Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 17 | கோட்டை கொத்தளத்தின் கால்தடங்கள்!

தூங்காநகர நினைவுகள்
News
தூங்காநகர நினைவுகள்

திருமலை நாயக்கர் கட்டிய மகாலின் பெரும்பகுதியை அவரது பேரன் இடித்துவிட, மிச்சப் பகுதிகள் பாழடைந்து கிடந்தன. மதுரையைச் சுற்றிக் கட்டப்பட்ட 40 அடி உயரமுள்ள பிரமாண்ட கோட்டை எந்த நேரத்தில் இடிந்துவிழுமோ என்ற நிலையில் இருந்தது.

Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 17 | கோட்டை கொத்தளத்தின் கால்தடங்கள்!

திருமலை நாயக்கர் கட்டிய மகாலின் பெரும்பகுதியை அவரது பேரன் இடித்துவிட, மிச்சப் பகுதிகள் பாழடைந்து கிடந்தன. மதுரையைச் சுற்றிக் கட்டப்பட்ட 40 அடி உயரமுள்ள பிரமாண்ட கோட்டை எந்த நேரத்தில் இடிந்துவிழுமோ என்ற நிலையில் இருந்தது.

தூங்காநகர நினைவுகள்
News
தூங்காநகர நினைவுகள்

வரலாற்றின் எச்சங்களாக உலகம் முழுவதுமே கோட்டைச் சுவர்களை நீங்கள் காணலாம். ஒரு அரண்மனையைச் சுற்றிப் பாதுகாப்புக்காகக் கோட்டைச் சுவர்கள் கட்டுவது வழக்கம். ஒரு தலை நகரத்தைச் சுற்றிப் பாதுகாப்பு அரணாகக் கோட்டைச் சுவர்கள் எழுப்பப்பட்டதையும் வரலாற்றில் காண்கிறோம். இப்படியான சுவர்களைக் காண்பதற்குப் பள்ளிப்பருவத்தில் ஏங்கியிருக்கிறேன். மும்பையில் இருந்து பூனே அருகில் இருக்கும் பல கோட்டைகளுக்கு எங்களைப் பள்ளிச் சுற்றுலாவாக அழைத்துச் செல்வார்கள். இருப்பினும் புத்தகங்களின் வழியே என் மனதைக் கொள்ளைகொண்டு ஈர்த்தது சீனப் பெருஞ்சுவர் (Great Wall of China).

சீனப் பெருஞ்சுவர் (Great Wall of China)
சீனப் பெருஞ்சுவர் (Great Wall of China)

விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமியில் மனிதனின் உருவாக்கத்தில் ஒன்றை நாம் பார்க்க இயலும் எனில் அது சீனப் பெருஞ்சுவர் மட்டுமே என்கிற தகவல்தான் இந்தச் சுவரின் மீதான ஈர்ப்பிற்குக் காரணம். சீனப் பேரரசைக் காப்பதற்காகப் பல சீன அரச வம்சங்களால் கட்டப்பட்ட இந்தச் சுவர் கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. வெளியாட்கள் நுழைவதைத் தடுப்பதும் குறிப்பாக எதிரிகள் குதிரைகளை, ஆயுதங்களைக் கொண்டுவராமல் தடுப்பதுமே இந்தச் சுவரின் முதன்மை நோக்கம், எல்லாப் பெஞ்சுவர்களின் நோக்கமும் இதுவே.

இந்தியாவில் ஆக்ரா, அஹமதாபாத், அமராவதி, அமிர்தசரஸ், டெல்லி, ஹைதராபாத், ஜோத்பூர், ஜைசல்மேர், லக்நவ், ராய்கட், வாராங்கல், மோவ், சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல், திருமயம், நாமக்கல், சங்ககிரி, ஆத்தூர் எனப் பல இடங்களில் பெரிய பெரிய கோட்டைச் சுவர்களை வரலாற்றின் எச்சங்களாக நீங்கள் காணலாம்.

