ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ர்யூ மற்றும் ப்ராங்க் ஹார்வி சகோதரர்கள் பருத்தி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். 1883-ல் அம்பாசமுத்திரத்தில் பருத்தி நெசவுத் தொழிற்சாலையை (STEAM MILL) நிறுவினார்கள். அம்பை ஆலை தாமிரபரணியின் நீர் கொண்டு மின்சாரம் தயாரித்து அதிலிருந்து இயங்கும்படி வடிவமைத்தார்கள். அம்பாசமுத்திரத்தின் வெற்றி அவர்களை 1889-ல் தூத்துக்குடியில் இரண்டாவது ஆலையை (CORAL MILL) அமைக்க வித்திட்டது. தூத்துக்குடிக்குக் கடல் வழியே நிலக்கரியைக் கொண்டு வந்து அங்கே நிலக்கரியின் துணையுடன் மின்சாரம் தயாரித்து ஆலையை இயக்கினார்கள்.
கர்னல் ஜான் பென்னிகுவிக் பெரியாற்று அணையைக் கட்டிக் கொண்டிருக்கிறார், விரைவில் மதுரை நகரத்திற்குத் தண்ணீர் வந்துவிடும் என்ற தகவல் ஆண்ட்ர்யூ மற்றும் ப்ராங்க் ஹார்வி சகோதரர்களை எட்டுகிறது.

1892-ல் நீராவி கொண்டு இயங்கும் விதமாக பெரும் நூற்பாலையை இந்தச் சகோதரர்கள் மதுரையில் நிறுவும் வேலையைத் தொடங்கினார்கள். அதுதான் இன்றும் மதுரையில் பெரும் தொழில் புரட்சியின் தொடக்க முகவரியாகத் திகழும் ‘மதுரா மில்ஸ்’ (MADURA MILLS). பின்னாள்களில் இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய பஞ்சாலையாகவும், உலகின் மிகப்பெரிய பஞ்சாலைகளில் ஒன்றாகவும் கருதப்பட்டது.

மதுரையில் உள்ள இந்த ஹார்வி மில்லின் கட்டடத்தை பொறியாளர் சார்லஸ் ஹென்றி பாலார்டு கட்டினார். நீராவியால் ஓடக்கூடிய இப்பஞ்சாலை மதுரை ரயில் நிலையத்திற்கு நேர் பின்புறம் அமைந்திருந்தது. ரயில் நிலையத்திலிருந்து இருப்புப்பாதை ஆலையின் வளாகத்தினுள் சென்று மீள்வதாக நிறுவப்பட்டது. மதுரா மில்ஸின் பிரமாண்டமான பழைய கட்டடத்திற்கு முன்பாக நீராவி இயந்திரத்தின் மாபெரும் ஃப்ளைவீலை இன்றும் நீங்கள் காணலாம். இந்தப் பெரிய இரும்புச் சக்கரம்தான் மதுரா கோட்ஸ் மில்லின் அடையாளமாக நீண்ட காலம் மதுரை மக்களால் பிரமிப்புடன் பார்க்கப்பட்டது, இன்றும் பார்க்கப்படுகிறது.
மில் தொழிலாளர்களுக்கு என்று மதுரையின் ஆக நவீனமான குடியிருப்புப் பகுதி ஹார்விப்பட்டி என்கிற பெயரில் திருப்பரங்குன்றம் மலையின் தெற்காக அமைக்கப்பட்டது. மதுரை மில்லிலிருந்து செல்லும் ரயில் பாதை திருப்பரங்குன்றத்தைத் தாண்டி நேரடியாக ஹார்விப்பட்டி குடியிருப்புப் பகுதியின் அருகே நிற்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. ஹார்விப்பட்டியிலிருந்து மதுரா மில் வளாகத்திற்குத் தொழிலாளர்கள் செல்ல ஒரு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ரயில் மூன்று ஷிப்ட்டிற்கும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும். இது தொழிலாளர்களுக்கான இலவச ரயில் சேவை. இந்த ரயில் ஹார்விப்பட்டியிலிருந்து கிளம்பி திருப்பரங்குன்றம், பசுமலை ரயில் நிலையங்கள் வழியாக மதுரை ஜங்சனைக் கடந்து மதுரா கோட்ஸ் வளாகத்தை வந்தடையும். தென்னிந்தியாவின் மிக முக்கியமான ரயில் நிலையமாகக் கருதப்படும் மதுரைச் சந்திப்பில் (Madurai Junction railway station) நிற்காத ஒரே ரயிலாக இந்த ரயில் புகழ்பெற்று விளங்கியது.

