மா வழியாக இடம் பெயர்ந்து சென்னை வந்தடைகிறார்கள். தமிழகத்தில் பல ஊர்களில் சென்று சீனர்கள்தான் முதல் முதலாகப் பல் மருத்துவத்தைத் தொடங்கினார்கள். மதுரையில் மருத்துவர் ஹூ சின் பா-வை அறியாதவர்கள் இருக்க முடியாது, டவுன் ஹால் ரோட்டின் அடையாளங்களில் ஒன்றாக அவர் திகழ்ந்தார். ஹூ சைனீஸ் டெண்டல் கேர் என்று அவரின் பேரன்கள் இன்றும் மதுரை அரசரடியில் பல் மருத்துவமனை நடத்திவருகிறார்கள். இந்தச் சீனர்கள் முற்றாகத் தமிழர்களாகவே உருமாற்றம் அடைந்துவிட்டனர்.

கிழக்கு இராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த மார்வாடி மக்கள் மார்வாரி மொழி பேசுகிறார்கள். மார்வாரி மொழி இராஜஸ்தானி மொழியோடு நெருங்கிய தொடர்புடையது. வணிகத்தில் அதீத ஈடுபாடு கொண்ட மார்வாடிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல தெற்கு நோக்கி வந்தனர், ராஜஸ்தான் பகுதிகளில் தொடர்ந்து படையெடுப்புகள் நிகழ்ந்ததால் மெல்ல மெல்ல அவர்கள் இந்தியா முழுவதுமே இடம்பெயர்ந்தார்கள். வறண்ட பாலைவனப் பகுதியைச் சேர்ந்த மார்வாடிகள் செழிப்பைத் தேடியே மதுரைக்கு இடம்பெயர்கிறார்கள்.

சீன - பிரித்தானிய அபினிப் போர்கள்
சீன - பிரித்தானிய அபினிப் போர்கள்
குஜராத்திகளும் மெல்ல மெல்ல மதுரைக்கு அலை அலையாய் இடம்பெயர்ந்தார்கள். மார்வாடிகள் மற்றும் குஜராத்திகள் வட்டிக்கு விடுதல், நகை அடகு பிடித்தல் (PAWN BROKING) என்று தொடங்கி இன்று அவர்கள் ஈடுபடாத வர்த்தகம் இல்லை என்கிற அளவிற்கு நகைக் கடைகள் முதல் பிளம்பிங், எலக்ட்ரிக்கல்வரை இவர்கள் இல்லாத தொழில்களே இல்லை எனச் சொல்லலாம்.

சௌராஷ்டிரர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிர தீபகற்பப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். கி.பி 1025 முதல் சௌராஷ்டிர தீபகற்பப் பகுதியை விட்டு வெளியேறி, தற்கால மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா எனப் பல மாநிலங்களில் தங்கிப் புலம்பெயர்ந்து, இறுதியாக மதுரை வந்தடைந்து இங்கே வாழ்ந்து வருகின்றனர். விஜயநகரப் பேரரசில் 1312-ல் குடியேறிய இவர்கள் அங்கிருந்து 1575-க்குப் பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். பிராகிருதம் மொழியை அடிப்படையாகக் கொண்ட சௌராஷ்டிரா என்கிற மொழியை அவர்கள் பேசினாலும் அந்த மொழியில் அவர்கள் இடம்பெயர்ந்த நிலங்களின் வார்த்தைகள் கொட்டிக் கிடக்கும், இவர்களது மொழியில் குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளுடன் இன்று தமிழ் மொழியும் மிகுதியாகக் காணப்படுகிறது.

சௌராஷ்டிர மக்கள் பட்டுச்சேலை, பட்டு வேட்டி, சரிகை வேட்டி, சுங்குடி சேலை நெய்பவர்களாக இருக்கிறார்கள், மதுரையில் அவர்களைப் பட்டு நூல்காரர்கள் அல்லது சவ்வு என்றே மக்கள் அழைப்பார்கள்.

நடிகை எம். என். ராஜம்
நடிகை எம். என். ராஜம்

பருத்தி நூல், சாயப் பவுடர் விற்பனையாளர்களாகவும், சாயப்பட்டறைகளையும் செளராஷ்டிரா மக்கள் நடத்திவந்தனர். இப்பொழுது பல தொழில்களுக்கு மாறிவிட்டனர். இராயல் டாக்கீஸ் தயாரித்த சிந்தாமணி திரைப்படம் உள்ளிட்ட மதுரை செளராஸ்டிரா மக்கள் சினிமா எடுப்பதில் சில காலம் இருந்தனர், மதுரையில் பல சினிமா தியேட்டர்கள் அவர்களுக்குச் சொந்தமானவை. இன்றைக்கு மின்னனுவியல் பொருள்கள் விற்பனை முதல் புத்தகக் கடைகள் வரை இவர்கள் இல்லாத துறையே இல்லை.

எழுத்தாளர் எம். வி. வெங்கட்ராம்
எழுத்தாளர் எம். வி. வெங்கட்ராம்

நடிகை எம். என். ராஜம், எழுத்தாளர் எம். வி. வெங்கட்ராம், எழுத்தாளர் கோபி கிருஷ்ணன், நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் செளராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்தவர்கள். மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிராக்களில் உலகப் பிரபலம் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள். மதுரையில் பந்தடி, அனுப்பானடி, மீனாட்சி நகர், கிருஷ்ணாபுரம் காலனி, நிலையூர், மகாலட்சுமி காலனி, ஸ்ரீனிவாசா காலனி என நகரத்தின் பல பகுதிகளில் அவர்கள் வசிக்கிறார்கள்.