மதுரை ஒரு கோட்டை நகரம், ஒரு பெரும் கோட்டைச் சுவருக்குள் இருந்த நகரம். கோட்டைச் சுவர்களைக் காண்பது என்பதே வரலாற்றைக் காண்பதுதான். மதுரையில் இருந்து வடக்காகச் சென்றால் திண்டுக்கல் கோட்டை, கிழக்காகச் சென்றால் திருமயம் கோட்டை என எந்தக் கோட்டையைக் கடந்தாலும் அதனைக் கண்களில் இருந்து மறையும் வரை பேருந்தில் இருந்து பார்த்துப் பரவசம் அடைந்திருக்கிறேன். திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்குப் போகும்போதெல்லாம் என் கைப்பேசியை அணைத்து வைத்துவிட்டு செஞ்சிக் கோட்டைக்காகக் காத்திருப்பேன். ஹைதராபாத் செல்லும் போதெல்லாம் கோல்கொண்டா கோட்டையைப் பார்க்காமல் வந்ததில்லை, இவையெல்லாம் அரண்மனையைச் சுற்றிக் கட்டப்பட்ட கோட்டைகள், ஆனால், மதுரையில் மொத்த நகரமும் ஒரு கோட்டைக்குள்ளே இருந்தது.

தமிழ்நாட்டில் மட்டும் 92 பேரரசுக் கோட்டைகள், 8 சிற்றரசர்களின் கோட்டைகள், 18 பாளையக் காரர்களின் கோட்டைகள் உள்ளன. இவை தவிர சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை முதல் தரங்கம்பாடி வரை ஐரோப்பியர்கள் கட்டிய கோட்டைகள் என்று நாம் அவசியம் காணவேண்டிய வரலாற்றுத் தளங்களின் பட்டியல் வைத்திருக்க வேண்டும்.

13-ம் நூற்றாண்டில் பாண்டிய வேந்தர்கள் மதுரை நகருக்கு ஒரு கோட்டைச் சுவரைக் கட்டினார்கள், இந்தக் கோட்டைக்கு ஐந்து கோட்டை வாயில்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்க இலக்கியத்தில் மதுரையில் உள்ள கூடல் அழகர் பெருமாள் கோயில் கோட்டைக்கு வெளியே கிருதுமால் நதியின் கரையில் இருந்ததாக ஒரு குறிப்பில் வாசித்திருக்கிறேன். அப்படியெனில் பாண்டியர் கோட்டைக்கு வெளியேதான் கூடல் அழகர் கோயில் இருந்திருக்கிறது என்றால் இந்த எல்லைக்கு உள்ளேதான் பழைய கோட்டைச் சுவர் இருந்திருக்க வேண்டும். பாண்டியர் காலத்தில் இருந்த அந்தக் கோட்டைச் சுவர் எங்கே நின்றது, அதன் மிச்சங்கள் ஏதும் இனியும் உள்ளதா என்கிற கேள்வி மனதில் எழவே செய்தது.

இந்தத் தேடுதல் மதுரை அம்மன் சன்னதிக்கு அருகே இருக்கும் பெரும் நுழைவாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றது. அந்த ஐந்து கோட்டை வாயில்களில் ஒன்றுதான் விட்டவாசல். அந்த விட்டவாசல் சுவரில்தான் முனீசுவரர் காவல் தெய்வமாக இன்றும் காட்சி தருகிறார். விட்டவாசல் மண்டபத்தில் கல்வெட்டுக் குறிப்பு ஒன்று உள்ளது. அந்தக் கல்வெட்டுக் குறிப்பில், விட்டவாசல் மண்டபத்தை யாரும் அகற்றவோ, ஆக்கிரமிக்கவோ, மாற்றம் செய்யவோ கூடாது எனக் குறிக்கப்பட்டுள்ளது, இதனை 1935-இல் மதுரை நகர செயற்பொறியாளராக இருந்த ஜி. எப். பிலிப் நிறுவியிருக்கிறார். அப்படியெனில் இன்றைய ஆவணி மூலவீதிகளுக்கு சற்று வெளியேதான் கோட்டைச் சுவர் இருந்திருக்க வேண்டும். மதுரை ராஜா பார்லி பேக்கரிக்கு எதிரில் செல்லும் ஒரு தெருவின் பெயர் பாண்டியன் அகிழ் சந்து, நிச்சயமாக இந்த இடம் கோட்டைச் சுவர் இருந்த இடத்திற்கு வெளியே இருந்த பாண்டியன் காலத்தின் அகழியாக இருந்திருக்க வேண்டும் அது தூர்ந்துபோய் இன்று அந்த இடம் பாண்டியன் அகழித் தெருவாகவும் பின்னர் பாண்டியன் அகிழ் தெருவாகவும் மறுவியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