பஞ்சகாலத்தில் மதுரை கடுமையாகச் சிரமப்பட்டது. இந்தச் சிரமங்களிலிருந்து விடுபட கைக்கு ஒரு வேலை வேண்டும் என்கிற பரிதவிப்புடன் மதுரை மக்கள் தவித்த நேரம் இந்தப் பஞ்சாலை பெரும் வாய்ப்புகளை உருவாக்கியது. பழைய மதுரை மாவட்டம் முழுவதுமிருந்து மக்கள் இந்த வேலைவாய்ப்புக்காக பிறந்த கிராமங்களை விட்டு, பிள்ளை குட்டிகளைப் பிரிந்து மதுரை நகரம் நோக்கி வந்தார்கள். இந்த வேலை வாய்ப்பைப் பெறுவதும், இதற்கான மேஸ்திரிகளைக் கண்டடைவதும் அத்தனை சுலபமான காரியமாக இருக்கவில்லை. மேஸ்திரிகளை கங்காணிகளைத் தேடிப்போக வேண்டும். அவர்கள் சொன்ன நேரம் அங்கு சென்று கைகளைக் கட்டி நிற்க வேண்டும். ஜாதியும் பணமும் வேலை கிடைப்பதற்கான முக்கிய காரணிகளாக மாறின.
ஆண்- பெண் தொழிலாளர்களுடன் பத்து பன்னிரண்டு வயதுச் சிறுவர்கள் வரை ஆலையில் தொழிலாளர்களாகப் பணியாற்றினார்கள். வார விடுமுறைகள் என்றால் என்ன என்பதை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை. உணவுக்குக்கூட போதிய இடைவேளை கிடையாது. ஊதியமும் மிகவும் குறைவு. குடும்ப வேலைகளுக்காக விடுமுறை எடுத்தால் அதற்கும் ஊதியம் மறுக்கப்படும். அத்துடன் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய தொழிலாளார்களுக்கு வேலையும் மறுக்கப்படும். மேஸ்திரிக்கு மறைமுக லஞ்சம் கொடுத்துதான் மில்லுக்குள் நுழைய வேண்டும்.
வேலை நேரம் என்கிற வரைமுறைகள் அன்று இருந்திருக்கவில்லை. காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை தொழிலாளர்கள் பஞ்சாலையில் வேலை செய்தனர். ‘ரேகை பார்த்து ஓட்டுதல்’ என்ற சொல்லால் வேலையின் தொடக்கமும் முடிவும் குறிப்பிடப்பட்டது. உங்கள் உள்ளங்கை ரேகை தெளிவாகத் தெரியும் நேரத்தில் வேலையைத் தொடங்கி அதனைப் பார்க்க முடியாத அளவில் ஒளி மங்கும் நேரத்தில் வேலையை முடிக்க வேண்டும் என்பதே ‘ரேகை பார்த்து ஓட்டுதல்’ என்ற சொல்லின் அர்த்தம்.
தொழிலாளர்கள் செய்யும் சிறு தவறுகளுக்குக்கூடக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. பிரம்படியும் அதனால் எழும் அலறலும் பல டிபார்ட்மென்டுகள் தாண்டியும் கேட்குமாம். வெள்ளைக்கார அதிகாரிகள் ஆலையினுள் வரும்போது குறுக்கே கடந்து சென்றாலும் அடியும் உதையும் கிடைக்கும் என்கி்றார் ஆய்வாளர் அ.சிவசுப்பிரமணியன்.

பெண் தொழிலாளர்களுக்குக் குறைந்த சம்பளமே கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு ரீலர், வைண்டர் மற்றும் கழிவுகள் அகற்றும் வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டன. மேஸ்திரிகளின் பாலியல் சீண்டல்கள் மற்றும் சுரண்டல்களைச் சேர்த்துச் சமாளிக்கும் சூழல் அவர்களுக்கானதாக இருந்தது. பொதுவாக இந்த ஆலையில் வேலை செய்த பெண்கள் வீட்டை விட்டு 14-15 மணி நேரம் வெளியே இருக்கும்படியாக இருந்தது. ஒரே கட்டத்தில் இந்த மூன்று ஆலைகளிலும் கூட்டாக 27,000 தொழிலாளர்கள் பணியாற்றினார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு பெண் தொழிலாளர்கள்.