எழுத்தாளர் கோபி கிருஷ்ணன்
எழுத்தாளர் கோபி கிருஷ்ணன்

பஞ்சாபிகள் மதுரையில் நூற்றாண்டுப் பழைமையான உறவுகளுடன் வாழ்கிறார்கள். சென்ட்ரல் சினிமா அருகில் இருக்கும் பாப்ளி பிரதர்ஸ் முதல், அற்புதமான உணவுகளான ஆலு பராத்தா முதல் தந்தூரி வரை வழங்கும் பஞ்சாபி தாபா எனப் பல தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். 1947-ல் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் உருவான பிறகு பஞ்சாபிகள் இன்னும் பெரிய எண்ணிக்கையில் இடம்பெயர்ந்து வந்தார்கள்.

பாடகர் டி. எம். சௌந்தரராஜன்
பாடகர் டி. எம். சௌந்தரராஜன்

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தமிழர் வாழ்வியலை வாழ்நாள் எல்லாம் ஆவணப்படுத்தினார், புதுமண்டபத்தின் இஸ்லாமிய தையல் கலைஞர்கள் காலம் காலமாக இந்து கடவுள்களுக்கு உடை தைக்கிறார்கள், புட்டு தோப்பு திருவிழாவின் சடங்குகளை ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் தான் செய்கிறார்கள், செயின் மேரிஸ் தேவாலயத்திற்கு நூற்றுக்கணக்கான இந்துக்கள் செல்கிறார்கள், ஒட்டு மொத்த மதுரைக்காரர்களுக்கும் ஒரு காலத்தில் ஆங்கிலத்தை சரளமாக பேச ஆங்கிலோ இந்தியர் ஆசிரியர்களே கற்றுக்கொடுத்தார்கள், மதுரை நகரத்தில் குழந்தைகளுக்கு சுகமில்லை என்றாலும், நோய் வந்து குணமடைந்த குழந்தைகளையும் கூட மந்திரிக்க பள்ளி வாசல்களுக்கு அழைத்து செல்கிறார்கள் என மதுரையின் பன்மைத்துவ வாழ்வு இந்த உலகத்திற்கு ஒரு முன்னுதாரனமா வரலாறு நெடுகிலும் திகழ்கிறது.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன்
எழுத்தாளர் கி.ராஜநாராயணன்

இந்திய மண்ணின் மரபியல் அடிப்படையாக 'வேற்றுமையில் ஒற்றுமையே' வரலாறு நெடுகிலும் இருந்துள்ளது என்கிற உண்மையைத்தான் நமக்குக் கறிதோசையின் சுவை உணர்த்துகிறது. இந்திய மக்களின் மரபணுவை சோதனை செய்தால், அது 50 முதல் 65 சதவிகிதம் முதல் முதலாக இந்தியாவிற்குள் குடிபுகுந்த மரபணுவை ஒத்து இருக்கிறது. இங்கே சாதி, மதம், மொழி எனப் பல அடைமொழிகளுடன் மக்கள் பிரிக்கப்படலாம். ஆனால் எல்லோருமே ஒரு கலப்பின் உருவாக்கம்தான் என்பதை மரபியல் ஆய்வுகள் நமக்குச் சொல்லிய வண்ணம் உள்ளது.

இந்தக் கறி தோசையின் சுவைக்குக் காரணம் எது?
இந்தக் கறி தோசையின் சுவைக்குக் காரணம் எது?

மதுரையின் ஆகப்பெரிய பலமே இங்கே அலை அலையாய் வந்த மக்கள்தான். மக்கள் தங்களுடன் கொண்டு வந்த உணவு, தானியங்கள், கருவிகள், குதிரைகள், மாடுகள், தொழில்நுட்பங்கள், கட்டடக்கலை, திருவிழாக்கள் மற்றும் அவர்களின் அனுபவ அறிவு இந்த நிலத்தை மேலும் மேலும் மெருகேற்றவே உதவியிருக்கிறது. உலகத்தின் பெரு நகரங்களில் உள்ள பரந்து விரிந்த cosmopolitian தன்மையை நீங்கள் குறைவில்லாமல் மதுரையில் உணரலாம். இங்கே 2500 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரி குடியிருப்பு இருந்தது என்பது இந்த நிலத்தின் சிறப்புதானே. மதுரையை நோக்கி வரலாறு நெடுகிலும் உலகத்தவர்கள் ஈர்க்கப்பட்டார்கள், வருங்காலத்திலும் ஈர்க்கப்படுவார்கள், இந்த நகரம் இந்தப் பூமியில் மனிதர்கள் வாழும் வரை மக்களை ஈர்த்துக்கொண்டேயிருக்கும்.

உங்கள் முன்னால் தட்டில் ஒரு கறிதோசை வைத்துள்ளேன், அதை நீங்கள் சுவைக்கத் தொடங்குங்கள். அதில் உள்ள தோசை மாவு, கறி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, மல்லித்தூள், மிளகாய்த் தூள், பட்டை, சோம்பு, கிராம்பு, கறிமசால் பொடி, கொத்தமல்லி, கறிவேப்பிலையில் எது முதன்மையானது, எது இந்தக் கறிதோசையின் சுவைக்குக் காரணம் என்பதுவே கேள்வி!

நன்றி:

The Early Indians - Tony Joseph

The Untouchables : Who were they and why they Became - B.R.Ambedkar