விஸ்வநாத நாயக்கர் காலத்தில் மதுரை நகரம் விரிவாக்கம் நடைபெற்றபோது பாண்டியன் காலத்துக் கோட்டைச் சுவர் இடிக்கப்பட்டது. நகரம் இன்னும் விரிவடைந்தது, 40 அடி உயரத்திற்குப் பெரிய கோட்டைச் சுவர் நான்கு வாயில்களுடன் 72 கொத்தளங்களுடன் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை மதுரை நகரத்தை வலுப்படுத்தியது, எதிரிகள் நுழைய முடியாத அளவிற்கு இதில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொலைதூரம் வரை பார்ப்பதற்கு வசதியான கண்காணிப்புக் கோபுரங்களும் இந்தச் சுவரில் ஆங்காங்கே இருந்தன. கோட்டைக்கு வெளியே மிகப்பெரும் அகழி இருந்துள்ளது, மதுரையில் இருந்த அகழி 5184 மீட்டர் சுற்றளவுடையது. இன்றும் அப்படியான அகழியை நீங்கள் வேலூர் முதல் தவுலதாபாத் வரை பல கோட்டைகளில் காணலாம்.

அந்த நேரம் மாசி வீதிதான் மதுரையின் ஆகப்பெரிய வீதியாக தேரோடும் வீதியாக இருந்துள்ளது. மாசி வீதிக்கும் கோட்டைச் சுவருக்கும் இடையே இருந்த நிலப்பரப்பில் வயல்வெளிகளும் தோட்டங்களும் புதர்க்காடுகளும் இருந்தன. உலகம் முழுவதும் உள்ள கோட்டைச் சுவர்களுக்கும் மக்களின் வசிப்பிடங்களுக்கும் இடையே உள்ள பகுதிகள் எதிரிகள் கோட்டையைத் தாண்டி நுழைந்துவிட்டால் போர் நடைபெறும் இடமாகவும் இருந்துள்ளன.

16-ம் நூற்றாண்டிற்குப் பின் மதுரையின் ஜனத்தொகை படிப்படியாக வளர்ந்தது, மெல்ல மெல்ல இந்த வயல்வெளிகள் எல்லாம் குடியிருப்புகளாக மாறின, ஒரு இடத்தில் நீங்கள் நீண்ட நாள் குடிசை போட்டுக் கொண்டால் அல்லது உங்கள் அனுபவத்தில் இருந்தால் அது உங்களுக்கு சொந்தமாக மாறும் வழக்கமும் இருந்தது. 1810ல் மதுரையின் ஜனத்தொகை கடுமையாக அதிகரித்திருந்தது, சுகாதாரக் கேடுகள் நகரின் முக்கிய பிரச்னையாக உருவெடுத்தது. ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் காலராவுக்கு 1500 பேர் பலியானார்கள். மதுரை நகரத்திற்குள் ஏராளமான மாடுகள் கூட்டம் கூட்டமாகத் திரியும், அந்த மாடுகளும் இந்த சுகாதாரக் கேட்டை இன்னும் அதிகப்படுத்தும் காரணியாக இருந்தது. 1837ல் மதுரை கோட்டைக்குள் மட்டும் 5000 குடும்பங்கள் வசித்தன. மதுரையில் எல்லா வீதிகளுமே ஆக்கிரமிப்புகளால் மூச்சுத் திணறியது. மதுரை மிகவும் இடைஞ்சலான, சாக்கடை நீர் தேங்கி நிற்கும் வீச்சமெடுத்த நகரமாக மாறியது. அகழியும் பெரும் துர்நாற்றம் வீசும் இடமாக மாறிப்போனது.

திருமலை நாயக்கர் கட்டிய மகாலின் பெரும்பகுதியை அவரது பேரன் இடித்துவிட, மிச்சப் பகுதிகள் பாழடைந்து கிடந்தன. மதுரையைச் சுற்றி கட்டப்பட்ட 40 அடி உயரமுள்ள பிரமாண்ட கோட்டை எந்த நேரத்தில் இடிந்துவிழுமோ என்ற நிலையில் இருந்தது. மதுரையின் ஜனத்தொகை 30,000 என்றால் திருவிழாக்களின் போது அது 60,000ஆக மாறும். ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும் போதும் ஒரு பெரிய மாட்டுச்சந்தையும் நடைபெறும், ஒவ்வொரு ஆண்டும் திருவிழா முடிந்த பின் நகரத்தில் சுகாதாரக் கேடுகள் பல்கிப் பெருகும்.