1908-ல் இந்திய பேக்டரி கமிசன் வேலை நேரம் தொடர்புடைய பரிந்துரைகளை வகுத்துத் கொடுத்தது. அதிலும் குறிப்பாக பெண் தொழிலாளர்களின் வேலை நேரங்கள் தொடர்பாகப் பல கட்டுப்பாடுகளை முன்வைத்தது. 1911-ல் இந்திய பேக்டரி சட்டம் பெண்களை காலை 5 மணி முதல் மாலை 7 மணிக்குள்தான் வேலை வாங்கலாம், பெண்களை இரவு நேர ஷிப்டுகளில் இனி ஈடுபடுத்தக் கூடாது என்றது. அடுத்து 1922-ல் வெளிவந்த தொழிலாளர் சட்டம் பெண்களையும் குழந்தைகளையும் கனரக வேலைகள் மற்றும் ஆபத்தான பணியிடங்களில் ஈடுபடுத்தக்கூடாது என்று பரிந்துரைத்தது.

பொதுவாகவே ஹார்வி சகோதரர்களின் மில்களில் தொழிற்சங்கங்கள் அறவே கிடையாது, ஆனால் நெருக்கடிகள் அமைப்புகளுக்கு வழிவகுக்கும்தானே. நிர்வாகம் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்த சங்கமும் போராட்டங்களும் அவசியமாக மாறின. 1917-ல் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி வெடித்ததும் அது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1918-ல் மதுரா கோட்ஸ் ஆலையில் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. இந்த உருவாக்கத்தில் ஜார்வ் ஜோசப் முக்கியப் பங்காற்றினார். சம்பள உயர்வு, வேலைநேரக் குறைப்புக்காக 1919-ல் புகழ்பெற்ற மதுரா மில் வேலை நிறுத்தம் தன்னெழுச்சியாக வெடித்தது. அடுத்து 1920 ஏப்ரல் 22 முதல் ஜூன் 1 வரை மதுரா மில் ஸ்டிரைக் நடைபெற்றது. வேலை நேரக்குறைப்பு தொடங்கி மேஸ்திரிகளின் ஆதிக்கம் வரை பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றது. இந்த எல்லாப் போராட்டங்களிலும் பெண்கள் முக்கியப் பங்காற்றினார்கள்.
இந்தக் காலகட்டத்தின் காட்சிகளையெல்லாம் பஞ்சந் தவிர்க்கவந்த பஞ்சாபீஸ் பரிமளச்சிந்து என்கிற நூல் விரிவாகப் பதிவு செய்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர் வெள்ளியம்பல வித்வான் சந்தச்சரபம் ஷண்முகதாஸ், இசை நாடக மரபில் ராஜபாட் நடிகராக விளங்கியவர். இசை, நாடகம், எழுத்திலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

இந்தப் பனுவல் இயந்திரங்களைப் பற்றியும் அதன் பேரளவு, வேகத்தைப் பற்றியும் பேசியது, தொழிற்துறைப் பண்பாட்டைப் பற்றிப் பேசியது, இப்படி ஒரு புதிய நடைமுறையை எதிர்கொள்ளும் முதல் தலைமுறையினரின் மனநிலையைக் குறித்துப் பேசியது. அந்த ஆலையில் உலவிய இஞ்சின்துறை பற்றியும் தொழிலாளர்களை வேலை வாங்கும் தாடி துறை பற்றியும் விவரித்தது. இந்த ஆலைகளில் ஒரு வித சிறைப்பண்பு இருந்ததையும் இந்தப் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த ஆலைகளில் தொழிலாளர்களின் மீது விழும் பிரம்படி பற்றிய குறிப்புகள் உள்ளன. அண்டி விழுதுண்ணு/அடிக்கிறானே சூசைமுத்து/அடிபொறுக்க முடியாமல்/ஓடுறாளே தெங்கமலம் கடற்கரைக்கு என்கிற ஒரு பாடல் அடிபொறுக்க முடியாமல் தொண்டிக் கடல் நோக்கி ஓடிக் கடலில் விழும்படியாக விழும் பிரம்படிகளைப் பற்றி விவரிக்கிறது.