திருமலை நாயக்கர் மகாலின் சிதலமடைந்த பகுதிகள்
திருமலை நாயக்கர் மகாலின் சிதலமடைந்த பகுதிகள்

ஜான் பிளாக்பர்ன் 1834லிருந்து 1847வரை மதுரையின் கலெக்டராகப் பணியாற்றினார். இந்த வரலாற்று நகரத்தை இந்தக் கோட்டை ஒரு திரை போல் மறைக்கிறது என்று அவர் கருதினார். மதுரை நகரத்தில் இருக்கும் சுகாதாரக் கேடுகள் களையப்பட வேண்டும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று அவர் கருதினார். ஐரோப்பிய மறுமலர்ச்சி காலகட்டத்தில் அவர்கள் எல்லா நகரங்களையும் மறுஅமைவு செய்தது போலவே மதுரை நகரத்தையும் மறுஅமைவு செய்யத் தீர்மானித்தார்கள், ஜான் பிளாக்பர்ன் கைகளில் அந்த மறுஅமைவு வேலைகள் சமர்ப்பிக்கப்பட்டது. ஒரு வரலாற்று நகரத்தைத் தன் கைகளில் ஏந்துவது அவருக்கு அத்தனை சுலபமான காரியமாக இருக்கவில்லை. அன்றைய காலத்தில் இந்த நகரத்தில் பெரிய வரிவருவாய்களும் இல்லாததால், இந்தத் திட்டத்திற்கான நிதி திரட்டலும் அவருக்கு சிரமமாகவே இருந்தது.

கோட்டை இடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த பிளாக்பர்ன் இந்தத் திட்டத்திற்கான செலவுகளை முதலில் ஒரு பொறியாளர் மூலம் மதிப்பிட்டார், அவர் ரூ.15,000 எனத் தன் திட்டவரைவை கொடுத்தார். ஆனால் அரசோ கடும் நிதி நெருக்கடியில் இருந்தது. இந்தத் திட்டத்தில் இருந்தே பணம் திரட்டினால் என்ன என்கிற யோசனை பிளாக்பர்னுக்கு வந்தது. கோட்டை மற்றும் அகழி இருக்கும் இடத்தை விற்பனை செய்து அதில் இருந்து நகர விரிவாக்கத்திற்கான நிதியைப் பெறுதல் என்று முடிவு செய்தார். 1844ல் மதுரை மக்களிடம் இதற்கான அழைப்பை அவர் விடுத்த போது 660 பிளாட்டுகளுக்கு 696 பேர் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களுக்கான இடத்தை சர்வேயர் மாரட் அளவீடு செய்து கொடுப்பார், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் உள்ள கோட்டைச் சுவரை இடிப்பதும் அகழியை மூடும் பணிகளையும் அவர்களே செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளுடன் நிலம் வழங்கப்பட்டது. அதே நேரம் மதுரையில் சர்வேயர் மாரட்டுடன் இணைந்து கோட்டை இடிப்புப் பணிகள் முதல் புதிய கழிவுநீர் அமைப்பு, புதிய காவல்நிலையங்கள், கொத்தவால்சாவடிகள் ஆகியவற்றைக் கட்டும் பணிகளில் பெருமாள் மேஸ்திரி ஈடுபடுத்தப்பட்டார். அன்றைய நாளில் கூலிக்கு ஆட்கள் கிடைக்காததால் சிறைக் கைதிகள் இந்த விரிவாக்கப் பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டார்கள். மதுரை நகரத்தைச் சுற்றி 20 கிமி தூரத்திற்கு சாலைகளையும் சிறைக்கைதிகள்தான் போட்டார்கள்.

மதுரையின் நான்கு மாசி வீதிகளின் அகலம் 57 அடிகள் என்று முடிவு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வீதி விரிவாக்கம் செய்யப்பட்டது. பல கடைகள் பந்தல் போட்டு ஆக்கிரமிப்புகள் செய்து பாதையில் எல்லாம் பொருள்கள் வைத்திருந்தார்கள், இவற்றையெல்லாம் பிளாக்பர்ன் ஒழுங்கு செய்தார், தினசரி நகரத்திற்கு வந்து வேலைகளைக் கண்காணித்தார். நகரத்தின் மறுஅமைவில் பல சிக்கல்கள் எழுந்தன, எளியவர்களின் ஆக்கிரமிப்புகளுக்குத் தடைகள் இருக்கவில்லை ஆனால் செல்வந்தர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள். அது மட்டுமன்றி மதுரை நகரத்தில் இருந்த இடங்கள் எல்லாம் மறுஅமைவில் பல்வேறு நபர்களுக்கு ஒதுக்கும் போது பிராமணர்கள் மற்றும் செல்வாக்குள்ள ஜாதிகள் களத்தில் இறங்கின. இவர்களுடனான பேச்சு வார்த்தைகளின் முடிவில் கோயிலின் வடக்குப் பகுதிகள் பிராமணர்களுக்கும், வடமேற்கின் சில பகுதிகள் முதலியார்களுக்கும், வடக்கின் சில தெருக்கள் முழுமையாக செட்டியார்களுக்கும், திருமலை நாயக்கர் மகாலை ஒட்டிய பகுதியில் வசித்த சவுராஸ்டிரா சமூகத்திற்கு அந்த இடம் முழுமையாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டன.