மதுரா மில் தொழிலாளியான எஸ்.பெருமாள் கோனார் அவர்கள் இந்த ஆலைத்தொழிலாளிகளின் அவல வாழ்க்கையைப் பாடல்களாக வடித்திருக்கிறார். புதிய தொழில்முறைமைகள் தொழிலாளியைப் பிழிந்து எடுப்பதை அவரது பாடல்களில் சித்திரித்துள்ளார்.

சைடு மேஸ்திரி எசக்கி பிள்ளையை எப்பொழுதும் இன்பத்துடன் பார்க்கணும், சரியாக நடக்கணும், அவர் சந்திலே பொந்திலே கண்டவுடன் சரணங்கள் செய்யணும், அரி எடுக்கிற பாண்டிக்கு நாங்கள் அடங்கியே போகணும், அவர் அறிவிக்கும் வேலைகளை நாங்க அன்புடனே பார்க்கணும், சுத்திப் பாக்குற சுந்தராசுக்கு சொல்லுப் பேச்சு கேட்கணும், உடம்புக்கு சோம்பேறித் தனமில்லாமல் சுறுசுறுப்பாய் பார்க்கணும், அதிகாலையில் எந்திரிச்சி அவசரமாய்ப் போகணும் அங்கே அசந்து மசந்து இருந்துட்டா அப்சண்ட்டு ஆகணும் வேலைக்குப் போகும்போது வில்லையத்தான் போடணும் என்று ஒரு நாள் மில் வாழ்க்கையை அப்படியே துள்ளியமாக விவரிக்கிறது அவரது பாடல்.
பஞ்சாபீஸ் காசு வந்து பஞ்சுபோலப் பறக்குது, பறக்க பறக்கப் பாடுபட்டுப் பாதி ஒடம்பாய் இருக்குது, அதிகாலையிலே எந்திரிச்சா அடுப்புலே கோழி தூங்குது, அருமையாகப் பெத்தபுள்ள ஆப்பத்துக்கு ஏங்குது, காலையிலே எந்திரிச்சா கஞ்சிக்குப் போட உப்பில்லை, நாங்க கடிச்சுக்கிற தொட்டுக்கிற காய்கறிகளும் ஒண்ணுமில்லை. பஞ்சாலைத் தொழிலாளர்களின் அவல வாழ்வை இந்தப் பாடல்கள் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.
பஞ்ச காலங்களில் கிராமங்களிலிருந்து மில் வேலைக்கு வருவதும் பஞ்சகாலம் முடிந்ததும் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிடவே அவர்கள் மனம் ஏங்கியது. அவர்களின் நிலம், ஊர், உறவினர்கள், நண்பர்கள், திருவிழாக்கள் என எல்லாவற்றையும் விட்டு நகரத்தில் வேலை செய்வதை அவர்கள் பெரும் துயராகவே கருதினார்கள் என்பதும் சில பாடல்களில் வெளிப்படுகிறது.
ஒரு புதிய பணியிடத்தை அவர்கள் முதல் முதலாகப் பார்க்கும் வியப்பு, ஆனந்தம், அதிசய உணர்வும் பஞ்சாபீஸ் பரிமளசிந்தில் வெளிப்படுகிறது. ஆலையின் கட்டடம் விரிவாக வர்ணிக்கப்படுகிறது. அதைக் கட்டுவதில் பயன்படுத்தப்பட்ட கல், இரும்பு, கண்ணாடி ஆகியவைகூட இந்தப் பாடல்களில் இடம் பெறுகின்றன. ஆலையின் உள்ளே இருக்கும் இயந்திரங்கள், அவற்றில் மும்முரமாய்ப் பணியாற்றும் தொழிலாளர்கள், பெரும் வலையின் பேரளவிலான தானியக்கத்தை அதிசயித்துப் பார்க்கும் தொழிலாளர்கள் இந்தப் பாடல்களில் இடம்பெறுகிறார்கள்.
ஒரு விவசாயி தொழிலாளியாக மாறும் போது ஏற்படுகிற மனநிலையையும் இந்தப் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவர்களின் வாழ்வில் சங்கொலி எனும் ஒரு புதிய ஒலி எப்படி ஒரு ஒழுங்கைக் கொண்டு வருகிறது என்பதையும் இப்பாடல்கள் மீண்டும் மீண்டும் வழியுறுத்துகின்றன. காலையில் வேலை தொடங்குகிற நேரத்தின் அழைப்புகள், இரண்டாம் மூன்றாம் அழைப்புகள், மதிய உணவு நேரத்தை அறிவிக்கும் ஒலி, மதியம் உணவு நேரம் முடிந்ததை அறிவிக்கும் ஒலி, மாலையில் வேலை முடிந்ததை அறிவிக்கும் ஒலி என இரவில் வீட்டிற்கு வந்து உறங்கும் தொழிலாளிகூட மீண்டும் ஒரு அழைப்பால் எழுப்பப்படுவது வரை ஒலிகளின் பெரும் தொகுப்பாக இந்தப் பாடல்கள் திகழ்கின்றன.
இந்த இயந்திரங்களிலிருந்து வியர்வை வரும்படியாக தொழிலாளர்கள் வறுத்தெடுக்கப்படுகிறார்கள் என்கிற வரிகள் இந்தப் பாடல்களின் உச்சம் எனலாம், தங்களின் மீது நிகழ்த்தப்படும் சித்ரவதைக்கு இந்த இயந்திரங்களே சாட்சி என்கிற இடம் உழைப்பு பற்றி எழுதப்பட்ட இந்த உலகின் ஆகச்சிறந்த வரிகளில் ஒன்று. மனிதமயமாக்கப்பட்ட இயந்திரமும் இயந்திரமாக மாற்றப்பட்ட தொழிலாளியும் என எப்படி ஒரு புதிய இயந்திர நாகரிகத்திற்குள் மதுரையில் தொழிலாளர்கள் உருமாற்றம் அடைந்தனர் என்பதற்கு இந்தப் பாடல்களின் சொற்களே சாட்சி.
மதுரை மில் அருகே இருக்கும் ரயில்வே கேட்டைத் தாண்டினால் மதுரா தொழிலாளர் பள்ளி. இந்த ரயில்வே கேட்டை தினசரி 12,000 தொழிலாளர்கள் எப்படிக் கடந்து வந்தனர் என்பதைப் பற்றி இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதே போல் மில் வளாகத்தில் உள்ள நீராவிக் களனில் இருந்து வெளியாகும் வெந்நீர் ஒரு வாய்க்காலில் அங்கிருந்து கிளம்பி ஆரப்பாளையம் புட்டுத் தோப்பு நோக்கிச் செல்லும். இந்த வாய்க்கால் உள்ள சாலைக்கு சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு என்று பெயர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஷிப்ட் முடிந்ததும் அந்த வெந்நீரில் அலுப்பு தீரக் குளிப்பது தினசரி நிகழ்வுகளில் ஒன்று. 1960களில் மின்சாரம் வந்தவுடன் இந்த நீராவி இயந்திரம் நிறுத்தப்பட்டு வெந்நீரும் காணாமல்போனது.

பசுமலையின் உச்சியில் பஞ்சாலையின் இயக்குநருக்கான குடியிருப்பு உருவாக்கப்பட்டது. மதுரை கோட்ஸ் ஆலைக்கு அருகே தொழிலாளர்களின் ஆண் குழந்தைகளுக்கான மதுரா லேபர் வெல்ஃபேர் பள்ளியும் தொழிலாளர்களின் பெண் குழந்தைகளுக்காக மங்கையர்கரசி பள்ளியும் உருவாக்கப்பட்டன. அதேபோல் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு என விகாசா பள்ளி பசுமை மலை மீது கொஞ்சம் காலம் இயங்கியது. அதன் பின்னர் அதனை மதுரா மில்லுக்கு எதிரே உள்ள வளாகத்திற்கு மாற்றினார்கள். கோச்சடையின் அலுவலர்கள் குடியிருப்பும் அத்துடன் அதிகாரிகளுக்கான க்ளப்பும் தொடங்கப்பட்டன.