பழங்கால மதுரை
பழங்கால மதுரை

மீனாட்சி அம்மன் கோயிலின் சுற்றுச்சுவருக்கு வெளியே இருக்கும் சித்திரை வீதிகளில்தான் நாட்டியக்காரர்கள், சிகை திருத்துபவர்கள் வசித்தார்கள். நாட்டியக்காரர்களில் பலர் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள், தாழ்த்தப்பட்டவர்களால்தான் பெரும் அசுத்தமும் சுகாதாரக் கேடும் ஏற்படுகின்றன, இவர்களை எல்லாம் இங்கிருந்து அகற்றினால்தான் நகரத்தை அழகுபடுத்த முடியும் என்று முடிவு செய்து கூண்டோடு நகரத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள். இதை எழுதும்போது எனக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பெயரால் இன்றும் எப்படி எளியவர்களைத் தூக்கி நகரத்திற்கு வெளியே வீசப்படுகிறார்கள் என்பது நினைவுக்கு வந்து செல்கிறது.

மதுரையின் புனிதமான மையப்பகுதியில் உள்ள 9837 சதுர அடி இடத்தில் பறையர்கள் வசிக்கிறார்கள். இவர்களையும் நகரத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. உடன் கோட்டைக்கு வெளியே வடக்கில் வைகை ஆற்றுக்கரையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதியில் இவர்கள் அனைவரும் குடியமர்த்தப்பட்டனர். இந்த 9837 சதுரடி இடத்தை உடனடியாக ஒரு பிராமணர் ரூ.805க்கு வாங்குகிறார்.

1844ல் பிளாக்பர்ன், திருமலை நாயக்கர் மகாலின் இடிந்திருந்த பகுதிகளில் உள்ள கற்களை அகற்ற சிலருடன் ஒப்பந்தம் செய்தார், அதில் மூன்றில் ஒரு பகுதியை நிர்வாகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். இதன் மூலம் 4,000 ரூபாய் அரசுக்குக் கிடைத்தது.

கொல்லர்களின் உலைகளில் இருந்து எழும் கரும்புகையால் கோயிலின் கோபுரம் பாழ்படுகிறது, இந்தப் பட்டறைகளில் இருந்து எழும் தீக்கங்குகளால் ஆங்காங்கே குடிசைகள் தீப்பிடித்து விடுகிறது என அவர்களும் ஏற்கெனவே ஊரை விட்டு வெளியே ஆற்றோரம் அனுப்பப்பட்டிருந்தார்கள்.

கோட்டை இடிப்பில் இருந்து கிடைத்த கற்களைக் கொண்டு அகழி மூடப்பட்டது. கோட்டை இருந்த இடத்திலும் அதற்கு வெளியே இருந்த அகழி மூடிய இடத்திலும் மூன்று சாலைகள் அமைக்க ப்ளாக்பர்ன் உத்தரவிட்டார். இந்தப் பணிகளில் முழுமையாக ஈடுபட்ட சர்வேயர் மாரட் (Marret) பெயரிலும் இந்தப் பணிகளைச் செய்து முடிக்கும் வேலைகளைப் பொறுப்பேற்ற பெருமாள் மேஸ்திரி (Perumal Maistry) பெயரிலும் இரண்டு வீதிகள் பெயரிடப்பட்டன. மதுரை நகருக்கு வெளியே அகழி இருந்த இடம் ஊருக்கு வெளியே இருந்ததால் அதனை வெளி வீதி என்றும் பெயரிட்டார்கள்.

கோட்டை இடிப்பில் மீந்துபோன கற்களைக் கொண்டு வைகை ஆற்றைக் கடந்து செல்ல கற்களால் ஒரு பாலம் அமைக்கப்பட்டது அதுவே இன்றளவும் கல்பாலம் என்று அழைக்கப்படுகிறது. இன்னும் மீந்துபோன கற்கள் இருந்தன. 45 ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கற்களைக் கொண்டு 1889ல் ஆல்பர்ட் பில் பாலம் எனும் பெரிய மேம்பாலம் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை இடிப்பு எனும் பெரும்பணிக்குப் பிறகுதான் பல தளங்களில் இந்த நகரம் எல்லா திசைகளிலும் வளர்ந்தது தடம் பதித்தது.

1847ல் ப்ளாக்பர்ன் தனது ஆட்சிப் பொறுப்பு முடிந்து மதுரையைவிட்டுப் புறப்பட்ட போது மதுரை மக்கள் அவரது பணிகளுக்காக ஒரு விளக்குத் தூணை நிறுவினார்கள். இன்றும் அந்த விளக்குத்தூணில் உள்ள கல்வெட்டில் “John Blackburne, esq., Principal Collector and Magistrate of Madura From 1834 to 1847,by - A grateful people.” என்று பொறிக்கப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம்.

மதுரை நகரத்தின் கோட்டையில் ஒரு சிறிய பகுதியையாவது இவர்கள் விட்டு வைத்திருக்கலாமே என்று நினைத்து ஏங்கியிருக்கிறேன். ப்ளாக்பர்ன் இந்த கோட்டை இடிப்பு பணிகளை செய்யும் போது ஏற்பட்ட காலரா தொற்றில் பலர் இறக்க அவசரமாக மேற்கு வாயிலை இடிக்காமல் அதனை அரசு மருத்துவமனையாக மாற்றினார். அது முதலே மருத்துவமனையாகவும், அரசின் நியாய விலைக்கடையும் இயங்கி வந்தது. சுகாதார பணியார்களின் அலுவலகமும் அங்கே இயங்கியது. இதே கோட்டை வாயிலின் தரைதளத்தில் 1942 முதல் பாரத் இலவசம் வாசக சாலை இயங்கி வருகிறது, இந்த கட்டடத்தின் தரைதளத்தின் வடக்கில் புகழ்பெற்ற துளசிராம் இட்லி கடை சமீபகாலம் வரை இயங்கி வந்தது. அன்று முதல் இன்றுவரை மேற்கு நுழைவாயில் மட்டும் இடிக்கப்படாமல் வரலாற்றின் சாட்சியமாக இந்த நகரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கோட்டையின் மேற்கு நுழைவாயிலில் உள்ள கல்வெட்டு
கோட்டையின் மேற்கு நுழைவாயிலில் உள்ள கல்வெட்டு
படம்: அருண் பாஸ்

மேற்குக் கோட்டைச் சுவருக்கு பசுமை நடையின் சார்பாகச் சென்று அதன் வரலாற்றைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறோம் இருப்பினும் என் மனதில் இருக்கும் ஒரே கேள்வி ஏன் இந்த மாநகராட்சி மருத்துவமனை இங்கிருந்து அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஒரு உலகத் தரத்திலான மதுரை நகர அருங்காட்சியகத்தை உருவாக்கக் கூடாது என்பதே.

கோட்டைச் சுவரில் பசுமை நடை
கோட்டைச் சுவரில் பசுமை நடை
படம்: அருண் பாஸ்

பஞ்சாபின் அம்ரித்சரஸ் இன்று எனக்கு விருப்பமான கோட்டை நகரம், பாகிஸ்தானின் லாகூருக்குச் சென்ற போது அவர்கள் இன்னும் இடிக்காமல் வைத்திருக்கும் லாகூர் நகரத்தின் கோட்டைக்குள் ஒரு இரவு முழுக்க காலார நடந்து திரிந்தேன். சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்குள்ளும் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தின் வரலாற்றுத் தெருக்களிலும் மனம் உருக உருக நடந்திருக்கிறேன், இப்பொழுதும் இந்தக் கட்டுரையை எழுதி முடித்து அங்காடி நாய்போல் அலைந்து திரிய என் நகரத்திற்குக் கிளம்புகிறேன்.

நன்றி:

An improbable reconstruction, the transformation of Madurai (1837-1847)-Anne Viguier

Madras District Gazetteer - Francis.W

Changing Form and Function in the Ceremonial and the Colonial Port City in India: An historical Analysis of Madurai and Madras - Lewandowsi Susan. J

Travels in Peru and India - C.R.Markham

புகைப்படங்கள்: அருண் பாஸ், ச.சரவணன், ரத்தின பாஸ்கர்