மதுரா மில் பல போராட்டங்களுக்குப் பின்பு நல்ல ஊதியம் மற்றும் தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒரு முன்மாதிரி நிர்வாகமாக உருமாறியது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் தொழிலாளர்களுக்கு ஆலையின் பங்குகள் விற்கப்பட்டு அவர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுக்கப்பட்டது. ஒரு காலகட்டத்தில் மதுரை நகரத்திலேயே அதிகப்பட்சமாக சம்பளம் வாங்கும் தொழிலாளர் வர்க்கமாக இந்த மில் தொழிலாளிகள் விளங்கினர். மதுரையில் ஒரு காலத்தில் அரசு ஊழியர்களைவிட மதுரா கோட்ஸ் ஊழியர்களுக்குத் திருமணத்திற்கு வரன் கிடைப்பது சுலபமாக இருக்கும் அளவிற்கு இந்த மில்லின் சம்பளமும் அதன் உத்திரவாதமும் மக்கள் மனதில் பெரும் நம்பகத்தன்மையாக இருந்துள்ளது. சம்பள நாளில் கைநிறையப் பணத்துடன் வெளியே வரும் தொழிலாளர்களுக்காக ஒரு பெரிய பஜாரே சாலையின் இரு புறங்களிலும் காத்திருக்கும். பீம புஸ்டி ஹல்வா முதல் ஒரு திருவிழா சந்தை போல மில் வாசல் காட்சியளிக்கும்.
மதுரை நகரத்தில் எந்த ஒரு பொருளும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் அது மதுரா கோட்ஸ் மில் வாசலில்தான் நடைபெற்றுள்ளது. மதுரையில் காபி அறிமுகமானது மதுரா மில் வாசலில்தான். முதலில் வேலையை விட்டு வெளியே வருபவர்களுக்கு இலவசமாக காபி குடிக்கக் கொடுத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் உணவு கொண்டு வரும் தூக்குவாளியில் தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு இலவசமாக காபி ஊற்றிக் கொடுத்திருக்கிறார்கள். அதன் பின்னர் மெல்ல காபித் தூள் விற்பனை செய்திருக்கிறார்கள். இந்தக் காபித்தூளை வாங்கிச் சென்று வீட்டில் போட்டால் அதே சுவையுடன் வரவில்லை, அதன் பின்னர்தான் காபியை வில்லை வடிவில் மாற்றி வந்து மீண்டும் காபி விற்பனையைத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படித்தான் மதுரையில் ஸ்டேன்ஸ் நிறுவனம் காபியை அறிமுகம் செய்தது.
மதுரா மில்கள் தையல் நூல்கள், கேன்வாஸ் துணி, தார்ப்பாய்கள், காடாதுணிகள் தொடங்கி பாராசூட்களின் குடைத் துணி வரை எண்ணற்ற நூல் மற்றும் துணி வகைகளைத் தயாரித்து வந்துள்ளார்கள். காலம்தோறும் தேவைகளுக்கு ஏற்ப இவர்கள் தயாரிப்புகள் மாறி வருகின்றன. இன்றும்கூட உலகின் புகழ்பெற்ற TETLEY தேயிலைப் பைகளில் உள்ள EDIBLE GRADE நூல்கள் மதுரையிலிருந்துதான் உலகம் முழுவதும் செல்கின்றன.
மில் வாயிலில் நீராவி இயந்திரத்தின் பெரும் சக்கரம் மட்டும் பழைய சாட்சியமாக நகரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சுடுதண்ணீர் ஓடிய வாய்க்கால் சுவடு இல்லாமல் மறைந்து விட்டது. ஏ.டி.எம் கார்டுகளின் வருகை சம்பள நாளில் வாசலில் இருந்த சந்தையை இல்லாமல் ஆக்கிவிட்டது. 12,000 மில் தொழிலாளர்களை நவீன இயந்திரங்களின் வருகை 1500ஆக குறைத்துவிட்டது. எது எப்படி இருப்பினும் தொழிற் புரட்சியின் வருகையை மதுரைக்கு அறிவித்த சாட்சியமாக மதுரையின் வரலாற்றில் எப்பொழுதும் முக்கிய இடத்தை வகிக்கும் ‘மதுரா மில்ஸ்.’
நன்றி:
பஞ்சந் தவிர்க்கவந்த பஞ்சாபீஸ் பரிமளச்சிந்து: வெள்ளியம்பல வித்வான் சந்தச்சரபம் ஷண்முகதாஸ் (பதிப்பு - பேராசிரியர் தொ.பரமசிவன் மற்றும் பேராசிரியர் சுந்தர்காளி)
வ.உ.சி. வாழ்வும் பணியும் - ஆ.சிவசுப்பிரமணியன்
வீரமுரசு சுப்பிரமணிய சிவா - பெ.சு.மணி